தரக்கட்டுப்பாடு... நிறுவனத்தின் உயிர்மூச்சு!

ஒரு பொருளை ஒருமுறை விற்பது மிக எளிது. ஆனால் ஒரு பொருளை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கு அந்தப் பொருள் தரமாக இருப்பது மிகவும் அவசியம்.
தரக்கட்டுப்பாடு... நிறுவனத்தின் உயிர்மூச்சு!
Published on
Updated on
2 min read


ஒரு பொருளை ஒருமுறை விற்பது மிக எளிது. ஆனால் ஒரு பொருளை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கு அந்தப் பொருள் தரமாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு நிறுவனத்தில் உருவாக்கப்படும் பொருள்கள் ஒவ்வொன்றின் தரத்தையும் ஆய்வு செய்து விற்பனைக்கு அனுப்பும்போதுதான் வாடிக்கையாளர்கள் அந்தப் பொருளின் தரத்தை உணர்ந்து அதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.

ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஒரே தர உத்திரவாதத்துடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்குத்தான் அந்நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு என்ற துறை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கக் கூடிய ஒவ்வொரு பொருள் அல்லது பயன்படுத்தக் கூடிய ஒவ்வொரு சேவை போன்றவற்றின் தரத்தை மதிப்பீடு செய்து உரிய தரத்தை நிலைநாட்டுவதுதான் ஒரு நிறுவனத்தில் உள்ள தரக்கட்டுப்பாட்டு பிரிவின் பணியாகும்.

ஒரு நிறுவனத்தில் உற்பத்தியைப் பொறுத்து, பொருட்களின் உற்பத்தி செயல்பாடுகளின் பல்வேறு கட்டங்களில் பொருளின் தரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மட்டுமல்ல, உற்பத்தியான பொருளின் ஒட்டுமொத்த தரம் எப்படி உள்ளது என்பதையும் அளவிடுவது, மதிப்பிடுவது எல்லாமும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் பணியாக உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க தரக்கட்டுப்பாட்டு துறைக்கு பணியாளர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தரக்கட்டுப்பாடு தொடர்பான விவரங்களையும், அதன் அடிப்படைக் கோட்பாடுகளையும் தெரிந்த ஒருவரால் எளிதாக எந்தவொரு உற்பத்தி மற்றும் சேவை நிறுவனத்திலும் பணியாற்ற முடியும்.

தரம் என்பது நிறுவனத்துக்கு நிறுவனம், பொருளுக்குப் பொருள், சேவைக்குச் சேவை மாறுபடும். தரக்கட்டுப்பாடு தொடர்பான கல்வியைக் கற்றுத் தருவதற்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

தரக் கட்டுப்பாடு மற்றும் செயல்முறைக் கட்டுப்பாட்டிற்கு பல்வேறு சான்றிதழ் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் . இதில், பகுப்பாய்வு , திட்டமிடல், தரக்கட்டுப்பாடு மற்றும் தரக்கட்டுப்பாட்டிற்கான அடிப்படை செயல்முறை, மேலாண்மை தத்துவம் போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

சிறப்பான குவாலிட்டி கண்ட்ரோலர் ஆக (தரக்கட்டுப்பாட்டு அலுவலராக) ஒருவர் செயல்படுவது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு துணை புரியும். நிறுவனத்திற்கும் சிறந்த தரத்துடன் கூடிய பொருளை உற்பத்தி செய்வதற்கு வழி காட்டக் கூடியவராக தரக்கட்டுப்பாட்டு பிரிவின் அலுவலர் இருந்தால் மட்டுமே, அந்த நிறுவனம் பெருமளவு வளர்ச்சி அடைய முடியும்.

இளநிலை மற்றும் முதுநிலை படிப்பாக , தரக்கட்டுப்பாடு படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொருள்களுக்கான உத்தரவாதம், தொழில் துறை பொறியியல், விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் தரமான ஒரு பொருளை எப்படித் தேர்வு செய்வது என்பது குறித்தெல்லாம் இந்த படிப்புகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

உற்பத்தி செய்யப்படும் பொருளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அதன் மூலம் தரக்கட்டுப்பாடு அமைப்பை எவ்விதம் கையாள வேண்டும் என்பதையும் இந்த படிப்புகள் கற்றுத் தருகின்றன.

பொதுவாக , தரமான பொருட்கள் மற்றும் தரமான சேவைகள், தயாரிப்பு வடிவமைப்பு , தொழில்கள் மற்றும் தொழில்துறையின் தரநிலைகள், தயாரிப்புகளை உருவாக்குதல், உருவாக்கிய பொருட்களை சந்தைப்படுத்துதல் என்பன போன்ற விஷயங்களையும் இந்த படிப்பு கற்றுக் கொடுக்கிறது.

ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட், புரொடக்சன் பிளானிங் அண்ட் கண்ட்ரோல், ஸ்டாட்டிஸ்டிகல் குவாலிட்டி கண்ட்ரோல், குவாலிட்டி கண்ட்ரோல் இன் பயோ டெக்னாலஜி, சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் என்பன போன்ற பிரிவுகளின் கீழ் தரக்கட்டுப்பாடு மேலாண்மை குறித்து படிப்புகள் உள்ளன.

இத்தகைய படிப்பின் மூலம், தரத்தைப் பாதிக்கும் நிறுவனரீதியான செயல்பாடுகள், தர நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள், மக்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கும், நிறுவனங்களின் உற்பத்தி தரத்திற்கும் உள்ள வேறுபாடுகள், அவற்றைச் சரி செய்யும் முறைகள், உற்பத்தி குறித்த திட்டமிடல்கள் , அதைக் கண்காணிப்பதற்கான வசதிகள், புள்ளியியல் தரக்கட்டுப்பாடு மூலம் மாதிரி தரக்கட்டுப்பாடு திட்டங்களை உருவாக்குவது, தயாரிப்பில் தர இழப்பு ஏற்படும்போது அதை எவ்வாறு கையாளுவது, உயிரித் தொழில்நுட்பம் மரபணு பொறியியல் மற்றும் உயிரி எரிபொருள் தொழில்நுட்பம், பராமரிப்பு செயல்முறைகளை ஆவணப்படுத்துவது , தயாரிப்பு மாசுபாட்டை அளவிடுவது மற்றும் முறையான வினியோக சங்கிலியைத் திட்டமிட்டு செயல்படுத்துவது என்பன போன்ற பல்வேறு தகவல்களை முழுமையாக இத்தகைய படிப்புகள் கற்றுக் கொடுக்கின்றன.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பிரிவைத் தேர்வு செய்து படித்தால் பெரிய நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராகப் பணிபுரியும் வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com