இணைய வெளியினிலே...

கடைசி மிடறு தண்ணீரைக் குடித்த கணத்தில்...அடுத்த மிடறு தண்ணீர் உலகில் எங்கு கிட்டும்? என்னும் அச்சத்தில் தொண்டை உலர்கிறது.
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....


கடைசி மிடறு தண்ணீரைக் குடித்த கணத்தில்...
அடுத்த மிடறு தண்ணீர் உலகில் எங்கு கிட்டும்? 
என்னும் அச்சத்தில் தொண்டை உலர்கிறது.

தமிழ்மணவாளன்

உரத்து பேசும் வரை உரைப்பதில்லை  நம் கோபம்...
பிறருக்கு.

நிறைமதி

வேண்டாமென்று வேகமாக கிளைகளை அசைத்தாலும்
வெட்டாமல் இருப்பதில்லை மனிதர்கள்...
மரம்.

பொன். குமார்

ஒவ்வொரு தினமும் யாராவது கை விடுகிறார்கள்.
ஒவ்வொரு தினமும் யார் கையையேனும்  பற்றிவிடுகிறேன்

வண்ணதாசன் சிவசங்கரன்

சுட்டுரையிலிருந்து...

"நாயா உழைக்கிறேன்'னு சொல்றாங்க. 
ஆனா பாருங்க... 
நாய் உழைக்கிறதே இல்ல.

குருநாதா 


அதிகமாக பேசுற வாயும்
ஓவரா குரைக்கிற நாயும் 
ஒரு நாள் அடி வாங்கியே தீரும்.

மணி அக்னி


"ஏன் பேசினோம்?' என்ற சூழ்நிலையும், 
"ஏன் பேசவில்லை?' என்ற சூழ்நிலையும் 
மாறி மாறி வாழ்க்கையில் வந்து  தொலைத்துக் கொண்டே இருக்கின்றன!

கோழியின் கிறுக்கல்

வாழ்க்கையில் சில திருப்பங்கள் கடுமையானவை தான்...
ஆனால் பாதையைத் தொடரணும்னா கடந்து தான் ஆக வேண்டும்.

பூபிகா

ஓர் எல்லைக்கு மேல் யாரையும் கட்டுப்படுத்தாதீர்கள்.
ஓர்  எல்லைக்கு மேல் யாருக்கும் அன்பைப் புகட்டாதீர்கள்.
இரண்டுமே எல்லை மீறினால் தொல்லை நமக்கு தான்.

அழகிய கவிதை


வலைதளத்திலிருந்து...

ரிமோட் கன்ட்ரோல் செயல்பாடு மனித வாழ்வில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது. இந்தப் பாதிப்பு நாம் உணரா வண்ணம் நிகழ்ந்துள்ளது.  

நாம் இயக்க நினைக்கும் பொருட்களை தொலைவிலிருந்தே உடனடியாக இயக்க ரிமோட் கன்ட்ரோல் பயன்படுகிறது. நமது நேரத்தை மிச்சப்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் நம்மை சோம்பேறியாகவும் மாற்றிவிட்டது. விசயம் அதுவல்ல. இந்த ரிமோட் கன்ட்ரோல் செயல்பாடு நம் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சி தரும் விசயம். 

நாம் பயன்படுத்தும் பலவிதமான ரிமோட்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது தொலைக்காட்சி ரிமோட் தான். தொலைக்காட்சி ரிமோட்டால் சண்டை வராத வீடுகளே இல்லை. ரிமோட் என்ன செய்கிறது? நாம் அமுக்கிய பட்டனுக்கு உரிய வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்து முடிக்கிறது. ரிமோட்டின் இந்த கேள்வி கேட்காத தன்மை, நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பொதுவாகவே  தனது செயல் குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்பதை மனிதன் விரும்புவதில்லை. ஆகவே, நமக்கு ரிமோட் மிகவும் பிடித்த பொருளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இதில் பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பொருட்கள் இயங்குவது போல் சக மனிதர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் சொல்படி இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறபோதுதான். 

தான் சொல்லும் வேலையைச் செய்யாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம். தான் கொடுத்த வேலை குறித்து கேள்விகள்  கேட்பதும் பிடிப்பதில்லை. தான் சொல்லும் வேலையை எந்தக் கேள்வியும் கேட்காமல் மற்றவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்ற மனநிலை சமூகத்தின் அனைத்து தளத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அரசுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடும்பங்கள் அனைத்திலும் இந்த ரிமோட் கன்ட்ரோல் மனநிலை பெருகியுள்ளது. குறிப்பாக குடும்பங்களில் கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ ரிமோட் போல இயக்க நினைப்பதாலேயே நிறைய 
பிரச்னைகள் வெடிக்கின்றன. 

இந்த ரிமோட் கன்ட்ரோல் மனநிலை நம்மை நாமே அழித்துக் கொள்ள மிகச் சிறந்த வழி. 

http://jselvaraj.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com