எப்போதும் படித்துக் கொண்டே இருக்காதீர்கள்! 

ஒரு மாணவராக/மாணவியாக இருப்பது அத்தனை சாதாரண விஷயம் அல்ல. கல்வி என்பது எளிதாக புகுத்தப்படும் கருவியும் அல்ல.
எப்போதும் படித்துக் கொண்டே இருக்காதீர்கள்! 

ஒரு மாணவராக/மாணவியாக இருப்பது அத்தனை சாதாரண விஷயம் அல்ல. கல்வி என்பது எளிதாக புகுத்தப்படும் கருவியும் அல்ல. கற்றல் ஆர்வத்தோடு கல்வியைப் பெறுவதே அதன் மீதான புரிதலையும் தன்னிறைவையும் தரும். அதுபோல கல்வி என்பதுபுத்தக அறிவை மட்டுமின்றி வாழ்க்கை முறைகளையும்கற்றுக் கொடுக்கிறது. தனிப்பட்ட திறன்களை வளர்ப்பதுடன்
தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.

ஆனால், கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அதன் மீது விருப்பம் இருக்கிறதா? அல்லது விருப்பத்துடன்தான் கல்வி கற்கிறார்களா? என்றால் இல்லை என்பதுதான் பதில். படிப்பதற்காக மட்டுமே தன் முழு நேரத்தையும் ஒதுக்கும் மாணவர் யாரேனும் இருக்கிறாரா? அப்படி இருந்தால் அதுவும் தவறுதான்.

24 மணி நேரமும் பாடப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அதை மட்டும் படிப்பதல்ல, கல்வி. புத்தகஅறிவுடன் சமூக அறிவையும் பெற வேண்டும். புள்ளிவிவரங்களின்படி, மாணவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 4 மணி நேரமே படிப்பதற்காகச் செலவிடுகிறார்கள். பிற நேரங்களில் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவே ஆர்வம் காட்டுகின்றனர்.

நண்பர்களுடன் பேசுவது, அரட்டை அடிப்பது,வெளியில் செல்வது என்று பிற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இளைஞர்கள் சமூக வாழ்க்கையையும் விட்டுக் கொடுக்காமல் படிப்பையும் விட்டுக் கொடுக்காமல்,இரண்டையும் சமநிலையில் வைத்து தங்களுடைய நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட முடியுமா?

என்றால் நிச்சயமாக முடியும். அதற்கான சில யோசனைகள் இதோ...

முன்னுரிமை

உண்மையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுஅவசியம். இதற்காக நீங்கள் உங்களுடைய விருப்பங்களைப் பட்டியலிட வேண்டும். பின்னர் அதை அடைய, என்ன செய்ய வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, படிப்பு இல்லாமல் ஒரு நல்ல வேலையைத் தேடுவது என்பது சாத்தியமற்றது. ஒரு விளையாட்டு வீரர் ஆக வேண்டுமெனில் உடல் தகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புபவர்கள் அது தொடர்பான புத்தகங்களை நிறையப் படிக்க வேண்டும்; சட்டத்துறை சார்ந்தவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப கற்றலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இடைநிற்றல்

சிலருக்கு படிப்பு வரவில்லை என்பதாலோ, அல்லது வேறு ஏதாவது ஒன்றில் ஆர்வம் இருக்கும் பட்சத்திலோபள்ளிக் கல்வியை பாதியிலே விட்டுவிடுவார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு. கல்வியில் பின்தங்கிய காரணத்தினால் படிப்பைக் கைவிடுவது செய்யக் கூடாத ஒரு செயலாகும். ஒரு வேலையை முடிக்காமல்இன்னொரு வேலைக்குத் தாவுவது சிறந்த யோசனையாக ஒருபோதும் இருக்காது.

"தனக்கு இந்தப் பாடம் வராது; தன்னால் முடியாது' என்று மாணவர்கள் நினைப்பதாலும் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரம் உள்ளிட்ட பிற காரணங்
களாலும் படிப்பை பாதியிலேயே விடுவது நிகழ்கின்றது. ஆனால், வாழ்வில் வளர்ச்சி பெற, வேறு துறைகளில் கூட சாதனை படைக்க, ஒவ்வொருவருக்கும் அடிப்படை கல்வி என்பது அத்தியாவசியமானது.

ஆசிரியரின் உதவி

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கும் அவசியமான தகுதி. உங்களால் கல்வியைத் தொடர முடியாத பட்சத்தில் உங்கள் ஆசிரியரை அணுகுவதுதான் சரியாக இருக்கும். உங்களுடைய எந்தவொரு பிரச்னைக்கும் அவர் ஆலோசனை வழங்கலாம். கற்றல் தொடர்பாக உங்களுக்கு சில வழிகாட்டல்களை வழங்கலாம். கல்வியைத் தொடர உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆசிரியர் உதவி செய்வார்.

பகுதி நேர வேலை

ஏழை மாணவர்கள் பலரது கல்விக்கு, அவர்களுடைய பின்தங்கிய பொருளாதாரநிலை மிகப்பெரும் தடையாக இருக்கிறது. இலவசக் கல்வி என்றாலும் குறைந்தவருமானம் உள்ளவர்கள் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க அனுப்புவது அவ்வளவு எளிதானது அல்ல.

கல்லூரிப் படிப்புக்கு கண்டிப்பாக குறைந்தபட்சம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, பொருளாதாரச் சூழ்நிலையைச் சமாளிக்க கல்வியைப் பாதிக்காதவாறு பகுதி நேர வேலையில் மாணவர்கள் ஈடுபடலாம்.

குழுவாகப் படித்தல்எந்தவொரு செயலையும் ஒரு குழுவாகச் செய்யும்போது நிறையத் தெரிந்து கொள்ள முடியும். ஒருவருக்குப் புரியாத விஷயத்தை இன்னொருவர் தெரிந்து வைத்திருக்கக் கூடும். குழுவாகப் படிப்பதன் மூலம், தெரியாத விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். புரியாத விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம். குழுவாகப் படிக்கும்போது படிப்பது தொடர்பான விஷயங்களைத் தேடுவதற்கான நேரம் குறைந்துவிடும். படிப்பதற்காக குறைந்த நேரத்தை மட்டும் செலவு செய்தால் போதுமானது. எஞ்சிய நேரத்தை சமூக வாழ்க்கைக்காகச் செலவிடலாம். இதனால் படிப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாது.

ஒழுங்கமைத்தல்

படிப்பையும் சமூக வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தும் முக்கிய கூறுகளில் ஒன்று, ஒழுங்கமைத்தல். படிப்பு, ஓய்வு, இதர வேலைகள் என அனைத்துக்கும் சரியான நேரத்தை இளைஞர்கள் ஒதுக்க வேண்டும்.

எனினும் இவற்றில் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. கடினமான வேலையில் ஈடுபடுவதை விட புத்திசாலித்தனமாக செயல்படுவது அவசியம்.
இப்போது நேரத்தை நிர்வகிக்க மொபைல் செயலிகள் பலவும் வந்துவிட்டன. தொழில்நுட்ப உதவியுடன் நேரத்தை நிர்வாகியுங்கள்.

இடைவேளை

எந்தவொரு வேலையிலும் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து ஒரே வேலையைச் செய்யாமல் சிறிது இடைவேளை விடுவது அவசியம். வாரத்தில் 6 நாள்கள் வேலைக்குச் செல்லும் ஒருவருக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையின் அருமை தெரியும். அதுபோலவே படிப்புக்கும்.

24 மணி நேரமும் படிப்பதோ 24 மணி நேரமும் வேலை செய்வதோ சாத்தியமில்லாத ஒன்று. மற்ற வேலைகளைப் போல, படிப்பு ஒன்றும் சாதாரணமானது அல்ல. வேலையைக் கூட 8 மணி நேரம் தொடர்ந்து செய்துவிடலாம், ஆனால், படிப்பது எளிதல்ல. எனவே, படிக்கும்போது மூளைக்கு ஓய்வு கொடுக்க, சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை மகிழ்விக்கும் மற்ற நிகழ்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

உந்துதல்

இன்றைய வெற்றியாளர்கள் பலருக்கும் யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று உந்துசக்தியாக இருந்துள்ளது. அதனால் படிப்பு விஷயத்திலும் மாணவர்களாகிய உங்களுக்கு ஓர் உந்துசக்தி தேவை. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக நீங்கள் படித்து ஓர் ஐஏஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதனை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும்.

வாழ்க்கை முறை

கல்வி பயிலும் காலத்தில் உடல்நலன் என்பது கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று. உடல்நலமாக இருந்தால்தான் கல்வியில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க, ஊட்டச்சத்து மிக்க உணவை உண்ண வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டுகள் புதிய நண்பர்களையும் அறிமுகப்படுத்தும்.

நிகழ்ச்சிகள்

சில மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். அது மிகவும் தவறான பழக்கம். புத்தக அறிவுடன் வாழ்க்கை அறிவும் அவசியம். வாழ்க்கையில் மகிழ்வான தருணங்களும் வேண்டும். எனவே, கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள், சக மாணவர்களுடன் நட்பு பாராட்டுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com