வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 330

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 330


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும்  அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. அவரை விசாரிக்கும் மன்னர் வீரபரகேசரி அவருக்கு தண்டனை வழங்க முடிவெடுக்கிறார். அப்போது அமைச்சரின் மகனிடம் பேசும்போது, ""உன்னுடைய claim ஐ நான் ஏற்க முடியாது'' என்று மன்னர் வீரபரகேசரி கூறுகிறார். இதன் விளக்கத்தை புரொபஸர் தர முற்படும் போது ஜூலி குறுக்கே வந்து for the heck of it  என்று கூறுகிறது. அந்த சொற்றொடரின் பொருள் என்ன என ஜூலி விளக்க முற்பட what the heck எனும் தொடருக்கு முதலில் விளக்கம் அளிக்கும்படி கணேஷ் கேட்கிறான். ஜூலி ஓர் உதாரணத்துடன் அத்தொடரை விளக்குகிறது.

ஜூலி: நீ ரொம்ப வெறுப்பில் இருக்கிறாய். பரீட்சைக்குப் படிக்கவில்லை. தோற்றும் போகலாம் எனும் நிலைமை. உன் நண்பர்கள்  தேர்வைத் தவிர்த்து விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் நீயோ, "என்னவானால் என்ன? 

எப்படியும் தோற்கத்தான் போகிறோம். அதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால் ஒருவேளை விளிம்பில் ஜெயித்து விட்டால் நல்லது தானே?' என நினைத்து What the heck, I am going to take the exam  என்று சொல்லுகிறாய். ஒருநாள் நீ சட்டையை அணிந்து கொண்டு கிளம்பும் போது தான் கவனிக்கிறாய், இரண்டு பொத்தான்கள் கழன்று போயிருக்கின்றன என்று. What the heck, யாரு இதையெல்லாம் பார்க்கப் போறாங்க, பார்த்தாலும் இப்ப என்ன என நினைத்துக் கொண்டு அப்படியே கிளம்பி விடுகிறாய். 

புரியுதா? 
கணேஷ்: தெளிவா புரியுது ஜூலி. ஆனால் நீ சொன்ன அந்த For the heck of it என்றால் என்ன? 
ஜூலி: For the heck of it என்றால் without any purpose except for fun என்று அர்த்தம். 
கணேஷ்: எனக்கு சத்தியமா புரியல. 
ஜூலி: ம்...ம்ம்ம்... உனக்கு எப்படி விளக்
கிறது? மன்னரிடமே கேட்போம். (மன்னர் 
வீரபரகேசரியை நோக்கி): மன்னர் மன்னா! 
வீரபரகேசரி: என்ன ஜூலி? 
ஜூலி: உமக்கு வந்தனங்கள். நீடூழி வாழிய! 
வீரபரகேசரி: நன்றி. ஆனால் எனக்கு நீடூழி வாழ ஒன்றும் விருப்பமில்லை ஜூலி. 
ஜூலி: அந்த பஞ்சாயத்தை பின்னால் வைத்துக் கொள்வோம் மன்னாதி மன்னா. இப்போது எங்களுக்கு உங்களது உதவி தேவை. 
வீரபரகேசரி: நூறு யானைகளின் முதுகில் ரத்தின வைடூரியங்களை மூட்டை மூட்டையாக அனுப்பித் தர வேண்டுமா? 
ஜூலி: எனக்கு அந்த அளவுக்குப் பேராசை இல்லை. அது மனிதர்களின் கெட்ட புத்தி. எங்களுக்கு சரளைக் கல்லும் வைடூரியமும் ஒன்று தான்.  
வீரபரகேசரி: அப்படியென்றால் கடலை காலி செய்து அதில் நீ குடிக்க சிக்கன் சூப்பை நிரப்பித் தரவா? 
ஜூலி: எதுக்கு மன்னா நான் குடிச்சு குடிச்சு வயிறு வீங்கி சாகவா?
வீரபரகேசரி: அப்படி என்றால்... 
ஜூலி: மன்னர் மன்னா... நீங்க ஒரு சொற்றொடரை இந்த கணேஷுக்கு உதாரணப்பூர்வமாக விளக்கினால் மட்டும் போதும்.
வீரபரகேசரி: சரி கேளு. 
ஜூலி: இந்த for the heck of it என்பதற்கு என்ன உதாரணம் தருவீர்கள்? 
வீரபரகேசரி: ஓ அதுவா? சும்மா ஒரு பொழுது போக்குக்கு, ஜாலிக்கு பண்றதுன்னு அர்த்தம். உதாரணமா எனக்கு ரொம்ப போரடிக்குதுன்னா யாராவது பத்து திருடர்களைப் பிடித்து வந்து தலையை வெட்டச் சொல்லுவேன். அவர்களோட பெண்டாட்டிகளும் உறவினர்களும் தலையிலடித்து அழுது எனக்கு சாபம் விடுவதைப் பார்க்க ஜாலியாக இருக்கும். So the execution is done for the heck of it. 

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com