இணைய வெளியினிலே...

வயலில் குட்டிக் குட்டிச் சூரியன்கள்... பெரியதொரு சூரியகாந்திவானில்.
இணைய வெளியினிலே...
Published on
Updated on
1 min read

முக நூலிலிருந்து....

வயலில் குட்டிக் குட்டிச் சூரியன்கள்... 
பெரியதொரு சூரியகாந்தி
வானில்.

பிருந்தா சாரதி


எதையும் கண்டும் காணாமல் 
தாண்டுவதற்குப் பதிலாக,
கண்டும் பேசியும் 
கடப்பதில் என்ன தவறு?

அ. ராமசாமி

விலையே இல்லாத அன்பை, 
வீண் செலவு செய்வதுபோல்... 
சிலர் அலட்சியப் படுத்துவார்கள்.

வானரசன்


சுதந்திரமாகப்  பறந்த 
பட்டாம்பூச்சி முதுகில்
சுமையாகிவிட்டது...
மழைநீரின் ஒரு துளி.

முல்லை நாச்சியார்

சுட்டுரையிலிருந்து...


யாரிடமும் இல்லாத ஒன்று,
உன்னிடம் உள்ளது...
அதுதான் நீ.

புண்ணாக்கு  

தன்னைத் தவிர  யாரையும் நேசிக்காத 
பலரைப் பார்க்கிறேன்.
யாரையுமே வெறுக்காத ஒருவரை...
இதுவரை பார்க்கவில்லை.

ப்ரியநேசன்


யாரெல்லாம் 
இப்பிடி ஒரு 
டெண்ட் கொட்டாய்ல படம் பார்த்திருக்கீங்க? 
இதுல மணல் குமிச்சு வச்சு உசரத்துல உக்கார்றதும், 
பின்னாடி உக்காந்து 
இருக்குறவங்க 
அந்த மணலை பறிச்சு 
உசரத்தை குறைக்கிறதும்
வழக்கமான நடைமுறை.

பட்டாசு

வலைதளத்திலிருந்து...


நீண்ட நாட்களாக வெளியில் சுற்றித் திரிந்த தவளை ஒன்று எதிர்பாராத வேளையொன்றில் தவறி கிணற்றுள் விழுந்தது. "ஆகா... அருமையாக இருக்கிறதே! நம்மை உண்ணும் பாம்புகள், பறவைகள் இங்கில்லையே. எப்பொழுதும் சில்லென தண்ணீர், விதவிதமான சுவையுடன் நீர்ப்பூச்சிகள் என அனைத்தும் இருக்கின்றனவே. இதுதான் நம் முன்னோர்கள் சொல்லிய சொர்க்கமோ... இவ்வளவு நாள் தெரியாத்தனமாக நரகத்தில் இருந்திருக்கிறோமோ...' என்றெல்லாம் பிதற்றியது அந்த தவளை.  

நாட்கள் சென்றன. 

தவளையோ உணவைப் பிடிக்க அதீத ஆற்றலை செலவழிக்கத் தேவையில்லை என்பதால் சற்றே பருத்திருந்தது. ஒரு கட்டத்தில் பசி என்றால் என்னவென்றே மறந்திருந்த அந்த தவளைக்கு எந்த பூச்சியும் சுவை நல்குவதாக இல்லை. தூக்கமும், உணவும் மட்டுமே வாழ்வென கழிந்த நாட்கள் என்னவோ தவளையின் கபாலத்திற்குள் பதிவாக மறுத்தன. 

என்றோ ஒரு நாள் தன்னை பிடிக்க வந்த பாம்பிடமிருந்து தப்பிய அந்த நொடியும், தப்பித்த பின்னாலான மகிழ்வும், பசியும், பசித்த பின்னான உணவின் ருசியும், கபாலத்துள் "கையாமுயா'வென கத்தியது. 

ஒரு நாள்  தூங்கிக் கொண்டிருந்த தவளை சட்டென எழுந்து, ஏதோ நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்று எண்ணியது.  எண்ணிய மாத்திரத்தில், அதன் கபாலத்தில் உதித்தது ஓர் எண்ணம்.  

இந்த பாம்பின் பிடியில் இருந்து தப்புவது கூட எளிது; ஆனால் இந்த சோம்பேறித்தனமிருக்கே... அது மிகவும் ஆபத்து. சற்றே யாருக்கும் பயனற்று இந்த கிணற்றுள் வாழ்வதுதான் ஏனோ என்று சலிப்படைந்த தவளை, தட்டுத்தடுமாறி எப்படியோ கிணற்றிலிருந்து மேல்வந்து தன் இயல்பு வாழ்வைத் தொடர்ந்தது. 

எந்த ஆபத்துமற்ற கிணற்றைவிட, பாம்புகள் நிறைந்த இந்த இடம்தான் நம் நிரந்தர வாழ்வென கருதி, பாம்பை எதிர்க்க கற்றுக் கொள்ள தொடங்கியது. 
ஆக குழந்தைகளே,  தடைகளே நம்மை இயக்குகின்றன. எதிரிகளே நம்மை உருவாக்குகிறார்கள்.  உழைப்பே நம்பை ஓய்வெடுக்க வைக்கிறது. வலியே நமக்கான சுகத்தை கொடுக்கிறது. 

 http://arivu-iyaltamizh.blogspot.com/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com