இணைய வெளியினிலே...

யார் வந்தாலும் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.ஏனென்றால்,  ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாகவே வருகிறார்கள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


யார் வந்தாலும் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனென்றால்,  ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாகவே வருகிறார்கள்.

- பரமேசுவரி


நினைத்துக் கொள்கிறோம் பழைய தொன்றை எரித்துவிட்டால்
போதுமென்று. 
பழையதோ, புதியதோ ஒட்டடைகளை...
மனதிலிருந்தும் விட்டொழிக்க வேண்டியிருக்கும்.

-பா.மகாலட்சுமி 

பறக்கிறோம் என்பது
பார்வையின் மயக்கம்!
சிறக்கிறோம் என்பதும்
சிந்தனைக் குழப்பம்!
இருக்கிறோம் என்பதே
இயற்கையின் கருணை!
வருவதும் போவதும்
வாழ்க்கையின் உயிர்ப்பு!

-ஆரூர் தமிழ்நாடன்


குப்புறக் கவிழ்ந்து 
சிராய்த்துக் கொள்ளும் 
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
நினைவுக்கு வராமலில்லை...
குரங்குப் பெடல்போட்டு
சைக்கிளோட்டிய தருணங்கள்.
மனமொரு குரங்காகக்
கிளைவிட்டுக் கிளை தாவும் வாழ்க்கையில்
பஞ்சரான சைக்கிளே காதலுமென்கிறான்
பைலட் பரமேஸ்வரன்.

- யுகபாரதி


சுட்டுரையிலிருந்து...


கண்ணாடி நம் முகத்தில் 
அழுக்கைக் காட்டினால்,
கண்ணாடியை உடைக்க மாட்டோம்.
மாறாக, முகத்தைச் சுத்தம் செய்வோம்.
அதே போல்,  உங்கள் குறைகளைச் 
சுட்டிக் காட்டுபவர்களிடம் 
கோபப்படாதீர்கள். 
மாறாக, உங்கள் குறைகளை
சரி செய்து கொள்ளுங்கள்.

-கவிதா துரை


ஒரு விஷயம்
உண்மையிலேயே எப்படி 
இருக்கிறது என்று பார்க்க 
முயலாமல், 
அது எப்படி இருக்க 
வேண்டுமென்று
நாம் விரும்புகிறோமோ,
அப்படித்தான் பார்க்கிறோம்.

ஜா.வி.

தேவையற்றவற்றை வெளியேற்றினால் தான் தேவையானவற்றிற்கு இடம் இருக்கும்...
இல்லத்திலும், உள்ளத்திலும்.

செல்வ பாரதி

ஒப்பனை இல்லா நிஜங்களை விட்டுவிட்டு...
அலங்கரித்துச் சிரிக்கும் வாழ்க்கையையே நாடுகிறது மனது!

நவ்யா


வலைதளத்திலிருந்து...


இங்குள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் அப்பாதான் கதாநாயகன். அவரிடமிருந்தே பலவற்றையும் கற்கத் தொடங்குகிறோம். அப்பாவின் முதல் எழுத்தை நம் பெயருடன் இணைத்தெழுதும் நாமனைவரும் பாக்கியசாலிகள்.

பிள்ளைகளின் வளர்ச்சியில் ஆனந்தமடையும் முதல் ஜீவனும் அவரே. ஒவ்வோர் அப்பாக்களின் உழைப்பும் அவர்களின் பொருளாதாரமும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நன்கு அமைப்பதிலேயே இருக்கும். 

பிள்ளைகள் வாழ்வில் பயணிக்கும்போது, அவர்களின் வழி நெடுக வரும் கற்களையும் முட்களையும் அகற்றுவதில் தான் அவர்களின் வாழ்க்கையையே செலவழிக்கிறார்கள். தனக்கென்று அவர்கள் எதுவும் சேர்த்து வைத்துக் கொள்வதில்லை. பிள்ளைகளின் படிப்பு, வளர்ச்சி என்று அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கிலேயே தங்கள் இளமையையும், இன்பத்தையும் விட்டுக் கொடுக்கின்றனர்.  

வாழ்வின் பல நிலைகளில் அப்பாக்கள்தாம் பிள்ளைகளுக்கு ஆசானாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் கற்றல் என்பது அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே நம் வீட்டினுள்ளேயே ஆரம்பமாகிறது. 

அப்பாக்களின் மனஅறையிலிருக்கும் பூட்டு என்றும் திறப்பதேயில்லை. அதனைத் திறந்து பார்ப்பதும் அவசிய மற்றது.  அவ்வறையினுள் இருப்பது கண்ணீரும் வலிகளுமே! 

அப்பாவின் அன்பும், தாயின் கருவறையைப் போன்றது தான்; ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், அக்கருவறையிலிருக்கும் அன்பு, பாசம் என்ற குழந்தை பிரசவிப்பதே இல்லை. அது தன் பிள்ளைகளின் ஆனந்தத்தைப் பார்த்துப் பார்த்து கருவறையினுள்ளே அழிந்துபோகும். 

http://entamilpayanam.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com