வானம் மேலே... வாழ்க்கை கீழே!

கர்ம யோகம் என்பது "கடமை அறம்' என்பதாகும். நம்மை வாழ வைக்கின்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பிச் செலுத்துவதே "கர்ம யோகம் எனும் கடமை அறம்' ஆகும்.
வானம் மேலே... வாழ்க்கை கீழே!


கர்ம யோகம் என்பது "கடமை அறம்' என்பதாகும். நம்மை வாழ வைக்கின்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பிச் செலுத்துவதே "கர்ம யோகம் எனும் கடமை அறம்' ஆகும்.

- வேதாத்திரி மகரிஷி

மதுரை மாநகராட்சி ஆணையர் கே.பி. கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் படிப்பதற்காக "ரீடிங் ரூம்' (படிக்கும் அறைகள்) உருவாக்கித் தரப்படும் என்று உறுதியளித்து, அதற்கான பணிகளை மதுரையில் துரிதப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மாணவர்களின் சார்பாக நமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு நம் பணிகளை தொடர்வோம்.

இந்நாட்டின் மத்திய அமைச்சருக்கு இணையான அதிகாரமும் எல்லைகளும் கொண்ட அரசு அமைச்சகப் பதவியில் இருக்கும் எனது நண்பர் ஒருவருடன் நான்கு நாட்கள் தங்கி, அவருடனேயே பயணித்து இந்த உலகை, வாழ்க்கையை, ஆன்மீகத்தை, அரசியலை பேசி தெளிவு பெறுகிற வாய்ப்பொன்று சமீபத்தில் எனக்கு அமைந்தது. அவரது தகுதியில், பதவியில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் தங்களது அதிகாரத்தைச் செலுத்தி, தங்களுக்கு ஒரு சுகபோக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வார்களோ, அதில் துளியளவைக் கூட அம்மனிதர் செயல்படுத்தவுமில்லை; அனுபவிக்கவுமில்லை.

அவருக்கான அவரது பணிகளை வேலையாட்களிடம் சொல்லாமல் அவரே செய்கிறார். அவர் உடுத்திய துணிகளை அவரே துவைக்கிறார். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அவர் தங்கியிருக்கும் அறையை அவரே சுத்தம் செய்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை தானே பொறுபேற்று படிக்க வைக்கிறார். அவருக்கான இதுபோன்ற பணிகளை, கடமைகளை அவரே செய்து கொள்ள அவரது பதவியும் அதிகாரமும் அவரை தடுக்கவேயில்லை. இது மாதிரியான பணிகளுக்கான நேரத்தையும், உடல் பலத்தையும் கூட அவர் உருவாக்கிக் கொள்வது வியப்பாக இருக்கிறது.

ஸ்மார்ட் போன் வாயிலாக செயலிகள், முக நூல் மற்றும் யூ ட்யூப் மூலமாக நம் அனைவருக்கும் ஒவ்வொரு வினாடியும் எண்ணற்ற காணொளிகள் நம் உள்ளங்கைகளிலேயே வந்து சேர்கின்றன. அற்புதமான செய்திகள் முதல் அருவருப்பான விசயங்கள் வரை... இந்தக் காணொளிகள் கோடிக்கணக்கானவர்களை குனிந்த தலை நிமிராமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாம் பேசிக்கொண்டிருக்கிற அந்த அதிகாரி மூன்று நிமிடங்கள் ஒடக் கூடிய காணொளி ஒன்றை என்னிடம் காட்டி பார்க்கச் சொன்னார்.

உலகப் புகழ் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் (1958 - 2009) பற்றியது அது. புகழ் மற்றும் பணத்தில் உச்சம் தொட்ட மைக்கேல் ஜாக்சன், 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளையும் எடுத்தவர். தன் வீட்டில் பத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களை நியமித்தார். அவர் தினமும் தனது முடி முதல் கால் நகங்கள்வரை அனைத்தையும் பரிசோதிப்பார். அவரது ஒவ்வோர் உணவும் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர் சாப்பிடுவார்.

"அவனன்றி ஒரு அணுவும் அசையாது' என்பார்களே, அதைப்போல அவர்கள் (மருத்துவர்கள்) இன்றி ஜாக்சனின் ஓர் அணு கூட அசையாது' என்கிற நிலை ஏற்பட்டது. அவரது ஒவ்வோர் அடியும், அசைவும் மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டது. இப்படி சர்வ எச்சரிக்கையாக, பாதுகாப்பாக தனது வாழ்வின் இருபத்தைந்து ஆண்டுகளை மாற்றியமைத்த ஜாக்சனின் இதயம், அவரது ஐம்பதாவது வயதில் செயல்பட மறுத்தது; இனி இயங்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக அடம் பிடித்து நின்று போனது.

தனது ஐம்பதாவது வயதில், யாரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மரணத்தை உலகெங்கும் உள்ள அவரது கோடானுகோடி இரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயற்கையின் முன் மருத்துவமும், மருத்துவர்களும், ஏன்... மைக்கேல் ஜாக்சனும் தோற்றுத்தான் போனார்கள். மரணம் இயற்கையின் விதி. அது யாருக்கு, எப்போது நிகழும் என்பதும் நாமெல்லாம் புரிந்து கொள்ள முடியாத இயற்கையின் மகா சூத்திரங்களுள் ஒன்று.

"முதன்முதலில் நிலவில் கால் பதித்தவரும், முதன்முதலில் இமயத்தின் உச்சியில் காலடி வைத்தவரும், கீழே பூமியில் வாழ்ந்துதான் மடிந்திருக்கின்றனர்' என்று அடிக்கடி சொல்வார் எனது ஆசான் வைரவ ஞாயிறு சித்தர். "கடமை என்பது நன்றி உணர்வு. பிறர் துன்பம் போக்க உடலாலோ அறிவாலோ பொருளாலோ உதவுதல் ஈகை ஆகும்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

படித்து, பட்டம் பெற்று, வாழ்வாதாரத்திற்கும் நிரந்தர வருமானத்திற்குமாகவும் ஓர் அரசு அல்லது பொதுத்துறை அல்லது தனியார் வேலையையோ நிரந்தரமாகப் பெறுவதென்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.

ஆனால், அது சாதனையல்ல. வாழ்க்கை பயணத்தில் அது ஒரு தொடக்கம். சிறு வெற்றி, பெரும் ஊக்கம். அப்படி நம் தகுதியின் அடிப்படையில் உழைத்து வாங்குகிற அந்த வேலையை பெருங்கருவியாக வைத்துக் கொண்டு நாம் வாழும் இந்த சமூகத்திற்கும், இல்லாதவர்கள், இயலாதவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நமது வாழ்க்கை சாதனையா அல்லது பிறருக்கு வேதனையா என்று முடிவு செய்யப்படவேண்டும்.

ஆம், சகோதரர்களே! மாணவர்களே! இளைஞர்களே! வேலை வாய்ப்பிற்கான களம் நம் கண் முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது. வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும்... போட்டிகளும், நெருக்கடிகளும் அதைவிட கொட்டிக் கிடக்கின்றன.

ஓட்டபந்தயத்தில் ஓடி வெற்றிபெற நாம் முயற்சிப்பது, வெறுமனே வெற்றியடைந்துவிட்டோம் என்று பட்டாசு வெடித்து குதூகலித்து கொண்டாட மட்டும்தானா? அல்லது அதற்கு மேலும் பொறுப்பான, சமூக அக்கறையுடன்கூடிய வாழ்வு வாழ்ந்திடவா என்றும் முடிவுசெய்துகொண்டு நம் பயணத்தையும், ஆயத்தங்களையும் தொடர்வது அறிவார்ந்த செயலாக இருக்கும்.

இதை நாம் பேசிக் கொண்டிருக்கும் இதேவேளையில், "வானம் பார்த்து நடக்காதே; பூமியில் பிறந்தாய் மறக்காதே' என்கிற முத்தாய்ப்பான பாடல் வரிகள் காற்றில் கலந்து வந்து நம் சிந்தனைக்கு உரம் சேர்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com