கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 39: விளையாடு இந்தியா... விளையாடு!

ஐக்கிய நாடுகள் சபையின் ஜனத்தொகை நிதியகம் (யூ என் பாபுலேஷன் ஃப்ண்ட்) வருடாந்திர உலக ஜனத்தொகையின் நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கிறது.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 39: விளையாடு இந்தியா... விளையாடு!
Updated on
4 min read

ஐக்கிய நாடுகள் சபையின் ஜனத்தொகை நிதியகம் (யூ என் பாபுலேஷன் ஃப்ண்ட்) வருடாந்திர உலக ஜனத்தொகையின் நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கிறது. இந்த ஆண்டின் அறிக்கையில், "நமது உடல் நமது உரிமை. உடலைப் பாதுகாக்க தனிமனித சுதந்திரத்திற்கு தடை ஏதும் இருக்கக் கூடாது. அது முக்கிய உரிமையாக கருதப்பட வேண்டும்' என்று கூறியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக மருத்துவ சேவைகளைப் பெற சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்கள் அவதியுற்றனர் என்பதை கருத்தில் கொண்டு உடல் பேணல் உரிமையை முன்னிறுத்தியுள்ளார்கள்.

ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள பின் தங்கிய நாடுகளில் குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மீது இழைக்கப்படும் உரிமை மீறல்கள் கணக்கில் அடங்காது. குழந்தை தொழிலாளி, பெண்களின் பிறப்புறுப்புகளைச் சிதைத்தல், சுகாதாரமற்ற கருத்தடை, கட்டாய கருக்கலைப்பு, மாற்றுதிறனாளிகளுக்கு வாழ்வுரிமைமறுத்தல் போன்ற பல உரிமைப் பிரச்னைகள் உள்ளதைவலியுறுத்தி தனிமனித உடல் பேணும் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஐநா ஜனத்தொகை நிதியகத்தின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

உடல் பேணலின் மகிமையை தெய்வாம்சமாக விவரிக்கிறார் திருமூலர்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.

எல்லாரும் முக்கியமாக இளைஞர்கள், தங்கள்உடலையும் மனதையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். பதினெட்டு வயதிலிருந்து ஐம்பத்தைந்து வரை உழைக்கும் கரங்களைக் கொண்ட நாடு தான், பொருளாதார வளர்ச்சியில் ஓங்கியிருக்கும் நாடாக திகழும். ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதை ஜனத்தொகை நிதியகம் கண்காணித்து, பல்வேறு பொருண்மைகளை ஆராய்ந்து உலக நாடுகளுக்கு அறிவுறுத்தும் விதமாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. 2014 - ஆம் ஆண்டின் அறிக்கையில் இளைய சமுதாயத்தின் சக்தி - பவர் ஆப் 1.8 பில்லியன்- அதன் பல்வேறு பரிமாணங்கள் ஆராயப்பட்டன.

இளைய சமுதாயம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் வகுக்கிறது. இளைய சமுதாயத்தின்சக்தியை சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட நாடுதென் கொரியா. 1950 லிருந்து 2008 வரை அதன் வளர்ச்சி 2230 சதவிகிதம்!

உலகின் இளைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பேர் ஆசியாவில் உள்ளனர். இந்தியாவில் தான் 10 வயதிலிருந்து 24 வயது இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். 2021 - இல் 46.4 கோடி, அடுத்து சைனா 35 கோடி!

பொருளாதாரத்தில் நலிந்த நாடுகளில் தான் இளைய சமுதாயத்தின் ஜனத்தொகை அதிகம். உலகம் நல்லமுறையில் இயங்குவதற்கு தங்கள் உழைப்பைத் தரக்கூடியவர்கள் அவர்களது உடலைப் பேண வேண்டாமா? பல இளைஞர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு , இரத்த அழுத்தம், வறுமையின் கொடுமையால் மனநிலை பாதிப்பு போன்றவற்றைச் சமாளித்து இளைஞர்கள் எதிர்நீச்சல் போட வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார் இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை உணர்ந்து அவர்களுக்கு ஊக்கமளிக்க "இந்திய இளைஞர் சங்கம்' என்ற அமைப்பினை 1914 - ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கினார்.

சங்கத்தின் முக்கிய குறிக்கோள் இளைஞர்களுக்கு சமுதாய சேவை உணர்வை உண்டாக்குதல், மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் சார்ந்த கருத்துகளில் ஆரோக்கியமான புரிதலை ஏற்படுத்துதல் என்பதாகும். எப்படி வள்ளலார் ஆன்மீகச் சிந்தனையை வளர்க்க முதலில் பசிப்பிணியை போக்க வேன்டும் என்று சிந்தித்தாரோ அதே போல் சமூக சேவையில் இணைய முதலில் இளைஞர்களின் உடலை வலிமையாக்கவும் மனதளவில் திடம் பெறவும் உடல் பயிற்சி கூடங்களை அமைத்தார் அன்னி பெசன்ட்.

விளையாட்டு மைதானம் தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்க வல்லது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற முனையும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத் தொடர் 2023 -ஆம் ஆண்டு மும்பையில் நடக்கப் போவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 19 -ஆம் தேதி வெளிவந்துள்ளது. சந்தேகமின்றி இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை.

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேசக் கமிட்டி இந்தியாவில் கூடுகிறது. பியரி கூபர்டினால் உருவாக்கப்பட்ட ஒலிம்பிக் இயக்கம் 1894- ஆம் ஆண்டில் முதல் கூட்டத்தை பாரிஸ் நகரில் நடத்தியது. இப்போது ஐஓசியின் 140 சர்வதேச ஒலிம்பிக் கூட்டத் தொடர் மும்பையில் அடுத்த வருடம் 2023 மே ஜூன் மாதம் நடத்தப்படும். இந்த கமிட்டியில் 101 வாக்குரிமை பெற்ற அங்கத்தினர்களும், 45 கௌரவ உறுப்பினர்களும் உள்ளனர். இந்த கூட்டத்தில் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுப்பு, 2030 - ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்ஸ்- ஐ எங்கு நடத்த வேண்டும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முடிவு எடுக்கப்படும்.

சகோதரத்துவம், சிறப்பு எய்துதல், மரியாதை இவைதான் ஐஓசி- யின் முதன்மைக் கோட்பாடுகள். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிவரும் நாடு. 2030 - இல் இந்தியா உலகின் பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது விரிவான நாடாக விளங்கும். இந்தியா ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கு வருங்காலத்தில் தகுதி பெறும் என்பது உறுதி. ஐஓசி கமிட்டியின் கூட்டமும் அடுத்த வருடம் இந்தியாவில் நடக்க இருப்பதும் நல்ல சாதகமான சூழல். மத்திய அரசு "ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியா' அமைப்பின் கீழ் தேசிய திறன் கண்டெடுத்தல் போட்டி வைத்து 8 வயதிலிருந்து 14 வயது வரையுள்ள திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டெடுத்து விசேஷ பயிற்சி அளிக்கும் திட்டத்தில் தற்போது 1060 இளைஞர்கள் விசேஷ பயிற்சி பெறுகிறார்கள். இது தவிர இந்திய இராணுவம் இளம் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இந்த திட்டத்தில் 1049 இளைஞர்கள் பயிற்சி பெறுகிறார்கள். இதற்காக 50 விசேஷ பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்போர்ட்ஸ் அதாரிடி மாநிலங்களோடு இணைந்து விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்த 56 மையங்கள் நிறுவி தற்போது 5394 விளையாட்டு வீரர்கள் 1587 பெண்கள் உட்பட உயர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

மத்திய அரசு "உடல் வலிமை பெற்ற இந்தியா', "கேலோ இந்தியா- விளையாடு இந்தியா' என்ற இரண்டு இயக்கங்களை உருவாக்கி பட்டிதொட்டியில் எல்லாம் பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்கள் பங்குகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டினை மையமாக வைத்து உள்ளூர் வளர்ச்சி, பணம் சார்ந்த பரிவர்த்தனை வளர்ச்சி, அதன் மூலம் தேசிய வளர்ச்சிக்கு வித்திடுதல் என்ற உயரிய குறிக்கோள் தொலைநோக்குத் திட்டமாக மத்திய அரசு வகுத்துள்ளது, புதிய முயற்சி.

இளைய சமுதாய வளர்ச்சிக்கு முக்கியமானது கல்வி, திறன் வளர்ச்சி விளையாட்டு வசதி. மாநில அளவிலும் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி கல்விக்கு ஒதுக்கப்படுகிறது என்று சொன்னாலும் அதில் தொண்ணூறு சதவிகிதம் ஆசிரியர் சம்பளம், இதர நிர்வாக செலவுகளுக்குப் போய்விடுகிறது. தரமான கட்டமைப்பு, விளையாட்டு வசதி, இணை பாடதிட்டங்களுக்கு எப்போதும் நிதிப் பற்றாக்குறை!

பொதுப்பணி, கூட்டுறவு, வேளாண்மை, தொழில்போன்ற துறைகளுக்கு அமைச்சர் ஆவதற்கும்துறை நிர்வாக பொறுப்பிற்கும் போட்டா போட்டி இருக்கும். ஆனால் விளையாட்டுத் துறை சீந்துவாரற்று ஒப்புக்கு சப்பாணி என்று அமைச்சர், எப்போது மாறுதல் வரும் என்று காலத்தை ஓட்டும் துறைத் தலைவர்கள்! அதே போல் நவீன உலகில் முன்னேற வேண்டும் என்றால் புதிய பரிமாணங்களை இளைஞர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். திறன் மேம்பாடு துறையும் ஓரங்கட்டப்பட்ட துறையாக கவனம் செலுத்துவதில்லை.

மேலை நாடுகளில் விளையாட்டு வசதிகளுக்கும், இணைய பாடத்திட்டங்களாக தொழில்கூடங்களில் படிக்கும் போதே பயிற்சி அளித்தல், பல்கலைகளை கற்க வசதி ஆகியவைகளுக்கு அதிக முக்கியவத்துவம் அளிப்பதால், அந்த நாட்டு இளைஞர்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் புதுமை, புரட்சி, சாதனை படைக்கிறார்கள். நமது நாட்டு இளைஞர்களும் எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை. ஆனால் அவர்களுக்கு சரியான தருணத்தில் பயிற்சியும் வாய்ப்புகளும் கொடுப்பதில்லை. இல்லாவிட்டால் போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் நமது மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக ஏன் கஷ்டப்பட வேண்டும்?

சிறிது வித்தியாசமாக ஹரியாணா மாநிலத்தில் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இராணுவத்திலும், காவல்துறை, பாதுகாப்புத்துறை வீரர்களுக்கு உடல் வலிமை அவசியம். தொடர் உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு துறை அதிகாரிகள், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்கள் துறை நிர்வாகத்தில் அமர்ந்தால் விளையாட்டுத் துறை சிறப்பாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஹரியாணா மாநிலத்தில் ஐஜி பதவியில் உள்ள ஓ.பி. சிங் என்பவர் விளையாட்டுத்துறை இயக்குநராக 2008-12 ஆகிய மூன்று வருடங்கள் பணியாற்றினார். பலமாற்றங்களைக் கொண்டு வந்தார். உடற்பயிற்சியில் எல்லாரும் கலந்து கொள்ளக் கூடியது மரத்தான் என்ற நெடுதூர ஓட்டம். இதனை மாவட்டம் அளவில் தொடர் நிகழ்ச்சியாக எல்லா தரப்பட்ட மக்களையும் இணைத்து நடத்தினார். அது எல்லாரிடமும் உள்ள விளையாட்டு உணர்வினைத் தூண்டும் விதமாக அமைந்தது. கைபேசியில் எப்போதும் ஒன்றியிருக்கும் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பும் விதமாக மனித நேயத்தை வளர்க்கும் விளையாட்டுகளை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்தார். இப்போது அவர் விளையாட்டுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

""ஹரியாணா மாநிலத்தவரிடம் போட்டி என்று வந்துவிட்டால் சவாலை ஏற்று வெற்றி பெற வேண்டும் என்ற வெறி உள்ளது. அதை மையமாக வைத்து விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்களை இணைப்பது சுலபமாக இருக்கிறது'' என்கிறார் ஓ.பி. சிங்க். விளையாடுவதை ஓர் உரிமையாகவும் அதற்கு வசதி செய்து கொடுப்பதை முக்கிய கடமையாகவும் ஹரியாணாவில் எடுத்துக்கொண்டுள்ளார்கள். நாட்டின் ஜனத்தொகையில் ஹரியாணா மாநிலத்தில் இரண்டு சதவிகிதம் தான். ஆனால் இந்தியா சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வெல்வதில் நாற்பது சதவிகிதம் ஹரியாணா மாநில வீரர்கள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

இலவசம் என்ற மாயை மக்களின் சுய உந்துதல், சாதிக்க வேண்டும் என்ற மேல்நோக்கு சிந்தனையைச் சிதைக்கிறது. சுயமாக முடிவெடுத்து தன் காலில் நிற்பதுதான் சுய மரியாதை. வீடு தேடி அரசு வேலை வரும் என்ற பகல் கனவை கலைத்து விழிப்புடன் உழைத்தால் தான் உய்வுண்டு.

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: அரசியல் சட்ட திருத்தம் 61 , 1988 இன் படி அரசியல் சாசனம் 326 - ஆவது பிரிவு திருத்தப்பட்டு வாக்காளர் வயது 21 இலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

இந்த வாரக் கேள்வி: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமை இடம் எங்குள்ளது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:
மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com