

இவ்வுலகத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும் வித்தியாசமானவை. அனுபவங்களின் மூலமாக பெற்ற வாழ்க்கை பற்றிய தங்களின் புரிதலை ஒவ்வொருவரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் சொல்லிவிட்டுத்தான் செல்கிறார்கள். ஆனால், சந்திக்க முடியாத நபர்கள் மற்றும் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை இலக்கியம் வாயிலாகவே மட்டுமே பெற முடிகிறது.
இலக்கியம் என்பது மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு உலக அளவில் பரந்து விரிந்த ஒரு வாழ்க்கையை உணர்த்துவது. பிறரது வாழ்க்கை அனுபவங்களை நம்முள் கடத்துவது. உலகம் முழுவதும் உள்ள மனிதர்களைப் படிப்பது மட்டுமின்றி, நிகழ்காலத்தில் இருந்தாலும் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் கற்பனைக் காட்சிகள் வழியே சென்று வரும் உன்னத உணர்வைத் தருவது.
இலக்கியத்தின் முக்கியத்துவம் என்ன?: தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை அனுபவம் என்பது மிகவும் குறுகியது. ஆனால் இலக்கியமும் வாசிப்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலை உணர வைக்கிறது.
சமூகத்தில் உள்ள சாதி, மதம், இன பாகுபாட்டுத் தடைகளை உடைக்கும் ஒரு கருவியாக இலக்கியம் இருந்திருக்கிறது; இருக்கிறது.
ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தும் ஆற்றல் இலக்கியத்திற்கு மட்டுமே இருக்கிறது. நாகரிக சமூகத்தை உருவாக்க புத்தகங்களால் மட்டுமே முடியும்.
தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பெறுவதுடன் கற்பனை வளத்தை இலக்கியம் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். படிப்பனவற்றை நீங்கள் காட்சிகளாக உங்கள் மனதில் விவரிக்கும் போது உங்களை அறியாமல் படைப்பாற்றல் உங்களுக்குள் உருவாக்கும்.
ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியும் பகுத்தறிவுச் சிந்தனையை இலக்கியம் மேம்படுத்தும். பலர் சரி செய்ய முடியாத உங்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். அனைத்தும் மேலாக இலக்கியம் படிப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ஒருநாளில் ஓர் அரை மணி நேரம் இலக்கியம் படித்தால் போதும், அது உடல்ரீதியாக மூளைக்கு சிறந்த பயிற்சி என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
பதற்றத்தில் இருந்து விடுபடவும், சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் உதவுவதாக ஆய்வின் மூலமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதை விட படித்து தெரிந்துகொள்ளும்போது அது மூளையில் ஆழமாகப் பதிவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கலாசார பாரம்பரியத்தில் மிகவும் மதிப்புமிக்கதான இலக்கியத்தை எவரும் எளிதில் அணுகலாம். சிறுவர்கள், பெரியவர்கள் என அவரவர் ரசனைக்கு ஏற்றபடியான பல்வேறு வகை இலக்கிய நூல்கள் உள்ளன.
ஏன் படிக்க வேண்டும்?: வாழ்க்கையில் புதிய சாகச அனுபவங்களைப் பெற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும். ஆனால், இருக்கும் ஒரு வாழ்க்கையில் அனைத்துவிதமான அனுபவங்களையும் நேரடியாகப் பெறுவது என்பது இயலாத காரியம். அப்படியான அனைத்து வித சாகச அனுபவங்களையும் பெற வேண்டுமெனில் இலக்கியத்தையே நாட வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள மக்களின் சமூகம், கலாசாரம் என மனிதர்களின் வாழ்வியலை வரலாற்று அறிவுடன் புரிய வைக்கிறது. இலக்கிய வாசகனால் அதன் பலனை முழுவதுமாக உணர்ந்திருக்க முடியும். வாழ்க்கை அனுபவம், உலக அறிவு என அனைத்துவிதமான அனுபவங்களையும் அறிவையும் பெற வேண்டும் எனில் இலக்கிய வாசிப்பு பழக்கம் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு...: பள்ளி வகுப்பு முடித்த பலரும் இன்று பொறியியல், மருத்துவம், கணினித்துறை சார்ந்த படிப்புகளை நோக்கியே அதிகம் செல்கின்றனர். இரண்டாவதாக வணிகவியல், பொருளியல், வரலாறு போன்ற பாடங்களைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், மொழி சார்ந்து இலக்கியம் தேர்வு செய்து படிப்பவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அதைப்பற்றிய புரிதல் இல்லாமையும் அது சமூகத்தில் கட்டமைக்கப்பட்டவிதமும்தான்.
"மொழியைப் பற்றி படிக்க என்ன இருக்கிறது?' என்று நினைப்பவர்கள் புத்தக வாசிப்பு உள்ளவர்களின் அனுபவத்தை கேளுங்கள். அவர்களது நடவடிக்கையை உற்றுநோக்குங்கள்.
மற்ற மாணவர்களிடம் இருந்து நீங்கள் தனித்து இருக்க வேண்டும் என்று விரும்பினால், இலக்கியத்தைத் தேர்வு செய்யுங்கள். இந்த சமூகத்தில் ஒரு படைப்பாளியாக உருவாக வேண்டும் என்று விரும்புபவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம்.
எந்த மொழியானாலும் சரி, இலக்கியம் படிக்கும் மாணவர்கள் அனைத்து விதமான எழுத்துகளின் வாசிப்பைப் பெற வேண்டும். அனைத்து எழுத்தாளர்களின் அனுபவங்களையும் பெற வேண்டும்.
சில எழுத்துகள் பயனற்றும் இருக்கலாம்.
அவற்றைத் தவிர்த்து பயனுள்ளனவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் அறிவு வேண்டும்.
வாசிப்பது என்பது மேலோட்டமாக அன்றி உள்வாங்கி உணரக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு வாசிப்பில் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எழுத்தாளர்களின் கருத்துகள் பற்றிய உங்களது விமர்சனங்களையும் எழுதி வைத்து விவாதிக்கலாம். மற்றவர்களின் புரிதலையும் பெறலாம்.
மாணவர்கள், வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். அதனை இலக்கியம் மூலமாக பெறும்போது சுவாரசியம் அதிகரிக்கிறது. கலந்துரை யாடல்களில் உங்களின் வலுவான தெளிவான கருத்துகளை முன்வைக்க முடியும். அறிவு வளர்ச்சி அடையும்போது பொது இடங்களில் பேச வேண்டிய தயக்கம் இருக்காது. சரியான கண்ணோட்டத்தில் ஒரு விஷயத்தை அணுக இலக்கிய வாசகனால் மட்டுமே முடியும்.
நீங்கள் எதிர்காலத்தில் ஒரு படைப்பாளியாக உருவாகும்போது உங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் சமூகத்தின் மீதான உங்களுடைய பார்வையையும் எழுத முடியும். எழுத்துக்கு அழிவில்லை. அது காலம் கடந்தும் பேசப்படும் படைப்பு. காலம் கடந்தும் கொண்டாடப்படும் விழா.
வாசிப்பு வேண்டும்: இலக்கியம் படிக்கவில்லை எனினும் இக்காலச் சூழலில் வாசிப்பு அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் இருந்து இலக்கிய அறிவைப் பெறுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இதனால் சிறுவயதிலேயே பகுத்தறியும் பண்பை அவர்கள் பெறுகிறார்கள். கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது, எதிர்காலப் பிரச்னைகளில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வை அடைகிறார்கள்.
பதின்பருவம் என்பது பலவிதமான பிரச்னைகளை உள்ளடக்கிய பருவம். பதின் பருவத்தினரை கையாள்வது பெற்றோருக்கு மிகவும் சவாலான காரியம்தான். ஆனால், அந்த வயதில் அவர்களை எளிதாகக் கையாள வேண்டுமெனில், இலக்கிய வாசிப்பு பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். அப்படிச் செய்தால் சவாலான சிக்கலான வாழ்க்கையை அவர்களே தனித்து எதிர்கொள்ள முடியும். வேடிக்கையாக அணுகப்படும் வாசிப்பு பின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்களை உணரச் செய்யுங்கள்.
இலக்கிய வாசிப்பு என்பது உங்களுக்கான மொழித்திறனையும் வளர்க்கக்கூடியது. வாசிப்பிற்கு பின் நீங்கள் பயன்படுத்தும் சொற்பிரயோகங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். சமூகத்தில் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும் விமர்சன ரீதியாக அவற்றை அணுகவும் அதற்கு உங்களுடைய தீர்வை முன்வைக்கவும் இலக்கியம் வழிகாட்டுகிறது.
வாசிப்பு ஏற்படுத்தும் அனுபவம் இந்த உலகத்தில் யாரும் கொடுக்க முடியாது. புத்தக வாசனை அறிந்தவன் வேறு எதற்கும் மயங்கமாட்டான்.
இலக்கிய வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக மாற வேண்டும். ஒரு மேம்பட்ட நாகரிக சமூகத்தை உருவாக்க இது அவசியமானதும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.