கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 41: மக்கள் வெள்ளம்!

பொருளாதார மேலாண்மைக்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, ஜனத்தொகை எந்த விகிதத்தில் பெருகுகிறது, எந்தெந்த துறைகளில் அதன் பாதிப்பு இருக்கும் என்பதைக் கணக்கிடுவதே. 
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 41: மக்கள் வெள்ளம்!

"பாரத சமுதாயம் வாழ்கவே!
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கு ஒரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே!'

என்று பாடினார் மகாகவி பாரதியார். 110 ஆண்டுகளுக்கு முன் அவர் பாடிய போது பாரத நாட்டின் ஜனத்தொகை முப்பது கோடி. இப்போதோ நாட்டின் ஜனத்தொகை 140 கோடி! உலகிலே சைனாவிற்கு அடுத்து அதிக ஜனத்தொகை உள்ள நாடு இந்தியா. மக்கள்பெருக்கம் எந்த ஒரு நாட்டிற்கும் ஒரு சவாலாகவே
இருக்கும்.

பொருளாதார மேலாண்மைக்கு முக்கியமாககவனத்தில் கொள்ள வேண்டியது, ஜனத்தொகை எந்த விகிதத்தில் பெருகுகிறது, எந்தெந்த துறைகளில் அதன் பாதிப்பு இருக்கும் என்பதைக் கணக்கிடுவதே.

எல்லா நாடுகளிலும் விவசாயத்தைச் சார்ந்தேசமுதாயம் வளர்ந்தது. குடும்பத்தில் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே பெற்றோருக்கு ஒத்தாசையாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டார்கள். குழந்தைகளால் சுமை இல்லை. அவர்களது உழைப்பு குடும்பத்திற்கு வலிமை சேர்த்தது. இத்தகைய ஜனத்தொகை வளர்ச்சி பொருளாதார மேம்பாட்டிற்கு உகந்ததாக அமைந்தது.


குடும்பங்களில் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள். ஏனெனில் போதுமான மருத்துவ வசதியின்மை காரணமாக பல குழந்தைகள் இறந்து போயின. முன்பெல்லாம் சராசரி இறப்பு வயது 35 ஆக இருந்தது. இப்போது அது கணிசமாக உயர்ந்துள்ளது. பிறப்பு,இறப்பு விகிதங்கள் ஜனத்தொகையின் அளவைநிர்ணயிக்கின்றன.

ஜனத்தொகை நிலைகளை ஆராய்வது பொருளாதார முடிவுகள் எடுப்பதற்கு இன்றியமையாதது. உலக ஜனத்தொகை எண்ணூறு கோடியை எட்டுகிறது. உலகில் எட்டில் ஒருவர் இந்தியர்! ஜனத்தொகையில் கூடுதலாக மக்கள் சேர்வது ஜனத்தொகை வளர்ச்சியைக் குறிக்கிறது. ஒவ்வொரு வருடமும் உலகில் சராசரி 8.3 கோடி ஜனத்தொகை அதிகமாகிறது. நூறு கோடியாக 1800 இருந்த உலக மக்கள் எண்ணிக்கை 7.9 கோடியாக 2020 வரை உயர்ந்துள்ளது.

ஜனத்தொகை வளர்ச்சியை பற்றி மால்தூஸ் என்பவர் எழுதிய ஆராய்ச்சி குறிப்பு பிரசித்தி பெற்றது. "ஜனத்தொகை, வடிவியல் முன்னேற்றம்- ஜாமெட்ரிக் ப்ரோக்ரெஷன் வகையில் பெருகும். ஆனால் உணவுபொருட்கள் நேரியலாக வளர்ச்சி அடையும். இதனால் மனிதனுக்கு உணவு எப்போதும் மக்கள் எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கும். உணவு தட்டுப்பாடுகாரணமாக பசி பட்டினி, வறுமை அதிகமாகும்'என்கிறார் மால்தூஸ்.

ஒரு நாட்டின் சந்தோஷம், குடும்பம், அமைதியான சூழல், வாழ்வாதாரம் இதில் மட்டும் அடங்கிவிடாது, ஜனத்தொகையின் அளவு உணவு உற்பத்திக்குநிகராக இருந்தால் தான் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்என்பது மால்தூசியன் வாதம். மேலும் உணவுஉற்பத்திக்கு தேவையான நிலம், காடுகள், மீன்வளம் காலப்போக்கில் புதுப்பித்துக் கொள்ளவல்லதுஎன்றாலும் அதன் பயன்பாடு அளவு கடந்த ஜனத்தொகை பெருக்கத்தை ஈடு கட்ட முடியாது. ஒரு நிலையில் மக்கள் வெள்ளம் சமுதாய வீழ்ச்சியில் அழியும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார் மால்தூஸ்.

ஆனால் மால்தூஸ் ஆரூடம் பொய்த்தது. எல்லா மூலதனத்திலும் மனிதவளம் என்ற மூலதனம் தான் சிறந்தது. மக்களது உழைப்பு, அவர்களது சிந்தனை, தேவைக்குஏற்றவாறு தொழில் நுட்பம், மதி நுட்பத்தோடு புதிய வார்ப்புகளை படைப்பதில் மனிதனுக்கு நிகரில்லை. அதன் விளைவாக மக்கள் ஜனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி, ரசாயன உரம் மூலம்அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பூச்சி கொல்லிகள் பயிர் சேதமடையாமல் பாதுகாத்து உரிய விளைச்சலை அளிக்கிறது. ரசாயன உரம் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு ஒரு பிரச்னை என்றாலும் கூட, அதிக விளைச்சல் வறுமையைப் போக்க சமய சஞ்சீவியாக துணை நிற்கிறது.

தொழில் புரட்சி ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் 18, 19 -ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட போதுவிவசாயத்தை விட்டு மக்கள் நகரங்களுக்கு அருகில் அமைந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார்கள்.

வேலையின் பளு காரணமாக குழந்தைகளைப் பெற்று கொள்வதை தள்ளிப் போட்டனர். கருத்தடை மற்றும் அளவான குடும்பம் பராமரிப்பது சுலபம் என்ற புரிதல்ஏற்பட்டதில் ஜனத்தொகை பெருக்கம் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது.

இளைய வயதினர் அதிகம் கொண்ட நாடு இரு வகையான பிரச்னையை எதிர் கொள்ள வேண்டும். இளைய சமுதாயத்திற்கு கல்வி, மற்றும் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அவர்கள் உழைப்பதற்கான வயது எட்டும் வரை வருவாய் ஒன்றுமின்றி அரசின் செலவினம் கூடும். அவர்கள் எதிர்காலத்தை வளமாக்க திட்டங்கள் வகுக்க வேண்டும். இரண்டாவதாக அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை உருவாக்கவேண்டும். இதை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் மால்தூஸ் சொன்ன அழிவுப் பாதையில் பயணிக்க
நேரிடும்.

பல வளர்ந்து வரும் நாடுகளில் ஜனத்தொகைபெருக்கம் ஒருபுறம், அதேசமயம் அவர்களது அடிப்படை வசதிகளைக் கொடுக்க முடியாமல் ஒரு மந்த நிலை ஏற்படுகிறது. இந்த பின்தங்கிய நிலையை ஆப்ரிக்காமற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளில் காணலாம்.

அமெரிக்காவில் உள்ள "பாபுலேஷன் இன்ஸ்டிட்யூட்' குடும்ப கட்டுப்பாடு, பெண்களுக்கு கருத்தடைஉபயோகிக்கும் உரிமை, அவர்களது உடல் நலம் பேணுவது, ஜனத்தொகை பெருக்கத்தின் தாக்கம்இவற்றை ஆராய்ந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு அறிக்கையை உலக நாடுகளுக்கு அளிக்கிறது. அவர்களது இந்த வருடஅறிக்கையில் வரும் ஆண்டுகளில் ஜனத்தொகைப் பெருக்கத்தால் இருபது நாடுகள் அதிகமாக பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இருபது நாடுகளும் ஆப்ரிக்காவிலும் மத்தியகிழக்காசிய நாடுகளில் உள்ளன. தெற்கு சுடான்,சோமாலியா, நைஜர், மோசமாக உள்ள மூன்று நாடுகள். இந்த மூன்று நாடுகளிலும் அடுத்த முப்பது ஆண்டுகளில் ஜனத்தொகை மூன்று மடங்காக உயரும். அதனால்தண்ணீர், உணவு தட்டுப்பாடு, வறுமை மிக கொடுமையாக மக்களைப் பாதிக்கும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான், இராக் நாடுகளிலும் அதிக ஜனத்தொகையால் வறுமை, பசிக்கொடுமை மக்களைப் பாதிக்கும்.

சுமுகமான ஒரு சூழல் இருந்தால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் உண்டாகும். இந்த சராசரி எதிர்பார்ப்பு பல நிலைகளில் மாறுபடுகிறது. பெண்களின் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டாலும், குறைந்த வயதிலேயே திருமணம் செய்து பெண்களை அனுப்பும் பழக்கம் பல நாடுகளில், அதிலும் வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகளில் காணப்படுகிறது. விளைவுகளை எதிர்கொள்ளும் சக்தி இருந்தால்பிழைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வறுமைபிடித்தும் கொள்ளும் என்பது நிபுணர்களின் கருத்துஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் பெண்கள்கருத்தரிப்பதைத் தவிர்த்ததால் ஜனத்தொகை கட்டுக்குள்ளானது. அதே வகையில் ஜனத்தொகை கட்டுப்பாட்டில் பின் தங்கிய இருபது நாடுகளில் அவசரநடவடிக்கையாக குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடித்தால் மக்கள் பெருக்கத்தால் விளையும் பாதிப்புகளிலிருந்து மீளலாம். இதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஆனால் கடைக்கோடியில் வாழும்மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மருத்துவ வசதிகள்
சுலபமாகச் சென்றடைவதில்லை.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பின்தங்கிய நாடுகளில் வாழும் சுமார் 25 கோடி பெண்கள் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்க நினைத்தாலும் கருத்தடை சாதனங்கள் பற்றிய புரிதலும் இல்லை. கிடைப்பதும் இல்லை என்றுதெரிவித்துள்ளது. ஆண் ஆதிக்கம் நிறைந்த பின் தங்கிய சமுதாயங்களில் ஆண்கள் குடும்பக் கட்டுபாடு முறைகளை உபயோகிப்பதில்லை. இந்த நாடுகளுக்கு குடும்ப கட்டுப்பாடு சாதனங்கள் மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுக்க சுமார் 500 கோடி அமெரிக்க டாலர்செலவாகும். ஆனால் இது அவசிய செலவு. எல்லா நாடுகளும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் உலகில் எங்கு பிரச்னைஎன்றாலும் அதன் பிரதிபலிப்பை, வேதனையைஎல்லாரும் அனுபவிக்கவேண்டிய நிலையில் இருப்பதால், ஐக்கிய நாடுகள் சபை ஜனத்தொகை பெருக்கத்தை தடுக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி வருகிறது.

நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜனத்தொகை 34 கோடி. மற்ற பின் தங்கிய நாடுகள் போல் நமதுநாட்டிலும் முப்பது ஆண்டுகளில் ஜனத்தொகை இரட்டிப்பானது- 77-இல் அறுபத்தைந்து கோடி 2010இல் 120 கோடி இப்போது 140 கோடி! குடும்பக்கட்டுப்பாடு, "நாம் இருவர் நமக்கிருவர் " "ஹம் தோ ஹமாரா தோ'என்ற முழக்கத்தோடு நாடெங்கிலும் குடும்பத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, அவரது மகன் சஞ்சய் காந்தி காங்கிரஸ் இளைஞரணி தலைவரின் ஆலோசனையில், "கட்டாய குடும்பக் கட்டுப்பாடு இரண்டு குழந்தைகள் பிறப்பிற்கு பிறகு' என்ற " நாஸ் பந்தி' திட்டம் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் பின் தங்கிய படிப்பறிவில்லா சமுதாயங்களில் இத்தகைய நடவடிக்கை தேவைப்பட்டது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியமாநிலங்கள். அதற்கு முக்கிய காரணம், மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் இளம் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு நல்ல வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுத்து அரசு திட்டம் நிறைவேற்ற அயராது பாடுபட்டார்கள். தமிழ்நாட்டில் அப்போதைய சுகாதார அமைச்சர்டாக்டர் ஹண்டே பிரத்யேக கவனம் செலுத்தினார். டி.வி.ஆண்டனி என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை ஒரு தாரக மந்திரமாக தமிழகம்எங்கும் எடுத்துச் சென்று செயல்பாடுகளை கூராய்வுசெய்தார். இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கையால் ஜனத்தொகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டு அதன் பலன் தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தில் பிரதிபலித்தது.

ஜனத்தொகை அதிகரிப்பில் தற்காலிக பயன்,உழைக்கும் கரங்களான இளைய சமுதாயத்தின் மூலம் நாட்டுக்குக் கிடைக்கும். இளைய சமுதாயத்தின் உழைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும். தற்போது இந்திய ஜனத்தொகையின் சராசரி வயது 28என்றிருப்பதால் இந்த பயனை அதிக அளவில் பெறும்உச்சநிலையில் இருக்கிறோம். இதோடு ஜனத்தொகை கட்டுப்பாடும் இணைந்தால் பொருளாதார வளர்ச்சிவிகிதம் இன்னும் அதிகரிக்கும் என்பது நிபுணர்கள் கருத்து.

வேகமான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய தொழிற்சாலைகள், நீர்பாசனம், சாலைகள், கல்வி, திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நிகர முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் ஜனத்தொகை பெருக்கத்தால் குழந்தைகள் பராமரிப்பு, நாட்டின் தற்போதைய நுகர்வுக்கே முதலீடுகள் செய்ய வேண்டி வரும். வருங்கால வளர்ச்சிக்கு முதலீடு செய்ய முடியாது.

நார்வே, ஸ்விட்சர்லாந்த், பிரான்ஸ் போன்றவளர்ச்சியடைந்த நாடுகளில் வேறு விதமான பிரச்னை. அங்கு குடும்பம் சுருங்கி தனித்து வாழ்கிறார்கள்.குழந்தைகள் பெற்று கொள்வதற்கு அரசு மானியம் கொடுக்கிறது!

ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த பணக்கார நாடுகள் நிதியுதவி அளிக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு உதவி என்பது பணக்கார நாடுகளின் ஏழைகளின் பணம், ஏழை நாடுகளில் உள்ள பணக்காரர்களுக்குச் சென்றடைகிறது!

சின்னதொரு குடும்பம் நன்மை பல கொடுக்கும்!

நல்லதோர் உலகம் செய்வோம்!

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: தமிழ்நாடு காவல் (சீர்திருத்த) சட்டம் நவம்பர் 8, 2013ல் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாரக் கேள்வி: மால்தூஸ் எந்த நாட்டைசேர்ந்தவர்?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com