வெளிப்படுத்துங்கள்... உணர்வுகளை!
By சுரேந்தர் ரவி | Published On : 08th February 2022 06:00 AM | Last Updated : 07th February 2022 09:54 PM | அ+அ அ- |

மனத்தை ஒருமுகப்படுத்துதல் என்பது இளைஞர்களுக்குத் தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது. பல்வேறு விஷயங்களில் மனம் அலைபாய்வதும், குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி மிகவும் அதிகமாக யோசிப்பதும் மனநலனைப் பாதிக்கிறது. மனநலனைப் பாதுகாப்பது உடல்நலனைப் பாதுகாப்பதைப் போல மிகவும் அவசியமானது.
உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பலரும் மனநலன் குறித்து கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு நாளும் மனதை நலமுடன் பாதுகாப்பதற்கான செயல்களில் ஈடுபட வேண்டியது அவசியம். வாகனங்களில் எரிபொருள் தீரும் நிலையில் இருந்தாலோ அல்லது தீர்ந்துவிட்டாலோ வாகனம் முறையாக இயங்காது. அதுபோலவே மனம் முறையாக இருந்தால்தான், அன்றாடச் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்த முடியும். இல்லையெனில் வாகனம் ஓடாமல் நின்றுவிடுவதைப் போல நாமும் தேங்கிவிடும் சூழல் உருவாகும்.
மகிழ்ச்சியாக இருங்கள்: மனநலனைப் பாதுகாப்பதற்கான முக்கியமான விஷயங்களில் ஒன்று, மகிழ்ச்சியாக இருப்பது. அன்றாடம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களைச் செய்ய வேண்டும். அதுவே நமது ஆற்றலை அதிகரித்து மேலும் திறம்படப் பணியாற்ற வைக்கும். பாடல் கேட்பது, இசையை ரசிப்பது, இயற்கை அழகை ரசிப்பது, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்.
எவருக்கு எது மகிழ்ச்சியைத் தரும் என்பது தனிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்பு சார்ந்தது. ஒருவருக்கு மகிழ்ச்சி தருவது மற்றொருவருக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடும். எனவே, நமக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு அறிவதை விட, நம்மை ஆராய்வதன் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும்.
நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களில் நீண்ட நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.
மனஅழுத்தத்தைக் கண்காணியுங்கள்: மனஅழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டியது அவசியம். தினமும் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? குறிப்பிட்ட சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறோம்? இன்னும் சிறப்பாக எவ்வாறு எதிர்கொண்டிருக்க முடியும்? நமது மனஅழுத்தம் எந்த நிலையில் உள்ளது? இவற்றை தினமும் ஆராய்வது அவசியம். மனநலனைப் பாதுகாப்பதில் இந்த ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒருவேளை மனஅழுத்தத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால், அதில் இருந்து மீள்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
வேலையின் காரணமாக மன அழுத்தம்: வேலையின் காரணமாக தற்போது இளைஞர்கள் பலர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென பலர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், வாழ்க்கையின் ஒரு பகுதிதான் வேலை என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர்.
எனவே, முறையாக நிர்ணயிக்கப்பட்ட பணிக் காலத்தில் மட்டும் வேலைகளை மேற்கொண்டு மீதமுள்ள நேரத்தை குடும்பத்துக்காகவும், சுயவளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அலுவலகப் பணிக்கும் மற்ற பணிகளுக்கும் இடையேயான எல்லையை முறையாக வகுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒன்று மற்றொன்றில் குறுக்கே புகுந்து மொத்தத்தையும் பாழ்படுத்திவிடும்.
வீட்டில் இருந்து வேலை: வீட்டில் இருந்து பணியாற்றினால், அலுவலகப் பணியை மேற்கொள்வதற்காகத் தனியிடத்தைத் தேர்வு செய்து கொள்வது அவசியம்.
அலுவலகப் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்கு செல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது சுயமுன்னேற்றத்துக்கும் பெருமளவில் உதவும்.
திட்டமிட்டது எல்லாம் நடக்காது: சில நேரங்களில் நாம் திட்டமிட்டதை முறையாகச் செயல்படுத்த முடியாது. வெளிப்புறக் காரணிகள் நமது திட்டத்தை சீர்குலைக்கலாம் அல்லது அக்காரணிகள் குறித்து அறியாமல் நாம் திட்டத்தை வகுத்திருக்கலாம். அவ்வாறான சூழல் மனஅழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, இயல்பாக நடப்பதை அவ்வாறே ஏற்றுக் கொள்வது நல்லது. அது அழுத்தத்தைக் குறைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று பொறுமையாக சிந்திக்க வழிவகுக்கும்.
உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்: மனதை எப்போதும் கட்டுப்படுத்த முயல வேண்டாம். மாறாக மனதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். பிரச்னைக்கும் மனஅழுத்தத்துக்குமான காரணம் என்ன என்பதை முறையாகக் கண்டறிய வேண்டியது அவசியம். அதையடுத்து என்ன தோன்றுகிறதோ அதை செய்துவிடுங்கள். அழுகையோ கோபமோ தைரியமாக அதை வெளிப்படுத்துவது அவசியம். உணர்வுகளை முறையாக வெளிப்படுத்துவதையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளைக் கையாளவும் தெரிந்துகொண்டாலே மனநலனைப் பாதுகாத்துவிட முடியும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...