மூளைக்குள் நடப்பதைக் கண்டறியும் கருவி!

உலக அளவில் 45 கோடி மக்கள் நரம்பு தொடர்பான நோய்கள் மற்றும் மனநோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூளைக்குள் நடப்பதைக் கண்டறியும் கருவி!

உலக அளவில் 45 கோடி மக்கள் நரம்பு தொடர்பான நோய்கள் மற்றும் மனநோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிலும் மூளையில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் குறைகளால் தோன்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அதிகம்.
வலிப்பு நோயை வருமுன் கண்டறிவதற்கான கருவிகள் மிகவும் குறைவு. மூளை நரம்புகளின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்கான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார் கார்த்திக் ராகவேந்திரன்.
"நியூரோஸ்டெல்லர்' என்ற நிறுவனத்தை சென்னையில் நடத்தி வரும் அவர் உருவாக்கியுள்ள அந்தக் கருவியின் மூலம், மூளையின் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
இது தொடர்பாக கார்த்திக் ராகவேந்திரன் நம்மிடம் பேசியதிலிருந்து....
""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். மதுரையில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, தஞ்சாவூரில் உள்ளசாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் பயோடெக்னாலஜி படிப்பை 2019 - இல் முடித்தேன். நான் படித்த படிப்புக்கு ஓரளவே தொடர்புள்ள நியூரோ சயின்ஸின் மீது எனக்கு அளவுக்கடங்காத ஆர்வம் இருந்தது. எனவே அது தொடர்பான உயர்கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்கு முன்பாக நியூரோ சயின்ஸ் துறை பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நியூரோ சயின்ஸ் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து அதைக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்தவரை அப்படி ஒரு நிறுவனமும் இல்லை.
அப்போதுதான் இந்திய நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.வி. ஸ்ரீனிவாசனின் தொடர்பு கிடைத்தது. அவர் நரம்பியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரிடம் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தேன்.
வலிப்பு நோயைக் கண்டறிவதற்கான கருவி எதுவும் இல்லை என்பது அப்போதுதான் தெரிய வந்தது. இதனால் நிறைய நோயாளிகள் பாதிக்கப்
பட்டனர். எனவே வலிப்பு நோயைக் கண்டறிவதற்கான கருவியை உருவாக்க வேண்டும் என்ற நினைத்தேன். அதை ஒரு புராஜெக்ட் மாதிரி எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன்.
கல்லூரியில் என்னுடைய வகுப்புத் தோழியான தனுஷ்யாஸ்ரீயும் என்னுடைய இந்த ஆராய்ச்சியில் இணைந்து கொண்டார். இருவரும் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.
கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆராய்ச்சிக்கு நிறைய நேரத்தை ஒதுக்க முடிந்தது.
இதற்கிடையில் நியூரோடெக்எக்ஸ் என்ற உலக அளவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதில் இணைந்து கொண்டோம். சுமார் 6 ஆயிரம் நரம்பியல் ஆராய்ச்சி ஆர்வலர்கள் உலகம் முழுக்க அதில் உள்ளனர். அவர்களின் தொடர்புகளினால் எங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஐஐடி - மெட்ராஸ் வருங்காலத் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது. புதிய இளம்தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் ஐஐடி - மெட்ராஸ் நிறைய உதவிகளைச் செய்கிறது. அங்கு பணிபுரியும் பேராசிரியர்களின் ஆலோசனைகள் எங்களுக்கு உதவியாக இருந்தன.
இந்நிலையில் நாங்கள் கண்டுபிடிக்க இருக்கும் கருவியை உருவாக்க இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறையைச் சேர்ந்த பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சிலின் (பிஐஆர்ஏசி) மானியம் ரூ.50 லட்சம் எங்களுக்குக் கிடைத்தது.
கருவியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கினோம். நிறைய மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்டோம். தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அதன் விளைவாக இந்த கருவியை உருவாக்கினோம்.
இந்தக் கருவியின் மூலம் மூளையில் உள்ள நரம்புகளின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கருவியைத் தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். மூளை நரம்புகளின் மின்னியக்கச் செயல்பாடுகளை இந்தக் கருவியில் உள்ள சென்சார்கள் கண்டறியும். அவ்வாறு கண்டறிந்தவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் - ஐஓடி தொழில்நுட்பத்தின் மூலம் -மூளைக்கு வெளியில் உள்ள கம்ப்யூட்டர் அல்லது ஆன்ட்ராய்டு போனுக்குத் தெரிவித்துவிடும். அவ்வாறு தெரிவிப்பதற்குத் தேவையான செயலியையும் நாங்களே உருவாக்கியிருக்கிறோம்.
இந்தக் கருவியின் மூலம் மூளை நரம்புகளில் பாதிப்பு, மூளையின் அசாதாரண செயல்பாடுகள் ஆகியவற்றை உடனே தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தெரிந்து கொள்வதன் மூலம் வலிப்பு நோய், மன அழுத்தம் ஏற்படுவதற்கு முன்பே அதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து உரிய மருத்துவ நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள முடியும்.
மேலும், இயல்பான மூளையின் இயக்கத்துக்குத் தேவையான மின்தூண்டல்களை மட்டும் இந்தக் கருவியின் மூலம் ஏற்படுத்த முடியும். மாறுபட்ட மின்தூண்டல் அளவுகள் இருந்தால் அதை மாற்ற முடியும். இவ்வாறு நரம்பியல் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க இந்தக் கருவி உதவுகிறது.
தற்போது இந்தக் கருவி பரிசோதனை அளவிலேயே உள்ளது. சென்சார்கள் மூலம் கிடைக்கும் சிக்னல்கள் சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொண்டு இருக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பல வியக்க வைக்கும் கருவிகள் உருவாக்கப்படுகின்றன. மனிதன் நினைப்பதை இந்தக் கருவியின் மூலம் தெரிந்து கொண்டு அதை வெளியில் செயல்பட வைக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்கால ஆராய்ச்சிக்கென திட்டமிட்டு இருக்கிறோம். உதாரணமாக வீட்டில் லைட் எரிய ஸ்விட்ச் போட வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், தானாகவே ஸ்விட் ஆன் ஆக வேண்டும். அதாவது, அவருடைய எண்ணத்தை
மூளையில் ஏற்படும் சிக்னல்களின் மூலமாக இந்தக் கருவி தெரிந்து கொண்டு, அதை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் துணையுடன் செயல்படுத்த வேண்டும். அந்த அளவுக்கு இந்தக் கருவியை மேம்படுத்துவதே எங்களின் எதிர்காலத் திட்டம்'' என்கிறார் கார்த்திக் ராகவேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com