உடல் நலம்... மனநலம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கை முறை பெரிதும் மாறிவருகிறது. மனிதர்களின் வேலையைக் குறைப்பதற்காகப் பல்வேறு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.
உடல் நலம்... மனநலம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கை முறை பெரிதும் மாறி வருகிறது. மனிதர்களின் வேலையைக் குறைப்பதற்காகப் பல்வேறு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. மனிதர்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. முக்கியமாக உடலுழைப்பு பெருமளவில் குறைந்துள்ளது. துணி துவைப்பது முதல் ராக்கெட் விடுவது வரை எல்லாத்துறைகளிலும் தொழில்நுட்பங்கள் ஆட்டிப் படைத்து வருகின்றன.

மக்களின் உடலுழைப்பு குறைந்திருந்தாலும், உடற்பயிற்சியின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. பலர் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதய நோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமல் தடுப்பதில் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. உடற்பயிற்சியால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு பல்வேறு நன்மைகளும் ஏற்படுகின்றன.

ஆனால், உடற்பயிற்சியால் மனதுக்கு ஏற்படும் நலன் குறித்து பலர் அறிவதில்லை. உடற்பயிற்சி மனநலனை மேம்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முக்கியமாக மனஅழுத்தத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு உடற்பயிற்சி சிறந்த வழியாக உள்ளது. தற்போதைய பணிச்சூழல் பலருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. அதீத பணிச்சுமை, இரவு நேரப் பணி, நகர வாழ்க்கை, குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மனஅழுத்தத்துக்குக் காரணமாகின்றன.

அதீத மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனைத் தருமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனநல ஆலோசனை தேடி வருபவர்களை முதலில் உடற்பயிற்சி செய்யுமாறு வலியுறுத்து வதாகவும் மனவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பதற்றமான உணர்வையும் உடற் பயிற்சி சீர் செய்கிறது.

உடற்பயிற்சி நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கிறது. இளைஞர்கள் பலர் இரவில் தூங்குவதைக் காலவிரயம் என எண்ணுகின்றனர். சிலர் இரவில் சுற்றுச்சூழல் அமைதியாக இருப்பதால், அந்நேரத்தில் படித்தால் நல்லது;  கவனம் சிதறாது என்று  எண்ணுகின்றனர். ஆனால், இரவு என்பது முற்றிலும் ஓய்வுக்கான நேரம்.

சில இளைஞர்கள் படுத்தவுடன் தூங்கிவிடுவர். சிலருக்கு நீண்ட நேரம் கழித்தே தூக்கம் வரும். பலருக்கு சீரான தூக்கமும் கிடைப்பதில்லை. அடிக்கடி விழிப்பு வந்து தூக்கத்தைக் கெடுத்துவிடும். இருள் சூழ்ந்த அறையில் குறைந்தபட்சம் ஏழரை மணி நேரம் தூங்குவது அவசியம். அவ்வாறு தூங்கினால் மட்டுமே அடுத்தநாள் முழுவதும் களைப்பின்றி பணியாற்ற முடியும். பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

உடற்பயிற்சி செய்வதன் மூலமாக தூக்கத்தின் திறனை மேம்படுத்த முடியும். உடற்பயிற்சி செய்பவர்கள் நல்ல தூக்கத்தைப் பெறுவதாக ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது என்பதும் அவர்களின் ஆலோசனையாக உள்ளது. உடற்பயிற்சி செய்த பிறகு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். எனவே, தூங்குவதற்கு சற்று முன்பு உடற்பயிற்சி செய்தால், சரியான தூக்கம் கிடைக்காது.

உடற்பயிற்சி மனத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது. உடலில்
"என்டோர்ஃபின்' என்ற வேதிப்பொருளின் சுரப்பை உடற்பயிற்சி மேம்படுத்துகிறது. அந்த வேதிப்பொருள் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. எனவே, உடற்பயிற்சியின் காரணமாக மனம் நிம்மதி அடைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வது நினைவுத் திறனையும், படிக்கும் திறனையும் மேம்படுத்தும். அதன் காரணமாகவே மாணவர்கள் ஓடி, ஆடி விளையாட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விளையாட முடியாவிட்டாலும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நினைவுத்திறனை மேம்படுத்துவதில் சிறந்த பலனை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்பயிற்சி தன்னம்பிக்கையை வளர்க்கிறது. உடற்பயிற்சி செய்வதால் எடை கட்டுக்குள் இருக்கும்; மனஅழுத்தம் இருக்காது; நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இத்தகைய பலன்கள் நம்மை தன்னம்பிக்கை பெறச் செய்யுமென மனவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலையும் மனதையும் தனித்தனியே பிரித்துவிட முடியாது. என்றாலும், இரண்டுக்கும் வெவ்வேறு தன்மைகள் உள்ளன.  உடல் மனதைப் பாதிப்பதும், மனம் உடலைப் பாதிப்பதும் இயல்பான செயல்களே. மனதளவில் எவ்வளவு உயர்ந்த எண்ணங்களை உடையவராக இருக்கிற ஒருவர், உடல் நலத்தைப் பேணவில்லை என்றால்,  அவருடைய உயர்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போய்விடும்.  அதுபோன்று, ஆரோக்கியமான உடலை வைத்திருக்கிற ஒருவரின் மனதில் நல்ல எண்ணங்கள் இல்லையென்றால்,  அந்த உடலால் எந்த நன்மையும் இல்லை என்பது மட்டுமல்ல,  பிறருக்குத் தீங்கு செய்பவராகவே அவர் இருப்பார்.

உடற்பயிற்சியால் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் பலன்கள் ஏற்படுகின்றன. நாள்தோறும் குறைந்தபட்சம் அரை மணி நேரத்தையாவது உடற்பயிற்சிக்கென ஒதுக்க வேண்டும். அதே நேரத்தில் அளவுக்கு மீறியும் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. எதற்கும் ஓர் எல்லை உள்ளது. நம் உடல் எவ்வளவு ஒத்துழைக்குமோ அதுவரை தான் அதை வளைக்க முடியும். அளவை மீறிய உடற்பயிற்சி ஆபத்தில் முடியும் என்பதையும் இளைஞர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com