மணலுக்குப் பதிலாக பிளாஸ்டிக்!

உலக அளவில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துவதில் பிளாஸ்டிக் மிக முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது. பிளாஸ்டிக் மாசு அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12 - ஆவது இடத்தில் உள்ளது. 
மணலுக்குப் பதிலாக பிளாஸ்டிக்!

உலக அளவில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துவதில் பிளாஸ்டிக் மிக முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது. பிளாஸ்டிக் மாசு அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12 - ஆவது இடத்தில் உள்ளது.

பிளாஸ்டிக் பைகளை குப்பையில் போட்டுவிடுகிறோம். குப்பையை எரிக்கும்போது பிளாஸ்டிக் பைகளும் சேர்ந்து எரிகின்றன. அதனால் காற்றில் மாசு கலக்கிறது. மண்ணில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் நீண்டகாலம் மக்குவதில்லை. இதனால் மழை நீர் மண்ணுக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் இதனால் குறைந்துவிடுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால், பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் அளவு குறையுமே தவிர, பிளாஸ்டிக் பயன்பாடு குறையப் போவதில்லை. உதாரணமாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களின் பிளாஸ்டிக்கைக் கொண்டு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைச் செய்யலாம். மறுசுழற்சி முறை கூட பிளாஸ்டிக் பயன்பாட்டில் பெரிய அளவுக்கு மாறுதல்களைக் கொண்டு வரப் போவதில்லை.

எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் பிளாஸ்டிக்கால் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்ற நிலையே இப்போது உள்ளது.

இன்னொருபுறத்தில் மக்கள் தொகை பெருக மக்கள் குடியிருக்கும் கட்டடங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. கட்டடங்கள் கட்ட நாம் மணலைப் பயன்படுத்துகிறோம். ஆறுகளில் இருந்து மணலை கொள்ளையடித்து கட்டடங்கள் கட்டும்போது, ஆற்றின் கீழுள்ள நிலத்தடி நீரின் அளவு குறைந்து போகிறது. நம்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 70 மில்லியன் டன் மணலை கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்துவது ஒவ்வோராண்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

பிளாஸ்டிக் பயன்பாடு, மணலைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டையும் முடிந்த அளவுக்குக் குறைத்தால்தான் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும். இந்த அடிப்படையில் சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்து இருக்கின்றனர். மணலுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் அந்த புதிய முறையைப் பற்றி அக்கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறைத் தலைவர் ஆர்.மாலதி நம்மிடம் கூறியதிலிருந்து...

""நீண்ட காலமாகவே எங்கள் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் ஆராய்ச்சிகளில் ஆர்வமுடையவர்களாக இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவைக் குறைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாம் கட்டடங்கள் கட்டுவதற்காக பயன்படுத்தும் மணலின் அளவும் ஒவ்வோராண்டும் அதிகரித்து வருகிறது.

கட்டடம் கட்ட பயன்படுத்தும் கான்கிரீட்டில் சிமெண்ட், மணல் கலக்கப்படுகின்றன. கான்கிரீட்டில் கலக்கப்படும் மணலின் அளவைக் குறைக்க என்ன செய்யலாம் என்றும் யோசித்தோம்.

இந்த நோக்கத்தோடு நாங்கள் ஆராய்ச்சியில் இறங்கினோம். மணலுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தினால் என்ன? என்று எங்களுக்குத் தோன்றியது.

அதற்கு முதல்படியாக மணலின் அளவைக் கணக்கிட்டோம். சுமார் 4.75 மி.மீ. அளவுக்கு இருந்தது. பிளாஸ்டிக்கை மணலின் அளவுக்குக் கொண்டு வந்து அதை சிமெண்டுடன் கலந்து பார்க்கலாம் என்று முடிவு செய்து செயலில் இறங்கினோம்.

அதிக அளவு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை நாம் மண்ணில் தூக்கியெறிகிறோம். இவ்வாறு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்தோம். அதை துண்டு துண்டாக உடைக்கும் இயந்திரத்தில் போட்டு, மணலின் அளவுக்கு அதாவது 4.75 மி.மீ. அளவுக்கு உடைத்தோம். கிட்டத்தட்ட மணலைப் போலவே அது இருந்தது. பிறகு அந்த பிளாஸ்டிக்கை சிமெண்ட், தண்ணீருடன் கலந்து கான்கிரீட்டை உருவாக்கினோம்.

இதைப் பல்வேறு முறைகளில் சோதனை செய்து பார்த்தோம். கான்கிரீட்டில் மணலுக்குப் பதிலாக முதலில் 10 சதவீதம் பிளாஸ்டிக் தூளைக் கலந்து சோதித்துப் பார்த்தோம். பிறகு 20 சதவீதம் பிளாஸ்டிக் தூளைக் கலந்து சோதனை செய்து பார்த்தோம். இறுதியில் மணலுக்குப் பதிலாக 70 சதவீதம் பிளாஸ்டிக் தூளைக் கலந்து கான்கிரீட்டை உருவாக்கினோம்.

இந்த கான்கிரீட் கலவை தயார் செய்யும்போது சிமெண்ட் தனியாக, பிளாஸ்டிக் தூள் தனியாக என்று வைத்துக் கொண்டு கலந்தோம். பிளாஸ்டிக் தூளை தண்ணீரில் போட்டவுடன் அது மிதந்தது. அதன் பிறகு செயல்முறையை மாற்றினோம். சிமெண்டுடன் பிளாஸ்டிக் தூளை முதலில் கலந்துவிட்டு, அதன் பிறகு தண்ணீரை அதில் சேர்த்தோம். இப்போது பிளாஸ்டிக் தூள் கலந்த கான்கிரீட் உருவாகிவிட்டது.

பின்னர் அதை தரையில் போடக் கூடிய பேவர் பிளாக்குகள் மற்றும் ப்ரீகாஸ்ட் செங்கற்கள் தயாரிப்பதில் பயன்படுத்திப் பார்த்தோம்.

ஒரு கன மீட்டர் கான்கிரீட் கலவை தயாரிப்பதற்கு 2 ஆயிரத்திலிருந்து 2, 500 கிலோ வரை மணல் பயன்படுகிறது. அதே தரம் உள்ள கான்கிரீட் கலவையைத் தயாரிக்க 2,100 கிலோ உள்ள பிளாஸ்டிக் தூள்கள் பயன்படுகின்றன.

இந்த ஆராய்ச்சி 2019 -இல் தொடங்கியது. 2022 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற்றது. இந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையையும் பெற்றுவிட்டோம்.

இந்த கண்டுபிடிப்பினால் கான்கிரீட்டில் பயன்படுத்தப்படும் மணலின் அளவை வெகுவாகக் குறைக்க முடியும். அதனால் மணலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும். அதுபோன்று, தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கான்கிரீட் செய்ய பயன்படுத்துவதால் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள், பிவிசி குழாய்கள் என எந்த பிளாஸ்டிக்கையும் இதற்காகப் பயன்படுத்தலாம்.

இந்த ஆராய்ச்சியை எங்கள் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர். செந்தில்குமார், நான், ஆராய்ச்சி மாணவர்கள் கருப்பசாமி, கே.தினேஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழு மேற்கொண்டது.

இந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கான்கிரீட்டை அதிக அளவில் தயாரிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். பெரிய அளவுக்கு குளிர்பானங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இந்த முறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டு எங்களை அணுகியுள்ளது.

நாங்கள் உருவாக்கியுள்ள கான்கிரீட்டைப் பயன்படுத்தி தற்போது தரையில் போடப்படும் பேவர் பிளாக்குகளை அதிக அளவில் தயாரிக்க முடியும். பூங்காக்கள், பெரிய வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சாலையோர நடைமேடைகள் ஆகியவற்றில் இந்த பேவர் பிளாக்குகளைப் பயன்படுத்தலாம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com