ஆடிக் காற்றில் அம்மி பறக்கிறதோ இல்லையோ நம் வீட்டு பெண்கள் ஜவுளிக்கடைகளை நோக்கிப் படையெடுப்பது வாடிக்கை. தீபாவளிக்கு புதுப் புடவை வாங்கவிட்டாலும் கூட மனதை தேற்றிக்கொள்வார்கள். ஆனால் ஆடித் தள்ளுபடியில் ஏதாவது வாங்கவிட்டால் அவ்வளவுதான் - மனமுடைந்து போகிறவர்கள் ஏராளம். அதனால்தான் ஆடித் தள்ளுபடி சீசனில் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
÷ஆடி மாதம் பிறப்பதற்கு முன்னரே தள்ளுபடி விற்பனை பற்றிய விளம்பரங்கள் வரத் தொடங்கிவிடுகின்றன. ஜவுளிக் கடைகள் மட்டுமின்றி இப்போது வீட்டு உபயோகப் பொருள்களுக்கும் ஆடித் தள்ளுபடி விற்பனை அமோகமாக உள்ளது.
அது என்ன ஆடியில் மட்டும் தள்ளுபடி?
பொதுவாக ஆடி மாதத்தில் எந்தவொரு சுபகாரியங்களையும் நடத்தமாட்டார்கள். ஆடி மாதம் பீடை மாதம் என்ற கருத்து நிலவுவதே இதற்கு முக்கியக் காரணம். இதனால் ஆடி மாதத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். பீடை மாதத்திலும் விற்பனையை அதிகரிக்க வர்த்தகர்கள் வகுத்த வியூகம்தான் ஆடித் தள்ளுபடி. விற்பனையாகாமல் தேங்கிப் போகும் சரக்குகளை ஆடியில் தள்ளிவிட்டால் அடுத்து வரும் பண்டிகை காலங்களுக்கு புதிய சரக்குகளை வாங்க ஏதுவாக இருக்கும்.
÷விலை போகாத சரக்குகள் தான் ஆடியில் விற்பனை செய்யப்படுமா? என்றால் ஆரம்பத்தில் அதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஆடி தள்ளுபடி விற்பனை. ஆனால் காலப்போக்கில் இதிலும் போட்டிகள் காரணமாக வியாபாரிகள் தங்களது லாபத்தில் ஓரளவு குறைத்துக் கொண்டு பொருள்களை விற்பனை செய்வதால் நல்ல பொருள்களும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.
எப்படிபட்டவற்றை வாங்கலாம்?
தள்ளுபடி விலையில் விற்கப்படும் பெரும்பாலான பொருள்கள் சிறிய அளவிலாவது சேதமடைந்திருக்கும் அல்லது தரத்தில் ஏதாவது குறை இருக்கும். எனவே அது புடவையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் சரி சேதப்பட்டிருக்கிறதா சேதம் எந்தளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பிரபல நிறுவனங்கள் குறிப்பிட்ட மாதத்தில் சில சலுகைகளை அறிவிக்கும். அப்போது இந்நிறுவனத் தயாரிப்புகளுக்குக் கிடைக்கும் சலுகை வாடிக்கையாளர்களுக்கு லாபமாக அமையும்.
இதுபோல பிரபல நிறுவனத் தயாரிப்புகளின் விலை அதிகமாக இருக்கும். சிறிய சேதம் காரணமாக அவை ஆடித் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். உதாரணத்திற்கு ஷோ கேசில் வைக்கப்பட்ட சேலை, அல்லது சட்டை, பேண்ட் இவற்றில் சிறிதளவு அழுக்கு படிந்திருக்கும். அதைத் துவைத்தால் போய்விடும். இவற்றுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதை வாங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் லாபம்தான்.
ஆனால் உதாரணத்துக்கு ரூ. 1,000 மதிப்புள்ள புடவையை ரூ. 200-க்குக்கொடுப்பதாக அறிவித்தால் அது நிச்சயம் தரமற்றதாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"நோ எக்சேன்ஜ்' மந்திரம் ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆடித் தள்ளுபடி விற்பனையில் "நோ எக்சேன்ஜ்'. என குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது ஆடித் தள்ளுபடியில் வாங்கும் பொருள்களை மாற்றி வேறு பொருள்களை வாங்க முடியாது. மற்ற நேரங்களில் புடவை வாங்கிச் சென்றால் அந்த புடவை நமக்கு பிடிக்காவிட்டாலும் அல்லது ஏதாவது சிறிய அளவில் சேதமிருந்தாலோ மாற்றிவிட்டு வேறு புடவை எடுத்துக் கொள்ளலாம். ஆடித் தள்ளுபடியில் இந்தச் சலுகை கிடையாது. எனவே பொருள்களை வாங்கும் முன்பு ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து, பரிசோதித்து வாங்கினால் ஆடித் தள்ளுபடி, லாபகரமானதாக உங்களுக்கு அமையும். இல்லையெனில்...ஆடித் தள்ளுபடி நம்மை ஆட்டம் காண வைத்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.