மனிதனுக்கு உள்ள 7 அறிவுகள்... நாம எப்படி?

மற்ற விலங்குகளில் இருந்து மனிதன் மட்டும் வேறுபடுவதற்குக் காரணமே நமது அறிவும் சிந்தனையும்தான். மனிதனின் சிந்தனை குறித்து பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு.
மனிதனுக்கு உள்ள 7 அறிவுகள்... நாம எப்படி?
Published on
Updated on
2 min read

மற்ற விலங்குகளில் இருந்து மனிதன் மட்டும் வேறுபடுவதற்குக் காரணமே நமது அறிவும் சிந்தனையும்தான். மனிதனின் சிந்தனை குறித்து பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு.

அதன்படி, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு வகையான அறிவுகள் அதாவது ஆங்கிலத்தில் இன்டெலிஜென்ஸ் என்று கூறுவார்களே அது இருக்கிறது என்று கார்டனர் என்ற உளவியல் அறிஞர் கூறினார்.

நம் மக்கள்தான் எந்த விஷயத்தையும் ஆதாரத்தோடு நிரூபித்தால் தான் நம்புவார்களே. கார்டனர் கண்டுபிடித்த ஏழு அறிவுக்கும் அவரால் ஆதாரங்களைக் காட்ட முடியாததால் இதுவரை அது எழுதப்படாத, ஏற்றுக் கொள்ளப்படாத ஆய்வாகவே உள்ளது.

முதலாவது மொழி ரீதியானது. இதுதான் மனித இனம் பல்வேறு வகைகளில் முன்னேறியதற்கும், உலகம் முழுவதும் மக்கள் இனம் பரவி வாழவும் காரணமாக அமைந்தது. இந்த அறிவு அதிகம் கொண்டவர்கள் ஏராளமான மொழிகளை கற்றுக் கொள்வது, நூல்களைப் படித்து அதன் மூலம் அறிவினை வளர்த்துக் கொள்வது போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் காட்டுவார்கள்.

இயல்பு நிலை, கணிப்பு, கணிதம் போன்றவற்றின் அறிவு. இது சிலருக்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அதனைப் பொறுத்து அவர்களது பல விஷயங்கள் மாறுகிறது.

அளவு, பரப்பு முதலியவற்றின் அடிப்படைகளை உணரக் கூடிய அறிவு. இது பல விஷயங்களில் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது.  சிலருக்கு படிப்பின் வெளிப்பாடாக இந்த அறிவு அதிகரிக்கும். சிலருக்கு இந்த அறிவு அடிப்படையிலேயே அமைந்தாலும் அவர்களது வாழ்வியல் முறைகள் இதனை வெளிக்கொணராமலேயே கூட முடிந்துவிடுவது உண்டு. பொருட்களை நன்கு பராமரிக்கும் குணம், தரம் பிரித்து கையாளும் திறன் கொண்டவர்கள் இந்த அறிவு அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கலை உணர்வு... இதில் இசை, ஓவியம், சமையல் உட்பட அனைத்துமே கலந்துள்ளது. இதில் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் திறமையானவர்களாக இருப்பார்கள்.

உடல் உறுப்புகளைத் திறம்படக் கையாளும் அறிவு. இதில் கைதேர்ந்தவர்களாக இருப்பவர்கள் மிகச் சிறந்த நடனக் கலைஞர், யோகா நிபுணர், வாள் சண்டையில் சிறந்தவர் போன்று உடலால் செய்யும் கலைகளில் சிறந்தவர்களாக விளங்குவர்.

தன்னுணர்வு அடிப்படையில் அமைந்தது. இந்த உணர்வு மனிதனுக்கு மட்டும் அல்லாமல் பல உயிரினங்களுக்கும் ஒருங்கே அமைந்திருக்கிறது. தங்களுக்கு என ஒரு லட்சியத்தை அமைத்து அதனை நோக்கி சென்று சாதனை படைக்கும் பல லட்சியவாதிகளுக்கு இந்த அறிவும் அதிகம் இருக்கும்.

பிறருடன் கலந்து பழகி அதன் மூலம் பெறும் அறிவு. இதுவும் கால மாற்றத்தினாலும், மனிதன் வளர்வதாலும், பல இடங்களுக்கும் சென்று பலருடனும் பழகிப் பெறும் அறிவாகும். இவர்களுக்கு தலைமை தாங்கும் திறன், குடும்பத்தை தலைமையேற்று நடத்தும் திறன் நன்கு அமைந்திருக்கும்.

சரி இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறீர்களா.. இருக்கு.. நீங்கள் ஒரு மாணவராகவோ, பெற்றோராகவோ, ஆசிரியராகவோ, ஊழியராகவோ, மேலதிகாரியாகவோ இருக்கலாம்.

இருந்தால், உங்களுடை திறன் இதில் எது அதிகம் என்பதை அறிந்து அந்த வகையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் பெற்றோராகவோ, ஆசிரியராகவோ, தலைமை அதிகாரியாகவோ இருந்தால் ஒரு விஷயத்தை விளக்கும் போது, நாம் யாருக்கு சொல்ல வேண்டுமோ, அவருக்கு இதில் எந்த அறிவு அதிகம் என்பதை அறிந்து அந்த வகையில் புரிய வைக்கலாம்.

இதுக்கு தாங்க இவ்ளோ சொன்னோம்.. இன்னும் விளக்கமா அடுத்த கட்டுரையிலும் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com