முதிர்கன்னி

கூந்தலிழை ஒன்றிரண்டுநரை கண்டு சாம்பல் நிறமாகியிருக்கும்

முதிர்கன்னி

கூந்தலிழை ஒன்றிரண்டு
நரை கண்டு சாம்பல் நிறமாகியிருக்கும்

அகத்தைப்போல்
முகத்திலொரு வறட்சியின் கடுகடுப்பு

வார்த்தைகளில் சில கருத்துப் பிழை
வேலைகளிலும் கூட சில தடுமாற்றங்கள்

எல்லாமே
முகமுற்றல் ஒரு முப்பதுமுப்பத்தைந்தென
விரல்விட்டு எண்ணிச் சொல்லும்

பெண்ணென்று பிறந்தால்
பருவத்தில் பயிர் செய் என்பது
உண்மைதானோ...
ஆணுக்கு வயது தேவையில்லை...
இனி மாப்பிள்ளை வீட்டார்
வருவோரெல்லாமே...

மனைவியை பறிகொடுத்தவனும்;
மனைவியிடமிருந்து
விவாகரத்து பெற்றவனும்;
ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு
தகப்பனும்
கிழவயதை எட்டுபவனும் எல்லாருமே
ஐம்பது பவுன், பைக், வீடு, நிலம்
என பட்டியலைக் கொடுத்து

ஒரு குடும்பத்தின் இதயங்களை மொத்தமாய்
கட்டி உடைப்பதற்கு யார் காரணம்?

இது
இத்தனை நாள் பெண்ணை
வீட்டிற்குள் வைத்திருந்ததற்கான
தண்டனையா அல்லது அபராதமா?

சமூகத்தின் பார்வையில்
முதிர்கன்னி என்பவள்
ஒரு நோயாளி போலவே
காணப்படுகிறாள்...


பின்பு
அந்த சமூகமே அவளை
பரிதாப பார்வைகளை
கொஞ்சம் கொஞ்சமாய்
வீசி வீசியே
அவள் கனவோடு
உடலையும் குலைத்துப் போடுகிறது.

நெற்றியில்
குங்குமமும் கழுத்தில் மஞ்சள் கயிறும்
ஏறாமலேயே பாவம்
தன்னம்பிக்கையில்
பாறாங்கல் விழுந்து
தூக்கில் தொங்கிப் போனது
எத்தனையோ?

சரி
அப்பெண்ணிற்கு
மாங்கல்யம் கிட்டி
வாழ்ந்துகொண்டிருக்கும்
வாழ்க்கையில் மகிழ்ச்சி
திரும்பியதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com