தீபாவளியும் எண்ணெய் குளியலும் -லஷ்மி தியாகராஜன்

இந்திய பாரம்பரியத்தில் எண்ணெய்க் குளியலுக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு.
தீபாவளியும் எண்ணெய் குளியலும் -லஷ்மி தியாகராஜன்
Updated on
3 min read

இந்திய பாரம்பரியத்தில் எண்ணெய்க் குளியலுக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. அதிலும் தென்னிந்தியாவில் வெகு காலந்தொட்டு எண்ணெய்க் குளியல் பெரிய அளவில் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் சமீபகாலமாக இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை ஓட்டத்தில்  எண்ணெய்த் தேய்த்து குளிப்பதற்கெல்லாம் நேரம் இல்லாமையால் எண்ணெய்க் குளியல் அரிதாகி வருகின்றது. இதனால் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொடுகுத் தொல்லை, தோல் வியாதிகள், முடி உதிர்தல் என பல பிரச்னைகளும் உருவாகி வருகிறது. இதிலிருந்து விடுபடவும், ஏராளமான ஆரோக்கியப் பயன்கள் பொதித்து வைத்திருக்கும் எண்ணெய்க் குளியல் மறைந்துவிடாமல் இருக்கவும், எண்ணெய்த் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்குகிறார் கவின்கேர் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான மீரா சீயக்காய் மற்றும் மீரா ஷாம்பு தயாரிப்பின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் அதிகாரியாக கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் லஷ்மி தியாகராஜன்.  மேலும் அவர் கூறியது:

எண்ணெய்க் குளியலினால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஏன் எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும்?

எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதால் உடலின் தோலில் உள்ள தூசு மற்றும் இறந்த அடுக்குகள் நீக்கப்பட்டு, தோல் திசுக்கள் மற்றும் தசைகளுக்கு சக்தியும் வலிமையும் கிடைக்கிறது. மேலும் அப்யங்கம் எனப்படும் எண்ணெய்த் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் மனஅழுத்தங்களைப் போக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், சருமத்திற்கு பளபளப்பையும், தலைமுடியை வலுப்படுத்துவதையும் குறிப்பிடலாம். மேலும் இயற்கையாகவே நமது உடலில் ஒருவித எண்ணெய் சுரக்கும். அது நமது தோலுக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது. அதனால்தான் தோல் மிருதுவாக இருக்கிறது.  அதுபோன்று தலையில் உள்ள தோலிலும் அந்த எண்ணெய் சுரக்கிறது. அந்த எண்ணெய் ஆனது இயற்கை கண்டிஷனராக இருந்து முடிக்கு போஷாக்கை கொடுக்கும். இதனால்தான்  சின்ன குழந்தைகளுக்கு பெரும்பாலும்  உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பார்கள். இது ஏனென்றால் வேகமாக வளர்ந்து வரும் அவர்களது திசு வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இன்றைய வாழ்க்கை முறையில் பிறந்த குழந்தைத் தவிர குழந்தை பள்ளிச் செல்ல ஆரம்பிக்கும் காலம் தொட்டு வயதான காலம் வரை அனைவருக்கும் மன அழுத்தம் ஆரம்பித்துவிடுகிறது. இந்த மன அழுத்தம் அவரவர் வயதுக்கு தகுந்தவாறு மாறுபாடுகிறது.  மன அழுத்தம் ஏற்படுவதனால்  உடல் சூடு அதிகமாகி கண் எரிச்சல், உடல் சோர்வு ஏற்படுகிறது.  அதுபோன்ற சமயங்களில் எண்ணெய் குளியல் பெரிதும்  உதவுகிறது.

எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளும் முறைகள் பற்றி?

வாரம் ஒரு முறை கட்டாயமாக எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய்யை லேசாக சூடாக்கி  தலையிலும், உடம்பிலும் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு வெதுப்பான நீர் கொண்டு சீயக்காய் தேய்த்து குளிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது, மன அழுத்தம் குறைகிறது, தோலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து தோல் மினுமினுப்பாகிறது, முடி உதிர்தல் நிற்கிறது. இந்த பழக்கமானது நாம் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருவது. இவையெல்லாம் நமது மூதாதையர் ஆராய்ந்து அனுபவ பூர்வமாக உணர்ந்த விஷயங்கள்.  சைனஸ் பிரச்னை உள்ளவர்கள்  கூட இந்த முறையில் எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டால் பிரச்னை எதுவும் வராது. பொதுவாக

எண்ணெய்க் குளியல் செய்த பிறகு ஒரு டம்ளர் சுடு தண்ணீரை குடித்துவிட்டால் சளி தொல்லையோ, ஜுரமோ எதுவும் வராது என்று என் பாட்டி எனக்கு சொல்லுவார்கள். இதுநாள் வரை நான் அதைப் பின்பற்றி வருகிறேன். எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஆனால்  எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல் உள்ளவர்கள் மட்டும் எண்ணெய்யை குறைவாக வைத்து குளிக்க வேண்டும். மற்றபடி எல்லாருமே எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளலாம்.

அதுபோன்று ஒரு சிலருக்கு நல்லெண்ணெய் ஒத்துக் கொள்ளாது, சிலருக்கு தேங்காய் எண்ணெய் ஒத்துக் கொள்ளாது. இரண்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என்றால் கடலை எண்ணெய்யிலும் குளிக்கலாம். அவரவர் உடல் வாகிற்கு ஏற்ற எண்ணெய்யை உபயோகப் படுத்திக்கொள்ளலாம். முடிந்த வரை சீயக்காய் உபயோகப்படுத்தி குளிப்பதுதான் சிறந்தது.

ஏனென்றால் கடினமான ஷாம்புவை உபயோகிக்கும்போது அது தலையில் உள்ள எண்ணெய்யைப் பசையை முற்றிலுமாக நீக்கி முடியை வறண்டு போகச் செய்கிறது. அடுத்தது உடலில் உள்ள அமிலத்தன்மையையும் பாதிக்கிறது. இதனால் ஷாம்புவை பயன்படுத்தாமல்  வெட்டிவேர், துளசி, மருதாணி, நெல்லிபோன்றவை சேர்த்த மூலிகை சீயக்காய் உபயோகிப்பது மிகமிக நல்லது.

தீபாவளிக்கும், எண்ணெய்க் குளியலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? 

தீபாவளி என்பது சந்தோஷத்துக்கான பண்டிகை.  நரகாசுரனை வதம் செய்த நாள்.  இதனால் புத்தாடை அணிவது, வெடி வெடிப்பது, நமக்கு பிடித்தமான பலகாரங்கள் செய்து உண்பது என்று அந்த நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கிறோம். 

இந்த அனைத்து விஷயங்களுமே நமக்கு சந்தோஷத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதால்தான் காலை எழுந்ததும் முதல் வேலையாக  தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கிறோம். இதனால் அந்த நாள் முழுவதும் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. உற்சாகமாகச் செயல் படவும் முடிகிறது.

இதுதான் தீபாவளிக்கும், எண்ணெய்க் குளியலுக்கும் உள்ள சம்பந்தம். பாரம்பரிய எண்ணெய்க் குளியல் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முழுமை பெறாது.

தொடர்ந்து ஷாம்பு உபயோகித்து தலைக் குளித்து வருபவர்கள் திடீரென்று சீயக்காய் போட்டு குளித்தால் எதுவும் பிரச்னை வருமா?

அப்படி எதுவுமில்லை. வாரத்திற்கு ஒருநாள் எண்ணெய்த் தேய்த்து குளிக்கும் போது சீயக்காய் தேய்த்து குளியுங்கள். உங்களுக்கு சீயக்காய் வாங்கி அரைத்து வைப்பதற்கு  நேரம் கிடைக்கவில்லை என்றால், இப்போது தரமான அரைத்த மூலிகை சீயக்காய் தூள்கள் கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம். கடலைமாவு, வெந்தயம், செம்பருத்தி, ஆலுவேரா போன்றவைகளை உபயோகித்தும் தலைக்கு குளிக்கலாம்.

எண்ணெய்க் குளியல் குறித்து  இளம் தலைமுறையினருக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

இன்றைய இளம் தலைமுறையினர்  தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து சீவிக் கொண்டால் பார்ப்பதற்கு  எண்ணெய் வடிந்துக் கொண்டு அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள்.  இதனால் ஆரோக்கியத்தைவிட்டுவிட்டு பியூட்டி பார்லர் சென்று  கலரிங், ஸ்டெரெய்ட்னிங் என முடியை கெடுத்துக் கொள்கிறார்கள்.

எங்களுடைய ஓர் ஆய்வின்படி இதுபோன்று பார்லர் சென்று முடிக்கு கலரிங், ஸ்டெரெய்ட்னிங் செய்து கொள்வதனால்தான் முடி உதிர்தல், தோல் பிரச்னைகள் அதிகம் உருவாகிறது என்றும், இது இப்படியே நீடிக்கும் போது மிக விரைவில் முடி மொத்தமாக உதிர்ந்து எலி வால் போன்று ஆகி தலை தெரிய ஆரம்பித்துவிடும் என்றும் தெரிய வருகிறது.

அதேபோன்று இன்றைய சூழலில் நிறைய இளைஞர்களுக்கு இளநரை பிரச்னை உள்ளது,இது பாரம்பரை பரம்பரையாக  குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு இருந்து வரலாம், இது சிலருக்கு உணவு முறை பழக்கவழக்கங்களாலும் வரலாம். இதனால் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்வதால் இந்தப் பிரச்னைகள் வாரமல் தடுத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com