சீமா என்றழைத்தால் பிடிக்கும்: 'சுருக்' கேள்விகளுக்கு ஹன்சிகாவின் 'நறுக்' பதில்கள்

ஹன்சிகா... இன்றைய  இளைய தலைமுறையினரின் கவனத்துக்குரியவர். வழக்கமாக சந்திக்கும் போது கேட்கும் கேள்விகளும் அவர் சொல்லும் பதில்களுமாக
Updated on
3 min read

ஹன்சிகா... இன்றைய  இளைய தலைமுறையினரின் கவனத்துக்குரியவர். வழக்கமாக சந்திக்கும் போது கேட்கும் கேள்விகளும் அவர் சொல்லும் பதில்களுமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவே அமைந்தது இந்தப் பேட்டி....

ஒரு பெயர்?

சீமா. என்னுடைய நிஜப் பெயர். வீட்டில் எப்போதும் அழைக்கும் செல்லப் பெயர். இப்போது என்னுடன் இருக்கும் இந்த பிரபலமான "ஹன்சிகா' என்ற பெயருக்கு முன் சீமாதான் என் பெயர். அப்படி யாராவது என்னை அழைத்தால் அவர்களை எனக்கு ரொம்பவே பிடித்து விடும்.

ஓர் இடம்?

சென்னை. என் வாழ்க்கையை கொஞ்சம் மாற்றிப் போட்ட இடம். கனவிலும் நினைத்துப் பார்க்காத இடத்தை எனக்கு கொடுத்த நகரம். சென்னையில் இருக்கும் தருணங்களை மிகவும் ரசிக்கிறேன்.

ஒரு பிரார்த்தனை?

என் பிரார்த்தனை எல்லோருக்குமானது. சில நேரங்களில் அதில் குழந்தைகளே அதிகமாக உள்ளனர். யாரும் இல்லாத குழந்தைகளை எங்கேயாவது பார்க்கத் தோன்றினால் "இந்த உலகம் இப்படி இல்லாமல் மாற்றி விடு...' என்று நமக்கு மேல் உள்ள சக்தியை வேண்டிக்  கொள்வேன்.

ஒரு எஸ்.எம்.எஸ்.?

நினைவுகள் எப்போதுமே குழப்பமானவை. நீ எப்போதோ சிரித்த விஷயங்களுக்காக, இப்போது அழ வேண்டி வரும். எப்போதோ அழுததை நினைத்தால், எப்போதும் சிரிக்க வேண்டி வரும். இப்படி ஒரு எஸ்.எம்.எûஸ படித்ததும், சிரித்தேன்.

ஓர் அதிர்ஷ்டம்?

சீமாவாக பிறந்து ஹன்சிகாவாக வளர்ந்தது.

ஒரு தோல்வி?

இந்த நிமிடம் நம்முடையது என்கிற மன நிலையில் எப்போதும் இருப்பதால் தோல்வி என்று எதுவுமே இல்லை.

ஒரு காதல் பார்வை?

காதலிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை போரடிப்பதில்லை. அது நல்ல காதலாக அமையும் பட்சத்தில்...

ஒரு பயணம்?

நிறைய இருக்கின்றன. நான் வளர்த்து வரும் என் குழந்தைகளுடன் இமயமலை வரை போய் வந்த அந்த பயணம் மறக்க முடியாத பயணம்.

ஒரு நட்பு?

அது எனக்கு மட்டுமான உலகம். ஒரு சின்ன வட்டம் அது. என் அம்மா. அப்பா இன்னும் சிலர் மட்டுமேதான் அதில் இருப்பாங்க.

ஒரு பிடிக்காத விஷயம்?

முகத்துக்கு முன்னால் ஒன்று பேசி விட்டு, முதுகுக்கு பின்னால் ஒன்று பேசுபவர்களை பிடிக்கவே பிடிக்காது.

ஒரு பொழுதுபோக்கு?

ஓவியங்கள் வரைவேன். அதுவும் விநாயகர் ஓவியங்களை வரைவது ரொம்பவே பிடிக்கும். நான் வளர்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக மொத்தம் 46 விநாயகர் ஓவியங்களை வரைந்து கொடுத்திருக்கிறேன்.

ஒரு தமிழ் வார்த்தை?

"ஹன்சிகா நல்லா இருக்கீங்களா?' என்று யாராவது கேட்டால், "நீங்க எப்படி இருக்கீங்க?' என்று கேட்பது பிடிக்கும். ஆனால் இப்போது நிறைய தமிழ் வார்த்தைகள் தெரியும்.

ஓர் அழகு ரகசியம்?

தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்.

ஒரு விபத்து?

இன்னும் கல்யாணம் ஆகவில்லையே!

ஒரு கிசுகிசு?

நிறைய இருக்கின்றன. எதைச் சொல்ல....

ஒரு நடிகை?

குஷ்பூ. எனக்குப் பிடித்த நடிகை. தன் முயற்சியால் தன் வாழ்க்கையை வென்ற பெண்.

ஓர் உணர்வு?

பதினேழு, பதினெட்டு வயதிலேயே தங்களை விட இரண்டு, மூன்று மடங்கு வயதுடைய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டியுள்ளது. அதனாலேயே பல நடிகைகள் தங்களுடைய இளமையை தொலைத்திருக்கிறார்கள். வயதுக்கு மீறின சூழலில் வாழ்வதால் வயதுக்கு மீறிய பக்குவத்தோடு இருக்கிற நடிகைகளை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு காதல் தத்துவம்?

ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், ஒருவரை ஒருவர் அடைய வேண்டும் என்று நினைக்கும் போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக இருப்பதற்கு அவர்கள் பெண்மையை அடைய வேண்டும் என நினைப்பதுதான் காரணம். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறும்.

ஒரு பண்டிகை?

ஒரு பொங்கல் பண்டிகை. இங்கே மதுரைப் பக்கம் ஒரு கிராமத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்டது மறக்க முடியாத  தருணம்.

ஒரு சமையல்?

ஒரு மணி நேரத்தில் நான்கு பேருக்கு தேவையான உணைவை சமைக்க

முடியும். ஆனால் சமைக்க நேரம்

இருப்பதில்லை.

ஒரு பொய்?

சினிமாவில் இருப்பதால் நிறைய பேச வேண்டியுள்ளது. தொழிலுக்கு அது ஓ.கே. ஆனால் நிஜ வாழ்க்கையில் எப்போதுமே பொய் பேசியதே இல்லை.

ஒரு நடிகர்?

ரஜினி, கமல், அமிதாப், ஷாரூக்,

விக்ரம், விஜய், அஜித், சூர்யா இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள்....

எல்லோரையும் பிடிக்கும்.

ஒரு சபலம்?

எவ்வளவு வந்தாலும், பணத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே இருக்கின்றன.

ஓர் ஆசை?

என் நடிப்புக்காக ஒரு படம் 50 சதவீதம் ஓட வேண்டும்.

ஒரு பொறாமை?

பொறாமைகள் ஏற்படுத்துகிற ஞாபகங்களை விட, அது நம் கண்களில் இருந்து மறைக்கிற உண்மைகள் அதிகம்.

ஒரு பொன்மொழி?

வாழும் போதே பிறருக்காக வாழு.

ஒரு சந்தோஷம்?

எனக்காக ஒரு ரசிகர் வட்டம் இங்கே இருப்பது என்பதில் சந்தோஷம்.

ஒரு முத்தம்?

என் அம்மா எனக்காக தரும் முத்தம்.

ஓர் அவமானம்?

அவமானங்களுக்கு பஞ்சமில்லை. வெளியில் சொன்னால் நிறைய காயங்கள் மீண்டெழுந்து விடும்.

ஒரு போதனை?

சக மனிதனை எப்படி நேசிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால் போதும். நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தில் வேஷம் போடுவதை விட உண்மையாக இருப்பதைத்தான் கடவுளும் விரும்புவார்.

ஒரு கனவு?

இந்த உலகத்தில் அநாதைகளே இருக்கக் கூடாது.

ஓர் அன்பு?

உணவு, உடை, இருப்பிடம் தந்து பாதுகாப்பதுதான் சக மனிதனுக்கான நிஜமான அன்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com