

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள படம் "ருத்ரமாதேவி.' சரித்திரப் பின்னணியைக் களமாக கொண்ட இப்படத்தில் அனுஷ்கா மாறுபட்ட வேடம் ஏற்று நடிக்கின்றார். வரும் 16-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை தமிழில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சென்னையில் நடைபெற்ற பட புரோமேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா, படத்தில் நடித்த போது அணிந்து கொண்ட நகைகளை அணிந்து பங்கேற்றார். அவ்விழாவில் பேசிய அனுஷ்கா... ""இதுவரை இல்லாத அளவில் ஒரிஜினில் நகைகளை அணிந்து நடித்துள்ளேன். கற்பனை கதாபாத்திரமாக இல்லாமல் நிஜ வரலாற்றில் வாழ்ந்த இளவரசி ஒருவரின் சரித்திர குறிப்புகளைக் கொண்டு என் வேடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற நகைகள் உருவாக்கப்பட்டன. நிஜ வாழ்வில் நான் குறைவாகத்தான் நகைகள் அணிவேன். ஆனால் பல கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல நகைகள் சேதம் அடைந்தன. அவைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. நான் சரித்திரம் படித்ததில்லை. இந்தப் படத்துக்குப் பின் நிறைய சரித்திரங்களைப் படித்து வருகிறேன். இனி தொடர்ந்து சரித்திர கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்'' என தெரிவித்தார் அனுஷ்கா.
எல்லாம் அறிந்தவனின் காதலி!
ரத்தங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "ஆத்யன்.' அபிமன்யூ நல்லமுத்து கதாநாயகனாக அறிமுகமாகிறார். சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். புதுமுகங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம் மனோஜ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். ஆத்யன் என்றால் எல்லாம் அறிந்தவன் என்று பொருள். தலைப்புக்கேற்ப அரசியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாவற்றிலும் கை தேர்ந்தவன் தன் காதலியைத் தேடி இந்தியாவுக்கு வருகிறான். திடீரென்று நிகழும் ஒரு சம்பவம் அவனது இந்திய திட்டங்களை மாற்றி அமைத்து விடுகின்றது. எதிர்பாராமல் சந்திக்கும் ஒரு நபர் போதை மற்றும் கடத்தல் கும்பல் என சமூக விரோத சக்திகளிடம் சிக்க வைத்து விடுகிறார். வேறு வழியில்லாமல் அவர்களுடனே பயணிக்கும் ஹீரோ, அதிகார பலத்தை கொண்டு நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் அந்த தேச விரோதக் கும்பலைப் பழி வாங்க முயல்கிறார். இதற்கிடையில் தேடி வந்த காதலியை சந்தித்தாரா? அந்த கும்பலை என்ன செய்தார்? என்பதை ஆக்ஷன் பின்னணியில் சொல்வதுதான் திரைக்கதை. நிழல் உலக தாதாக்கள் பற்றி பதிவுகள் படத்தில் இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் நள்ளிரவில் படமாக்கப்பட்டுள்ளன.
ஜாக்கிசான் ஜோடியாக இலியானா!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராட்டியம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் நடித்த இலியானா, திடீரென்று ஹிந்தி படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தார். முன்னணி இடம் எதிர்பார்த்தவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. முதல் படமான "பர்பி' மாபெரும் வெற்றியைப் பெற்ற போதிலும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் தென்னிந்தியப் படங்களுக்குத் தூது அனுப்பினார். இருந்தும் பலனில்லை. தெலுங்கில் ஒரு பாடலுக்கு மட்டுமே ஆட வாய்ப்பு வந்தது. வந்த வாய்ப்பை விட மனமில்லாத இலியானா, அப்பாடலுக்கு ஆடினார். இதற்கிடையில் ஜாக்கிசான் நடிக்கும் "குங்ஃபூ யோகா' என்ற சீன படத்துக்காக இந்திய நட்சத்திரம் ஒருவரைத் தேடியது படக்குழு. இப்படத்தில் நடிப்பதற்காக ஹிருத்திக் ரோஷன் பேசப்பட்டார். ஆனால், அந்த வாய்ப்பு ஜாக்கிசானுக்கு சென்று விட்டது. ஹிருத்திக் ரோஷன் தனக்கு ஜோடியாக நடிக்க இலியானாவின் பெயரை சிபாரிசு செய்திருந்தார். இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் விலகிக் கொள்ள, அவர் சிபாரிசு செய்த இலியானாவின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஹிருத்திக் ரோஷனுக்குப் பதிலாக சோனு சூட் நடிக்கிறார். இலியானாவிற்கு முன்பாக கேத்ரீனா கைஃப் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளின் பங்களிப்பில் மய்யம்!
நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான ஓவியர் ஸ்ரீதர் கதை, திரைக்கதை அமைத்து தயாரித்து வரும் படம் "மய்யம்.' சினிமா அனுபவம் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் இல்லாமல் வெவ்வேறு துறை படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கும் சினிமா ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதுதான் இப்படத்தின் சிறப்பு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா பாஸ்கரன் இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். அன்றாட செய்திகளாக பத்திரிகைகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் ஏ.டி.எம். கொள்ளை மற்றும் அதனால் ஏற்படும் கொலைகள்தான் கதைக் களம். சென்னையில் கடந்த ஆண்டு நடந்த பரபரப்பான ஏ.டி.எம். கொலையும் அதைத் தொடர்ந்து நடந்த என்கவுண்டர் கொலைகளைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். வசதி என்பது தேவைக்கான பணத்தை பெறும் இடமாக இல்லாமல், உயிர் பலி கொடுக்கும் பீடமாக மாறி வருவதுதான் இக்கதை சொல்ல வரும் செய்தி. பணம் எனும் தேவைக்கு முன்பு மனித உயிரெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்ற நிலை மாறி வருவதன் மன வேதனையாக இப்படம் உருவாகி வருகிறது. நவீன் சஞ்சய், ஜெய் குஹைனி, பூஜா தேவரியா, சுஹாசினி குமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சிம்ரனுக்காக படம் தயாரிக்கும் கணவர்!
திருமணத்துக்குப் பின் இல்லறம், குழந்தைகள் வளர்ப்பு என கவனம் செலுத்தி வந்த சிம்ரன், சமீபமாக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து இயக்குநர்களை அணுகினார். அம்மா, அக்கா, அண்ணி என குணச்சித்திர பாத்திரங்களாகவே வந்து சேர்ந்தது. ஹீரோயின் ஆசை இன்னும் அவருக்கு இருப்பதால் இவ்வகை வாய்ப்புகளை மறுத்தார். இருந்தும் நினைத்த வாய்ப்புகள் கை கூடவில்லை. இதையடுத்து சொந்த பட நிறுவனம் தொடங்கி நடிக்கத் திட்டமிட்டார். இதற்கிடையில் "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தில் நடிக்க முதலில் மறுத்த சிம்ரன் ஜி.வி.பிரகாஷ்குமார் வற்புறுத்தலையடுத்து நடிக்க ஒப்புக் கொண்டார். இந்நிலையில் ஹீரோயின் எண்ணத்திலிருந்த
சிம்ரனின் ஆசையை அவரது கணவர் நிறைவேற்றியுள்ளார். சொந்த பட நிறுவனம் தொடங்கி சிம்ரனை ஹீரோயின் ஆக்கி இருக்கிறார். விளம்பர பட இயக்குநர் கௌரி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகி என்பது போல் இல்லாமல் முழு படமும் சிம்ரனை மையப்படுத்தியே உருவாக உள்ளது. ஹிந்தியில் வெளியான "மர்தானி' பட பாணியில் உருவாகவுள்ள இப்படத்தில் போலீஸ் வேடம் ஏற்கவுள்ளார் சிம்ரன். வில்லன் வேடத்துக்கு முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சு நடக்கிறது.
கமலின் உதவியை நாடும் த்ரிஷா!
தயாரிப்பாளர் வருண் மணியனுடன் ஏற்பட்ட நிச்சயதார்த்த முறிவைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார் த்ரிஷா. தற்போது கமலுடன் "தூங்காவனம்' படத்துக்காக இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இதற்கு முன்பு "மன்மதன் அம்பு' படத்தில் கமலுடன் நடித்திருந்த த்ரிஷா, "தூங்காவனம்' படத்துக்காக 30 நாள்கள் கால்ஷீட் தந்து நடித்துள்ளார். த்ரில்லர், ஆக்ஷன் பின்னணி கொண்ட இக்கதையில் த்ரிஷா உளவுத் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்கள் த்ரிஷாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த "தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய த்ரிஷாவின் பேச்சில் இது வெளிப்படையாகத் தெரிந்தது. விழாவில் பேசிய அவர், ""கமலுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. என் வயதுடைய எந்த நடிகைக்கும் இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த விதத்தில் நான் பாக்கியசாலி. சினிமா வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையிலும் எனக்கு கமல் முக்கியமானவர். எனக்கு ஒரு பிரச்னை வந்தால் கமலிடம் தாராளமாக உதவி கேட்பேன். அவரும் கண்டிப்பாக உதவுவார்'' என்றார் த்ரிஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.