

எந்த கேள்விக்கும் வெளிப்படையான பதில் ராய் லெட்சுமியின் தனித்துவம்...
"வேண்டாம்...' "நோ கமெண்ட்ஸ்...' என்ற மறுப்பே இருக்காது. ஒரு சில கேள்விகளுக்குச் சட்டென உஷ்ணம் அடைந்தாலும் உடனே ஜீரோ டிகிரிக்குக் குளிர்ந்து அடுத்த கேள்வியை எதிர்கொள்வது ராயின் சீக்ரெட்.... "சவுகார்பேட்டை' படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ராயுடன் ஒரு சந்திப்பு...
எல்லாப் படங்களிலும் கிளாமர்தான் உங்களின் பிரத்யேக அடையாளம்... ஆனால், மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை என "சவுகார்பேட்டை' ஸ்டில்ஸ் எல்லாமே இதுவரை இல்லாதது மாதிரி இருக்கே...?
கிளாமர்தான் என் அடையாளம் என்று சொல்லாதீங்க. அது தவறு. தமிழ் தவிர வேறு மொழிகளில் எனக்கான இடம் வேறு. தமிழ் சினிமாவில் மட்டும் எனக்கு அப்படியொரு இடம் கிடைத்தது என் துரதிர்ஷ்டம். சின்னச் சின்ன படங்களாக இருந்தாலும் எனக்கென தனித்துவம் இருந்தால்தான் நடிப்பேன். எல்லாப் படங்களிலும் வெறுமனே டான்ஸ் மட்டுமே ஆடி விட்டு போய் இருக்க மாட்டேன். அந்த கதையின் முழு இடங்களிலும் நான் இருப்பேன். இப்போது அடுத்து வருகிற "சவுகார்பேட்டை' படத்தில் இன்னுமொரு தனித்துவ அடையாளம் கிடைக்கும். ஹிந்தியில் "பேகம் பேட்டா', தெலுங்கில் "தந்திர சக்தி', தமிழில் "சவுகார்பேட்டை' என மூன்று மொழிகளிலும் வெளியாகும் என் முதல் படம் இது.
பொது விழாக்களுக்கும் கவர்ச்சியாக வர்றீங்க.... என்பது, உங்கள் மீது இருக்கிற விமர்சனங்களில் ஒன்று...?
ஆடியோ விழா உள்ளிட்ட விழாக்களுக்கு வரும் போது மினி ஸ்கர்ட், மிடி, டைட் ஜீன்ஸ் என வருவது அந்தந்தப் படங்களுக்கான புரமோஷனுக்காக. அதில் என்ன தவறு? நான் என்ன பாட்டியா? இப்போதுதான் ஸ்கர்ட் போட முடியும். இந்த வயதில் இப்படி ஆடை அணியாமல், என் 60 வயதில் இது மாதிரி ஆடை அணிந்தால், நீங்க இந்தக் கேள்வியை அப்போது வந்து கேட்கலாம்.
லெட்சுமி ராயை ராய் லெட்சுமி என்று நியூமராலஜிப்படி பெயர் மாற்றினீர்களே... இப்போது எப்படி முன்னேற்றம்...?
பெயரை மாற்றி வைத்ததை நியூமராலஜி என்று சொல்கிறார்கள். அப்படியொரு நம்பிக்கை எனக்கு துளியும் கிடையாது. என் அப்பா, அம்மா இரண்டு பேரும் என்ன சொன்னாலும் கேட்பது என் பழக்கம். அது என் நலனில் அக்கறை உள்ள வார்த்தையாக இருக்கும். ஒரு நாள் அப்பா ""பெயரை மாத்திடு...'' என்று சொன்னார். உடனே மாற்றி விட்டேன். இதை நியூமராலஜி என்று சொல்ல முடியாது. இப்போது என் வாழ்க்கையில் நடக்கிற மாற்றங்களுக்கு அதுதான் காரணம் எனத் தெரிகிறது. அப்பா சொன்னது என் நன்மைக்கே என்று இப்போது புரிகிறது. மீடியாக்கள் இன்னும் என் பெயரை லெட்சுமிராய் என்றே உச்சரிக்கிறது. இனி ராய் லெட்சுமி என்றே என்னைக் குறிப்பிட வேண்டும்.
சினிமா சென்டிமெண்ட் எதுவும் உங்களுக்குக் கிடையாதா...?
கடல், மலை, ஆகாயம், காடு, திமிங்கலம், எறும்பு, சூரியன், நட்சத்திரம்... இப்படி இயற்கையைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். இந்த அமைப்புக்கு முன் நான் எவ்வளவு சின்னவள் என ஒவ்வொரு முறையும் தோன்றும். இவற்றையெல்லாம் யார் படைத்திருப்பார்கள் என்ற கேள்விக்குள் போக எனக்கு விருப்பம் இல்லை. அப்படி போனாலும் தெளிவான பதில் கிடைக்காது என்று தெரியும். எனக்கு கிடைத்திருக்கிற இந்த சின்ன வாழ்க்கையில் இதையெல்லாம் யோசித்து விடை கண்டுபிடிக்க முடியாது. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாழ்ந்து விட்டாலே போதும்.
எப்போதும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைத் தளங்களில் இயங்கி கொண்டே இருக்கிறீர்கள்... இது பல பேருக்கு எதிர்மறையாக மாறி வருகிற நேரம் இது...?
ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லாமல் ஒரு பொழுதைக் கூட என்னால் கடந்து விட முடியாது. முன்பெல்லாம் கிசுகிசு எழுதிவிட்டால் அதை மறுத்தால்கூட, பத்திரிகைகளில் போட மாட்டார்கள். ஆனால் இப்போது நிறைய மீடியாக்கள் என் ட்விட்டர் கணக்கை கவனித்துக் கொண்டிருக்கின்றன. நான் ட்விட்டர் பக்கம் வந்து மூன்று வருடங்களாகி விட்டன. ரசிகர்களிடம் நேரடியாகப் பேச முடிகிறது. அவர்களுக்கும் மகிழ்ச்சி. அதுபோல் என்னுடைய நடிப்பில் உள்ள குறை நிறைகளை ரசிகர்கள் என்னிடம் நேரடியாகச் சொல்ல முடிகிறது.
மம்முட்டி, மோகன்லால் என மலையாள சினிமாக்களில் பெரிய நடிகர்களுடன் நடிக்கிறீர்கள்...? தமிழில் அது மாதிரி ஓர் இடம் இல்லையே...?
எனக்கு தமிழ் சினிமா மேல்தான் ஆர்வம். ஒரு மாற்றத்துக்காகத்தான் மலையாளத்தில் நடிக்கிறேன். முதல் வாய்ப்பே மோகன்லால் கூட "ராக் அண்ட் ரோல்' படத்தில் கிடைத்தது. மலையாள சினிமா எதார்த்தமாக இருக்கிறது. தமிழில் கிளாமர் வேடங்கள்தான் தேடி வருகின்றன. ஒரு வகையில் இந்த வித்தியாசம் பிடித்துள்ளது.
நடிக்க வந்து பத்து வருடங்களாகி விட்டன... இருந்தாலும் த்ரிஷா, நயன்தாரா மாதிரியான ஓர் இடம் இல்லை என்பதில் வருத்தம் இருக்கிறதா...?
"தாம் தூம்', "காஞ்சனா', "மங்காத்தா', "அரண்மனை' என சில படங்கள் மட்டுமே மனசுக்கு நெருக்கமாக இருக்கின்றன. தமிழில் அறிமுகமான "கற்க கசடற' படம் கொஞ்சம் ஸ்பெஷல். பத்து வருடங்கள் ஆனாலும் ஹீரோயினாகவே நடிக்கிறேன் என்பதில் பெருமைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.