

பத்திரிகையாளரான இரா.சரவணன் எழுதி இயக்கும் படம் "கத்துக்குட்டி.' நரேன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சூழல் குறித்த பதிவாக உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை நகரப் பின்னணி கதைகளில் மட்டுமே நடித்து வந்த சிருஷ்டி, முதன் முதலாக கிராமப் பின்னணி கொண்ட இக்கதையில் நடித்துள்ளார். மும்பைப் பெண்ணான சிருஷ்டி தஞ்சைப் பெண்ணாக நடித்துள்ள அனுபவம் குறித்து பேசுகையில்..."" இந்தப் படம் என் சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டம், முன்னணி இடத்துக்கான முதற்படி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கென தனியொரு மரியாதையை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும். தஞ்சை பகுதிகளில் நான் பார்த்த கலாசாரம் முற்றிலும் புதிது. அது போன்றதொரு சூழலை நான் இதுவரை பார்த்ததில்லை. அதில் நடித்தது எனக்குப் பெருமை. என் குடும்பத்தினர் என்னைப் பற்றி பெருமைப்படக் கூடிய படமாக இது இருக்கும். கதைப்படி கிராமப் பகுதிகளில் நடக்கும் குடுமிப் பிடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளேன். இதில் எனக்குப் பெரிய சவால் இருந்தது'' என்றார் சிருஷ்டி.
***
விஜயசாந்தி பாணியில்...!
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்கள் என்றாலே அது ஹீரோக்களுக்கான படங்களாக இருந்து வந்தன. அதுவும் போலீஸ் கதைகளில் ஹீரோக்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதற்கு மாறாக விஜயசாந்தி உள்ளிட்ட ஒரு சில ஹீரோயின்கள் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்தனர். அதன் பின்னர் வந்த காலகட்டங்களில் இவ்வகைப் படங்களைத் தேர்வு செய்யும் ஆர்வம் நடிகைகளிடம் குறைந்தது. விஜயசாந்தியின் பாணியைப் பின்பற்றும் வகையில் நடிகை சினேகா "பவானி ஐ.பி.எஸ்.' படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து "அருந்ததீ' படத்தில் அனுஷ்கா, "பாகுபலி' படத்தில் தமன்னா ஆகியோர் சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தினர். இந்த பாணியில் அடுத்து வெளிவரும் படம் "காக்கிச் சட்டை காஞ்சனா.' முழுக்க முழுக்க போலீஸ் பின்னணியைக் கொண்ட இப்படத்தில் போலீஸ் வேடம் ஏற்று சாகச காட்சிகளில் நடிக்கிறார் புதுமுகம் ஆயிஷா. மித்து மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.ஆனந்தம் ராஜு எழுதி இயக்குகிறார். தற்போதைய காலகட்டங்களில் பெண் போலீஸôருக்கு சமூகத்தில் எவ்வகை சவால்கள் நிறைந்துள்ளன என்பதைப் படம் பிடிக்கும் வகையில் படம் உருவாகி வருகிறது. இதற்காக பல மாதங்களாக சிறப்புப் பயிற்சிகள் பெற்று நடித்து வருகிறார் ஆயிஷா.
***
தற்காப்புகளைச் சொல்லும் பெண்!
பெண்மையைத் தாங்கி பிடிக்கும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போதுதான் தமிழ் சினிமாக்களில் தென்படும். "பூ ஒன்று புயலானது', "புதுமைப் பெண்', "அஞ்சலி', "அலைபாயுதே' உள்ளிட்ட படங்கள் இந்த வரிசையில் இடம் பிடித்துக் கவனம் ஈர்த்தன. இந்த வரிசையில் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் படம் "குற்றம் நடந்தது என்ன.' பாலிவுட்டில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றிய சசிதர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். பெண்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் தங்களுக்கான தற்காப்புகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாகியுள்ளது. மென்மையான குணாதிசயம் கொண்ட ஒரு பெண் எப்படி அதிபயங்கர குணம் கொண்டவளாக மாறுகிறாள் என்பதுதான் திரைக்கதை. இதில் தற்காப்புகளைச் சொல்லி தரும் வேடத்தில் பிரியா நடிக்கிறார்.
•••
மீண்டும் ஒரு பாடலுக்கு ஆடும் தமன்னா!
"பாகுபலி' படத்துக்கு தென்னிந்திய சினிமாவில் கிடைத்த வரவேற்பையடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார் தமன்னா. ஆனால் ஏற்கெனவே கைவசம் 3 படங்களைத் தவிர வேறு எந்தப் படமும் தேடி வரவில்லை. இதில் 2 தெலுங்குப் படங்களும், கார்த்தியுடன் தமிழில் நடிக்கும் ஒரு படமும் அடங்கும். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்துக்காக ஒரு பாடலுக்கு ஆட தமன்னாவை அழைத்து இருக்கிறார் சுகுமார். ஏற்கெனவே தெலுங்கில் "அல்லுடு சீனு' படத்தில் ஒரு பாடலுக்கு தமன்னா ஆடியிருந்தார். இது போன்று பல பாடல்களுக்கு ஆடிய போதிலும் தமன்னாவுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. தற்போது தனக்கு வந்துள்ள இந்த வாய்ப்பை விட மனமில்லாத தமன்னா, கேட்டவுடனே ஒப்புக் கொண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் இந்த வாய்ப்பு ராசி கண்ணாவிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அவரின் கால்ஷீட் கிடைக்காததையடுத்து இப்போது தமன்னாவுக்கு வந்துள்ளது.
•••
விழிப்புணர்வு படத்தில் நர்த்தகி!
உலகத் தமிழ் அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவில் தமிழில் உருவான "இளைஞர் பாசறை' படம் விருதுக்குரிய படமாக தேர்வாகியுள்ளது. இவ்விருது கலை, இலக்கியம், பண்பாடுகளைப் பறைசாற்றும் விதத்தில் உருவான திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதாகும். திரைப்படக் கல்லூரி மாணவரான ரிதன் இயக்கியுள்ள இப்படத்தில் நர்த்தகி, அஸ்வின் நடித்துள்ளனர். உலகப் புகழ் வாய்ந்த நாவலாசிரியர்கள், சிறுகதை ஆசிரியர்கள், கவிஞர்களின் கருத்துக்கள் படத்தில் ஆங்காங்கே இடம் பெறுவதுதான் இப்படத்தின் சிறப்பு. தன்னுடன் ஒன்றாகப் படிக்கும் மாணவனுடன் மாணவிக்கு காதல். உலகப் புகழ் பெற்ற கவிதை, கட்டுரைகளை வாசிக்கும் மாணவிக்கு திடீரென்று புதிய சிந்தனைகள் மலருகின்றன. இளமையில் கல்விதான் முக்கியம்; காதல் அல்ல என்று முடிவெடுக்கிறாள். காதலனுக்கும் தாம் கற்ற அறிவைப் போதிக்கிறாள். பின்னர் இருவரும் படித்து தேர்ந்து பெரிய சாதனைகள் படைப்பதுதான்
இப்படத்தின் களம்.
•••
மீண்டும் சாந்தினி!
"சித்து ப்ளஸ் டூ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சாந்தினி "நான் ராஜாவாகப் போகிறேன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியிருக்கிறார். "என்னோடு விளையாடு' என்ற பெயரில் உருவாகும் படத்தில் பரத் ஜோடியாக நடிக்கிறார் சாந்தினி. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் "கிருமி' கதிர், சஞ்சீதா ஷெட்டி நடிக்கின்றனர். ஒருவன் ஒவ்வொரு நொடியும் ஜாலியாய்ப் பொழுதை கழிக்க சூதாட்டத்தில் ஈடுபடுகிறான். மற்றொருவன் பிடித்தமான வேலை, அதற்கேற்ற சம்பளம் என சந்தோஷமாக வாழ்கிறான். வேறுபட்ட வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் இந்த இருவருக்கும் எதிர்பாராத பெரும் சிக்கல். அந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை ஆக்ஷன் மற்றும் காதல் கலந்து அதிரடி திருப்பங்களுடன் சொல்வதுதான் கதை. ராதாரவி, யோக் ஜே.பி மற்றும் "கமலா தியேட்டர்' கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அருண் கிருஷ்ணசாமி இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.