இசைப் பேரரசி எம்.எஸ்.

முதன்முதலாக எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் தனது 10 வயதில் பாடி பதிவாக்கப்பட்ட பாடல் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்'
இசைப் பேரரசி எம்.எஸ்.

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு

16.09.1916 - 16.09.2016

'சங்கீத கலாநிதி'  எம்.எஸ். சுப்புலட்சுமியும்  அவரது இசைப் பணியும்  - சில தகவல்கள்

<  முதன்முதலாக எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் தனது 10 வயதில் பாடி பதிவாக்கப்பட்ட பாடல் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்' வந்த வேகத்திலேயே இசைத்தட்டு விற்றுத் தீர்ந்தது. அந்தக் காலத்தில் இசைத்தட்டு உலகில் புதிய சரித்திரம் படைத்தது. செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்திருந்தது அந்தப் பாடல்.

<  1941 - இல் "சாவித்திரி படத்தில் நடிப்பதற்காக கொல்கத்தா செல்லும் வழியில் சேவாக்ராம் சென்று அண்ணல் காந்தியடிகளைத் தரிசித்து பிரார்த்தனைப் பாடல்களை மனம் உருகப் பாடினார் எம்.எஸ். சுப்புலட்சுமி.

<  அந்த கீதத்தில் மெய்மறந்த காந்திஜி "ஹரி தும் ஹரோ ஜன கீ பீர்'  என்ற பஜன் எம்.எஸ்.ஸின் குரலில் நிச்சயமாக எனது பிரார்த்னையில் இடம் பெற வேண்டும்'' என்றார்.

<  உலகம் முழுவதிலும்  அனைத்து மேடைகளிலும் மதச் சார்பில்லாமல் இசையை வழங்கி வந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார். ரோமில் போப்பாண்டவரின் முன் தமது இனிய இசையை வழங்கி அவரது தங்கப் பதக்கங்களைப் பெற்று, அதை உறுதிப்படுத்தினார்.

<  காஞ்சி, பரமாசார்யார் முன் குருவந்தனமும் பாடுவார். சீக்கியர்களின் கோயில்களில் பாடப்படும் "ஷபத்' தும் பாடுவார். தமிழ், சமஸ்கிருதம், இந்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம்,  உருது, மராத்தி, கன்னடம், தெலுங்கு முதலான மொழிகளில் பாடும் திறன் பெற்ற ஒரே கர்நாடக சங்கீதப் பாடகி இசையரசி எம்.எஸ்.தான்.

<  1954- ஆம் ஆண்டின், சுதந்திர பாரத தேசத்தில் தேசிய விருதுகள் நிர்மாணிக்கப்பட்ட போது, முதல் ஆண்டிலேயே "பத்மபூஷன்' பட்டம் எம்.எஸ்.ஸýக்கு அளிக்கப்பட்டது.

<  1966 அக்டோபர் 23-ஆம் தேதி எம்.எஸ். சுப்புலட்சுமி  ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி செய்தார். இந்தப் புகழ்  இன்று வரை எம்.எஸ். ஒருவருக்குத்தான் கிடைத்திருக்கிறது.

<  திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் பாடி, அதன் மூலம் வரும் ராயல்டி தொகையை அப்படியே திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் வேத பாடசாலைக்கு அளித்தார் எம்.எஸ்.

<  1956-இல் எம்.எஸ்.ஸýக்கு ஜனாதிபதி பரிசு வழங்கப்பட்டது. அதே போன்று சென்னை மியூசிக் அகாதெமியில் "சங்கீத கலாநிதி' விருது பெற்ற முதல் பெண் கலைஞர் இவர்தான்.

<  சென்னைக்கு 1946- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்து இந்தி பிரசார சபாவில் தங்கியிருந்தார்.  அப்போது ஒவ்வொரு நாள் மாலையிலும் பிரார்த்தனைக் கூட்டங்களைக் காந்திஜி நடத்துவார். ஏராளமான மக்கள் வந்து கலந்து கொண்டு மகாத்மாவோடு பஜன் பாடல்களைப் பாடுவார்கள். காந்திஜி தனக்குப் பிடித்தமான "வைஷ்ணவ ஜனதோ' பாடலை, பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு எம்.எஸ். சுப்புலட்சுமி பாட வேண்டும் என்று விரும்பினார். எம்.எஸ். அதைப் பெருமையோடு ஏற்றுக் கொண்டு அண்ணல் விரும்பிய அந்தப் பாடலை நெஞ்சுருகப் பாடினார்.

<  எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் படமான "சேவாதனம்' 1938- ஆம் ஆண்டு வெளிவந்தது. "கோகிலகான எம்.எஸ். சுப்புலட்சுமி' என்ற பெயருடன் அவரை விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இந்தத் திரைப்படத்தில் அவர் பாடிய  "மா ரமணன், உடா ரமணன்', " மலரடி பணிவோமே தினமே', " ஓ ஜகஜ் ஜனனீ ஓங்கார ரூபிணி' போன்ற பாடல்கள் உடனே பிரபலமாகி, பின்னர் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன.

<  அமெரிக்காவுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி பாடச் சென்ற போது கச்சேரி செய்ய வேண்டிய தினத்தன்று - திடீரென அவரது குரல் எழும்பவில்லை. அனுதினமும் அவர் போற்றி வணங்கும் காஞ்சி முனிவரை நினைத்து உள்ளமுருகி பிரார்த்திக்க, அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவரது குரல் பழைய நிலைமைக்கு வந்துவிட்டது.

 <  அண்டை நாடான இலங்கைக்குச் சென்று கச்சேரிகள் மூலம் நாற்பது லட்ச ரூபாய் நிதி திரட்டி, அவ்வளவு தொகையையும் அந்த நாட்டின் பல்வேறு தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாகத் தந்து விட்டுத் திரும்பினார் எம்.எஸ். சுப்புலட்சுமி.

<  தனது இசைப்பணியின் மூலம் மக்களை மேம்படுத்தி வருவதோடு அப்பணியின் மூலம் கிடைக்கும்

செல்வத்தைச் சமூகப் பணிக்கும், அறப்பணிக்கும் அளித்து மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் மக்கள் தொண்டர் என்றும் எம்.எஸ் சுப்புலட்சுமியைக் குறிப்பிட்டு, அந்த அடிப்படையில் அவருக்கு 1974- இல் பிலிப்பைன்ஸ்  நாட்டின் உயரிய விருதான "மகசாசே விருது' வழங்கப்பட்டது.

<  மணிலா சென்று, குறிப்பிட்ட விழாவில் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர், எம்.எஸ். ஸýக்குப் பண முடிப்புடன் பரிசினையும் வழங்கினார். எம்.எஸ். வழக்கம் போலவே, அந்தச் செல்வத்தை, மருத்துவ, சமய, பண்பாட்டுப் பணிகளைச் செய்து வரும் மூன்று நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்துவிட்டார்.

<  எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி ஒருமுறை லண்டனில் அரங்கேற்றப்பட்டது. இந்திய அரசின் அழைப்பை ஏற்று, இந்த விழாவில் பாடி ஆங்கில இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் எம்.எஸ். இந்திய அரசு, எம்.எஸ்.ஸýக்கு கணிசமான தொகை ஒன்றுக்கு காசோலை  அனுப்பித் தந்து பெருமை செய்தது.

<  ஜெர்மனியின் முக்கிய நகரமான பான் நகரில் "லா ரிடோன்ட்' அரங்கம் மிகப்புகழ் பெற்றது. மேற்கத்திய இசை மாமேதையும், மேலை நாட்டு இசையின் தந்தை என்று போற்றப்படுபவருமான பீத்தோவன் இந்த அரங்கிலேதான் தனது இசையை அரங்கேற்றினார். இந்த உலகப் புகழ்பெற்ற அரங்கில் இந்திய இசைப் பேரரசி எம்.எஸ்.ஸýம் தமது கர்நாடக இசையை அரங்கேற்றி அமுதகானம் பொழிந்தார்.

<  "குறையொன்றுமில்லை' என்று பல செல்லிடப் பேசிகளில் ரிங் டோனாக ஒலிக்கிறதென்றால் அதற்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரலின் மகிமையே காரணம். இந்தப் பாடலை எழுதியவர் , ராஜாஜி. மெட்டமைத்தவர் சமயநல்லூர் வெங்கட்ராமன்.

<  இரட்டைஷேட் ஜரிகை - நீலவண்ண உடல் பகுதியைக் கொண்ட பட்டுப்புடவையை எம்.எஸ். சுப்புலட்சுமி பிரத்யேகமாக அணிவார். இதனால் இந்த நீலவண்ணப் புடவைக்கு 'எம்.எஸ். ப்ளூ' என்றே பெயர் வந்துவிட்டது. சொன்னவர், நல்லிகுப்புசாமி செட்டியார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com