

""பொதுவாக வீட்டு தோட்டம் என்னும்போது குறைந்தது காய்கறி, கீரை, மூலிகை, பூ என 4 வகையான செடிகளாவது இருக்க வேண்டும். அதற்கும் வசதியில்லை இதைவிட இன்னும் சிம்பிளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீரை, புதினா,லெமன் கிராஸ், கொத்துமல்லி, கற்றாழை, துளசி, கற்பூரவல்லி இவைகளை வைத்துக் கொள்ளலாம். இதற்கு பால்கனி அளவு இடம் இருந்தாலும் போதும். பராமரிப்பும் அவ்வளவு தேவையில்லை, எந்த தட்பவெட்பத்திலும் வளரக்கூடியது'' என்கிறார் மூலிகை செடிகளுக்கு என்று நர்ஸரியும், மாடி தோட்டமும் அமைத்திருக்கும் சுபஸ்ரீ விஜய். இவரை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்:
""எனக்கு சொந்த ஊர் மதுரை. அங்கே தோட்டத்துடன் கூடிய வீடுகள் தான் பெரும்பாலும் இருக்கும். இதனால் சிறு வயதில் இருந்தே தோட்டத்தின் மீது ஆர்வம் அதிகம். திருமணமாகி சென்னை வந்தபோது தோட்டத்துடன் கூடிய வீடுகளை காண்பதே அரிதாக இருந்தது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு "சாய் டிரஸ்ட்' ஒன்றில் இணைந்து சிறு சிறு உதவிகளைச் செய்ய தொடங்கினேன். அப்போது அந்த டிரஸ்ட் கமிட்டியில் நெல்லை நாயகம் என்று சித்த வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் அவ்வப்போது ஆங்காங்கே இலவச மருத்துவ முகாம் நடத்துவார். அவருடன் உதவியாக நானும் செல்வேன். இதனால் மூலிகைகளைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நம் வீட்டைச் சுற்றி நம் கண்முன்னே இருக்கும் மூலிகைகளில் இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவற்றைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, வைத்தியர், மூலிகைகள் பற்றிய புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து படிக்கச் சொன்னார். நம் பாரம்பரியத்தில் இருக்கும் மூலிகைகள் பற்றி அறிய அறிய ஆர்வமும், ஈடுபாடும் இன்னும் அதிகரித்தது. மேலும் நிறைய புத்தகங்களை சேகரித்து வாசித்ததில் கோயிலில் உள்ள ஸ்தல விருட்சங்களைப் பற்றியும் அறிந்தேன். இதன்மூலம் நூலாசிரியர்களின் நட்பும் கிடைத்தது. அவர்களின் மூலம் அறிந்த தகவலில் சில மூலிகைகள் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல் எழ, மூலிகைச் செடிகளைத் தேடி கேரளா போன்ற மலைப்பிரதேசங்கள் சார்ந்த சில ஊர்களுக்குச் சென்றேன். இதன் மூலம் மலைவாழ் மக்களின் நட்பும் கிடைத்தது. அவர்களிடம் மூலிகைகளைப் பற்றி மேலும் சில தகவல்களையும் அறிந்து, மூலிகை செடிகளையும் வாங்கி வந்து வளர்க்கவும் ஆரம்பித்தேன்.
செடிகள் அதிகரிக்க வீட்டின் கீழ்ப்பகுதியில் இடம் போதவில்லை. அப்போதுதான் மாடி தோட்டம் பற்றி அறிந்தேன். இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறையை அணுகி ஆலோசனைப் பெற்றேன். பிறகு, மாடியில் தொட்டிகளின் மூலம் மூலிகை செடிகளைப் பயிரிட ஆரம்பித்தேன். தற்போது என்னிடம் 180 வகையான மூலிகை செடிகள் உள்ளன. சென்னை மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டிலேயே மூலிகைகளுக்கு என்று நர்ஸரியும் என்னிடம்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் மூலிகைகள் தேவைப்படுவோருக்கு அண்ணாநகர் தோட்டக்கலை துறையில் எனது முகவரி கொடுத்து இங்கு அனுப்புகிறார்கள்.
அந்தவகையில், தாவரவியல் படிக்கும் மாணவர்கள்தான் அவர்களின் ஆராய்ச்சிக்கு தேவையான மூலிகைகளைத் தேடி அதிகம் வருகிறார்கள். என்னிடம் இல்லாத மூலிகைகள் வேண்டும் என்றால், என் நட்பு வட்டத்தில் இருக்கும் சயின்டிஸ்ட் அல்லது மலைவாழ் மக்களிடம் இருந்து வாங்கி அவர்களுக்கு தருகிறேன். ஏனென்றால் அவர்கள் இதன் மூலம் ஒரு மருந்து கண்டுபிடித்தாலும் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?
இதற்கிடையில் கடந்த மூன்றாண்டுகளாக மூலிகை செடிகள், காய்கறி செடிகள், கீரை வகைகள் போன்றவற்றை பயிரிட்டு விற்பனையும் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் காய்கறி செடிகளையும், பூ வகைகளையும் தேடிதான் காஸ்டமர்கள் வந்து கொண்டிருந்தனர். தற்போது ஓராண்டாக மூலிகைகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் மூலிகை செடிகளைத் தேடியும் அதிகம் வருகிறார்கள்.
அற்புதமான மூலிகைகள் சில உண்டு. உதாரணமாக சிறுநீரகக் கற்களை கரைக்க "பூனை மீசை'. அதை கைப்பிடி அளவு கஷாயம் போட்டு ஒரு நாளைக்கு 6 வேளை சாப்பிட்டு வந்தால், அது சிறுநீரக கற்களைக் கரைத்துத் தள்ளிவிடும். இதை சோதித்தும் பார்த்துவிட்டோம். நீர்முள்ளி, சிறுகண் பீளை, நாயுருவி போன்றவை சிறுநீரக செயல்பாட்டை சீர்படுத்தும் தன்மை கொண்டவை. ஞாபக சக்திக்கு வல்லாரை. பொதுவாக வல்லாரையை எடுத்துக் கொண்டால் நமக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் ஒருவகை வல்லாரையை மட்டுமே தெரியும், ஆனால் வல்லாரையில் மூன்று வகை இருக்கிறது. நாட்டு வல்லாரை, பிரம்மி வல்லாரை, ஜெல் பிரம்மி வல்லாரை.
உடலுக்கு பலம் தருவது தவசி கீரை. ஒரு பிடி கீரையை ஒருவர் சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதுக்கும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை இந்தக் கீரை தந்துவிடும். அதனால்தான் அந்தக்காலத்தில் வெகு தூரம் பயணம் செல்ல வேண்டியிருப்பவர்கள் இந்தக்கீரையைப் பறித்து உண்பார்களாம். வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதனை மல்டி விட்டமின் கீரை என்றும் சொல்வார்கள்.
இதயத்திற்கு பலம் சேர்ப்பதற்கு ஒத்தை செம்பருத்தி. செம்பருத்தியின் பூ, இலை, தண்டு, வேர் என வாழையைப் போல அத்தனையும் மருந்தாக பயன்படுகிறது. எந்தெந்த நோயை என்னென்ன மூலிகை குணப்படுத்தும் என்பதையும் ரகவாரியாக பிரித்து வைத்திருக்கிறேன். இதைத்தவிர "அத்ரி ஹெல்த் புராடக்ட்' என்று வீட்டிலேயே சின்னதாக ஒரு நிறுவனம் வைத்திருக்கிறேன். இதனை மூன்று வகையாகப் பிரித்து செயல் படுகிறோம்.
ஒன்று உணவு வகை. அதில் உளுத்தங் கஞ்சி, 21 வகையான தானியங்கள் சேர்த்து அரைத்த சத்துமாவு தயாரிக்கிறோம். இரண்டாவது காஸ்மெட்டிக்ஸ் 12 வகையான மூலிகைகள் சேர்த்து குளியல் பவுடர், சீகைக்காய், கூந்தல் தைலம் தயாரிக்கிறோம். மூன்றாவது ஆர்கானிக் உரம் மற்றும் ஹெர்பல் டி-ஆர்டரைஸர். டி- ஆர்டரைஸ் என்பது புத்தக அலமாரியில் பூச்சி விரட்டியாக பயன் படுத்தக் கூடியவை. அந்தக் காலத்தில் புத்தக அலமாரியில் பூச்சி விரட்டியாக வசம்பை வைப்பார்கள். அதை மூல ஆதாரமாக எடுத்துக் கொண்டு மூலிகைகளைச் சேர்த்து இயற்கை முறையிலான பூச்சி விரட்டியாக இதனை தயாரித்திருக்கிறோம். இதனை பீரோ, புத்தக அலமாரியில் வைத்தால் அலமாரியில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து கிருமி நாசினியாகவும் இருக்கும். மிகவும் பழைய புத்தகங்கள் உள்ள புத்தக அலமாரியில் "சில்வர் பிஷ்' என்று ஒருவகை பூச்சி இருக்கும் அதனை இந்த டி- ஆர்டரைஸ்ட் வராமல் செய்துவிடும். நூலகம், புத்தகக் கண்காட்சி போன்ற இடங்களில் இருந்து இதற்கு இப்போது நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது''.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.