கல்லூரியும் - கவிதை தொகுப்பும்!

பாவேந்தர் பாரதிதாசன்-125 ஆம் ஆண்டையொட்டி எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும், "கவிதை விக்கி' என்ற கவிதை இணையதளமும்
கல்லூரியும் - கவிதை தொகுப்பும்!
Updated on
1 min read

பாவேந்தர் பாரதிதாசன்-125 ஆம் ஆண்டையொட்டி எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும், "கவிதை விக்கி' என்ற கவிதை இணையதளமும் இணைந்து மகளிர் சிறப்புக் கவியரங்கத்தை நடத்தியது. இதில் 80 பெண் கவிஞர்கள் பாரதிதாசனைப் பற்றி எழுதிய கவிதை தொகுப்புப் புத்தகத்தை வெளியிட்டனர். அதுமட்டுமின்றி கவிஞர்களுக்கு "பாவலர்திலகம்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
சென்னையின் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, மாநிலக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, மீனாட்சி கல்லூரி எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, புனித தாமஸ் கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி, சோகா இகேதா மகளிர் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, எஸ்.ஐ.வி.ஐ.டி மகளிர் கல்லூரி, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, இந்து கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி, வேலூர் த.இ.ம. மகளிர் கல்லூரி, இராணி மேரி கல்லூரி ஆகிய பதினெட்டு கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களும் எம்.ஓ.பி.யின்  மாணவிகளும் பேராசிரியர்களும் தங்களது கவிதைகளைக் கவியரங்கத்தில் சமர்ப்பித்தனர். 
எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரியின்  முதல்வர் முனைவர் லலிதா பாலகிருஷ்ணன்    வரவேற்புரை வழங்கினார். அவர் தமிழ் பயிலவில்லை என்றாலும்,தமிழில் மிகவும் ஆர்வம் உண்டு என்றும் தமிழில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு,என்றும் கூறினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நோக்கவுரை வழங்கினார். தமிழ்ப் பெண் கவிஞர்கள் இத்தனைப் பேரை கண்டது பெருமிதத்தை உண்டாக்கியது என்றார் மறைமலை இலக்குவனார். தொடக்க விழாவின் தலைமை விருந்தினரான கலைமாமணி நல்லிகுப்புசாமி தலைமையில் கவிதைத்தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் கவிபாடிய அனைத்து மகளிரையும் பாராட்டினார். கல்வியின் சிறப்பையும் பாரதிதாசனின் புகழையும்பற்றி அருமையான உரை நிகழ்த்தினார். அவர் கவிஞர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பாரதிதாசன் கவிதை புத்தகத்தை பரிசாக அளித்தும் பாராட்டினார். முனைவர் இரா.பிரேமா இக்கவியரங்கத்தைத் தன் கவிதையை வழங்கித் தொடக்கிவைத்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ. விசயராகவன்  நிறைவு உரையாற்றினார்.  விழாவில் எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் ரா.ராஜேஸ்வரி எல்லா மொழியும் வாழட்டும்,என் தமிழ்மொழியே ஆளட்டும்,என்று தன் உரையைத் தொடங்கினார்.
- ராஜேஸ்வரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com