காதலியே வேண்டும் மகுடம் வேண்டாம்!

காதலித்தவளை  நிரந்தரமாகக்   கைப்பிடிக்க வேண்டும்  என்பதற்காக  அரச சிம்மாசனத்தை தூக்கி எறிந்தார்    இங்கிலாந்து நாட்டின்  எட்டாம்  எட்வர்ட் மன்னர். 
காதலியே வேண்டும் மகுடம் வேண்டாம்!
Published on
Updated on
3 min read

காதலித்தவளை  நிரந்தரமாகக்   கைப்பிடிக்க வேண்டும்  என்பதற்காக  அரச சிம்மாசனத்தை தூக்கி எறிந்தார்    இங்கிலாந்து நாட்டின்  எட்டாம்  எட்வர்ட் மன்னர்.  காதலி சீமாட்டி சிம்சனின் கரம் பிடிக்க,   1936ஆம் ஆண்டு  மன்னர் மகுடத்தை  துறந்து  ஒரு சாதாரண  குடிமகன் ஆனார்.  காதல் குறித்து  யார் என்ன எழுதினாலும்  எட்டாம் எட்வர்ட்டை குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் எட்டாம்  எட்வர்ட் மன்னருக்கு முன்னரே  1920- இல் தமிழக மன்னர் ஒருவர்  காதலுக்காகத்  தனது அரச பதவியைத் தியாகம் செய்தார்.

இந்தியா  சுதந்திரம் அடைவதற்கு  முன்னால்  562  சமஸ்தானங்களாகச்  சிதறிக் கிடந்தது. அதில் அளவில் சிறியதும், அந்தஸ்தில் யர்ந்த  சமஸ்தானமாக  புதுக்கோட்டை  சமஸ்தானம் மதிக்கப்பட்டது.  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய  அரசுடன்   நட்பு பாராட்டி  புதுக்கோட்டை சமஸ்தானம் இருந்ததால், சமஸ்தானத்திற்காக  தனியாக  காவல் துறை,  வருவாய்த் துறைகளை   நிர்வகிக்க  ஆங்கிலேய அரசு அனுமதித்திருந்தது.  புதுக்கோட்டை சமஸ்தானத்தின்  பணப் புழக்கத்திற்காகத்  தனி நாணயங்கள்  தயாரித்துக் கொள்ளவும் அதிகாரம் தரப் பட்டது.  அப்போது இந்தியா முழுவதும்,  எலிசபெத்   மகாராணியின்  உருவம்  பொறிக்கப்பட்ட  நாணயங்கள் மட்டும் தான்  புழக்கத்தில் இருந்தன. ஆனால், புதுக்கோட்டை சமஸ்தானத்தில்  அம்மன் திரு உருவத்தைத் தாங்கிய  நாணயங்களை  வார்த்து  புழக்கத்தில் விடப்பட்டது.   அந்த அளவுக்கு ஆங்கிலேய அரசு, புதுக்கோட்டை மன்னர்களுக்கு  சுதந்திரம், அதிகாரம்  உரிமை கொடுத்திருந்தது.

மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்    புதுக்கோட்டை  மன்னராக ஆட்சி  செய்த  போது, மற்ற மன்னர்களைப் போலவே  அடிக்கடி வெளிநாடுகளுக்கு மகிழ்வுப் பயணங்கள்  செல்வதுண்டு. 1915இல்    மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்  ஆஸ்திரேலியா  சென்றார். அங்கே மெல்போர்ன்  நகரில்  நட்சத்திர ஹோட்டலில்  மோளி   ஃபின்க்  (ஙர்ப்ண்  ஊண்ய்ந் ) 

சீமாட்டியை தற்செயலாகப்  பார்த்தார்.  மெல்போர்ன்  மணி  போல்  சிரித்த மோளியின்  குரல்  தொண்டைமானின்  செவிகளில்  தேனாகப்  பாய்ந்தது . முதல் பார்வையில்  தொண்டைமானுக்குக் காதல் பற்றிக் கொண்டது. பசி போனது... தூக்கம்    போனது..  எங்கு பார்த்தாலும் மோளி.... தொண்டமான்,  மோளியின்  நினைவில்  கரைந்து  கொண்டிருந்தார். 

மோளி,  சிட்னி  நகருக்கு  இடம் மாற.... தொண்டைமானும் மோளியைப் பின் தொடர்ந்தார்.  தைரியத்துடன்  மோளியிடம்,  நான்  உன்னைக் காதலிக்கிறேன்... திருமணம் செய்து கொள்ளலாமா.. என்று  கேட்க ... தன்னைப் பின்தொடர்வதை  அறிந்திருந்த  மோளி தொண்டைமானின்  காதலை ஏற்றுக் கொண்டார். 1915 ஆகஸ்ட் 10இல்  மெல்போர்ன் திருமணப்  பதிவாளர் அலுவலகத்தில்  தொண்டைமான் - மோளி திருமணம் நடந்தது. தேன்நிலவிற்காக எங்கு போகலாம்; தொண்டைமான் கேட்டார். அமெரிக்கா  என்று மோளி சொல்ல...    அமெரிக்காவை  உல்லாசமாகச்   சுற்றி  வந்தனர். தொண்டைமான் சில மாதங்கள் ஆஸ்திரேலியாவில்   தங்கியிருந்தார்.   ஒரு  நாள்  மோளி, தொண்டைமானிடம்  அந்தச்  சந்தோஷ  செய்தியைச்  சொன்னார்.

 ""நீங்கள்  தந்தையாகப்  போகிறீர்கள் ..  தொண்டைமான்   மகிழ்ச்சியில்  திக்கு  முக்காடினார்''  மோளிக்கு விலை உயர்ந்த  வைர மாலையைப் பரிசளித்தார்.   இப்படி வைர   மாலை  கிடைக்கும் என்றால்... எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும்  பெற்றுக் கொள்ளத் தயார்'' என்று  மோளி சொல்ல... தொண்டைமான்  மோளியை  அணைத்துக் கொண்டார்.  சில தினங்களில்,  தொண்டைமான், சொந்த சமஸ்தானத்திற்குப்  புறப்பட்டார்.  தொண்டைமான்  தம்பதிக்குப் புதுக்கோட்டை  டவுன்ஹாலில்  பிரமாண்ட வரவேற்பு தரப்பட்டது.

ஆஸ்திரேலியாவில்  மோளி வாழ்ந்த வாழ்க்கையை  புதுக்கோட்டையில்  மோளி  அனுபவிக்க  99 ஏக்கர்  நிலப் பரப்பில் புதிய அரண்மனையைக் கட்டினார்... புது அரண்மனையில்  மோளி  மேல்நாட்டு உடைகளை உடுத்தவில்லை. மாறாக  புதுக்கோட்டை அரச குடும்பத்தில்  எப்படி   சேலை  அணிவார்களோ  அதே நடைமுறையைப் பின்பற்றினார். நாளடைவில் மோளிக்கு  சில உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன. அடிக்கடி வாந்தி  எடுத்து சிரமப்பட்டார்.  புதுக்கோட்டை உணவும்,  சுற்றுப்புறச் சூழ்நிலையும்   ஆஸ்திரேலியாவிலிருந்து  வேறுபட்டிருந்ததால்  இந்த வாந்தி பிரச்னை வந்திருக்குமோ  என்று  நினைத்த தொண்டைமான், ""கவலைப் படாதே... ஆஸ்திரேலியாவைப் போல தட்ப வெட்பம் இருக்கும் ஊட்டி  இங்கிருக்கிறது'' என்று தைரியம் கொடுத்தார். மோளியை ஊட்டிக்கு இடம் மாற்றி  எல்லா  வசதிகளுடன் தங்க வைத்தார்.

ஆனால்  வாந்தி  நிற்கவில்லை.  உடனே  மோளி  தீவிர   மருத்துவப்  பரிசோதனைக்கு உள்ளானார்.

மருத்துவப் பரிசோதனை  முடிவு  அதிர்ச்சியைத்  தந்தது.  மோளியின் உணவில்  விஷம் மிகச் சிறிய அளவில் சேர்க்கப்பட்டு,  உணவு ஒவ்வாமை உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனால்தான் எதைச் சாப்பிட்டாலும்  மோளி வாந்தி எடுத்து  வெளியேற்றிக் கொண்டிருந்தார். அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இந்த சூழ்ச்சியில்  ஈடுபட்டிருக்கலாம்  என்று தொண்டைமான் முடிவுக்கு வந்தார். இந்தப்  பிரச்னைக்கு  மோளியை   அதிகாரபூர்வமாக புதுக்கோட்டை அரசியாக ஆக்கிவிட்டால்   பிரச்னை   முடிவுக்கு  வரும் என தொண்டைமான்  தீர்மானித்தார். ஆனால் தொண்டைமான் தன்னிச்சையாக  இந்த முடிவை எடுக்க  அவருக்கு அதிகாரம் இல்லை. ஆங்கிலேய அரசின்  ஒப்புதல் இல்லாமல்  மோளியை அரசியாக அறிவிக்க முடியாது என்பது தொண்டைமானுக்குத்  தெரியும்.  இதற்காக காலம் கடத்தாது  இங்கிலாந்து  சென்றார்.

அந்த  சமயம்  இந்தியாவை  ஐந்தாம்  ஜார்ஜ்   மன்னர்  ஆண்டு கொண்டிருந்தார். அவரை தொண்டைமான் சந்தித்தார்.  நான் காதலித்து  மணந்து கொண்ட  மோளிக்கு  புதுக்கோட்டை அரசி  என்னும் அந்தஸ்தை  வழங்கி   அங்கீகரிக்க வேண்டும்.. என்று வேண்டினார்.

ஐந்தாம் ஜார்ஜ்  மன்னர் தொண்டைமானுக்கு ஆடம்பர விருந்து அளித்து கெளரவித்தார்.  ""மிஸ்டர்  தொண்டைமான் போங்க... உங்க மனைவியை  அரசியாக்க  நீங்கள் முன்வைத்த கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.'' என்று உறுதியும் அளித்தார்.  தொண்டைமான்  மகிழ்ச்சி பொங்க  புதுக்கோட்டை திரும்பினார். அவர் சமஸ்தானத்துக்கு வந்து சேரும் முன்பே,  ""தொண்டைமானின்  காதல் திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது'' என்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தந்தி மூலம்  சென்னை கவர்னருக்கு  தெரிவித்து விட்டார்.  ஆங்கிலப் பெண்ணை  தொண்டைமான்  திருமணம் செய்து கொண்டது, ஐந்தாம் ஜார்ஜ்  உட்பட அநேக  ஆங்கிலப் பிரபுக்களுக்கும் பிடிக்காததே இச்செயலுக்கான காரணமாகும்.

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்திலும்  மோளி தொண்டைமானுக்கு  மனைவியாகி விட்டதில் பலத்த  எதிர்ப்பு. இந்த இரண்டு எதிர்ப்புகளும் தொண்டைமானின்  மன அமைதியைக் குலைத்தது. மோளியை  நிரந்தரமாக  ஊட்டியில்  குடிவைக்க மாளிகை ஒன்றை வாங்கும் தொண்டைமானின்  முயற்சிக்கு  பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை.  வெம்பிய மனதுடன், மோளியுடன்  தொண்டைமான் ஆஸ்திரேலியா பயணமானார்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com