எளிதான வெரைட்டி ரைஸ் வகைகள்

பள்ளிகள் துவங்கிவிட்டன. காலை வேலையில் செய்ய எளிய வெரைடி ரைஸ் வகைகள் இங்கே உங்களுக்காக...
Updated on
4 min read

லெமன் ரைஸ்

தேவையானவை: அரிசி - 200 கிராம், எலுமிச்சம்பழம் - 2, கடுகு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  கடலைபருப்பு - 1 தேக்கரண்டி, வறுத்து,தோல் நீக்கிய வேர்க்கடலை - 4 தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு... 3 விசில் வந்ததும் இறக்கிவிடவும். விசில் சத்தம் அடங்கியதும். சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். பின்னர், எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், கடலை பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சைச்சாற்றை விட்டு கிளறி இறக்கிவிடவும்.  பின்னர், ஆற வைத்துள்ள சாதத்தில் எலுமிச்சைக் கலவையைக் கொட்டி கிளறி, உப்பு சேர்த்து சீராகக் கலந்து பரிமாறவும்.

•••

டொமேட்டோ ரைஸ்

தேவையானவை: அரிசி - 200 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - கால் கிலோ, இஞ்சி - ஒரு துண்டு, தோலுரித்த பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு - கால் தேக்கரண்டி,  புதினா - சிறிதளவு, மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில், எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். பிறகு, ஆய்ந்து நறுக்கிய புதினா சேர்த்து நன்கு வதக்கவும். மணம் வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கிவிட்டு பிறகு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும்.

•••

பீட்ரூட் ரைஸ்

தேவையானவை:  வடித்த சாதம் - 1 கிண்ணம், பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, கடுகு - கால் தேக்கரண்டி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது, பொன்னிறமாக வதங்கியதும் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். வெந்ததும் இறக்கி, சாதம் சேர்த்துக் கலக்கவும்.

•••

மாங்காய் ரைஸ்

தேவையானவை:  வடித்த சாதம் - 1 கிண்ணம், மாங்காய் (பெரியது) - 1, பேபி கார்ன் - 2, பட்டாணி (தோல் உரித்தது) - 1 கிண்ணம், கடுகு - கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் சாதம் சேர்த்துக் கலந்து, பின்னர், மாங்காய் துருவல் போட்டு மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கினால், மாங்காய் ரைஸ் ரெடி.

•••

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கிண்ணம், வறுத்த வேர்க்கடலை, கடலைப் பருப்பு - தலா 50 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, உலர்ந்த திராட்சை - 20, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் ரிச்சாக உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும்.

•••

காப்ஸிகம் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் -  1 கிண்ணம், குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு, கடுகு - கால் தேக்கரண்டி, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர், கொத்துமல்லி தூவி கிளறவும். அடுத்து சூடான சாதத்தைச் சேர்த்துக் கலக்க... காப்ஸிகம் ரைஸ் ரெடி.

•••

கிரீன் வெஜிடபிள் ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - அரை கிலோ, கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - தலா 1 கிண்ணம், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்துமல்லி - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் ஒரு பங்கு பாசுமதி அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ûஸ பொடியாக நறுக்கவும். கடாயில், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை  வதக்கவும். பிறகு, கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். காய்கள் சரியான பதத்தில் வெந்ததும், புதினா சேர்த்து கலந்து இறக்கவும். அதில், சூடான சாதத்தைச் சேர்த்து கலந்து, கொத்துமல்லி தூவி பரிமாறவும். இதற்கு, தயிர் பச்சடி சூப்பர் சைடிஷ்.

•••

புதினா ரைஸ்

தேவையானவை: அரிசி - 1 கிண்ணம், ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கிண்ணம், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 2 தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, ஸ்வீட் கார்ன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில்  தண்ணீர்விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில், நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், உதிர்த்த ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள புதினாவைச் சேர்த்து, 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்விட்டு, கிளறி கழுவி ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும்.  3 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

••••

கத்திரிக்காய் ரைஸ்

தேவையானவை: வடித்த சாதம் - 1 கிண்ணம், பிஞ்சுக் கத்திரிக்காய் - 6, வெங்காயம் - ஒன்று, கடுகு - கால் தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி-பூண்டு விழுது - அரை தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com