

பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல பின்பற்ற வேண்டியவர்களும் கூட. அவர்களிடம் உள்ள சிறப்பு குணங்களை ஆண்கள் அறிந்து பின்பற்றினால், அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதுடன் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.
அப்படி என்ன சிறப்பு குணங்கள் என்கிறீர்களா? இதோ:
பெண்கள் குறைந்தது 7 மணிநேரம் தூங்கிவிடுவர்!
குழந்தைகள், கணவர், உறவினர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது படுத்து ஒரு தூக்கம் போட்டு விடுவர். இந்த வகையில் குறைந்தது 7 மணி நேரமாவது தினமும் தூங்க வாய்ப்பு உண்டு. இந்த தூக்கம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் ஆண்களோ, தூக்கத்தை கெடுத்துக் கொண்டு, பொழுது போக்கில் ஈடுபடுவர்.
அதுவே மனைவியைப் பின்பற்றி குறைந்தது 7 மணி நேரம் தினமும் தூங்கிப் பாருங்கள், உடம்பு ஆரோக்கியமாய் இருப்பதை நீங்களே உணருவீர்கள்.
புகைப்பிடிப்பதில்லை..
மது அருந்துவதில்லை!
பெண்களுக்கு காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை டென்ஷன்தான். குழந்தைகளை கவனித்து, படிப்பு, சாப்பாடு என எல்லாவற்றிற்கும் தயார் படுத்த வேண்டும். கணவரையும் சமமாக கவனிக்க வேண்டும். மேலும் வீட்டில் உள்ள உறவினர்களின் (மாமனார், மாமியார், மச்சினன், நாத்தி) முகம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் "டென்ஷனை' வரவழைப்பதுதான். ஆனால் இதற்காக அவர்கள் புகை பிடிப்பதில்லை மது அருந்துவதில்லை. மாறாக இவற்றை எதிர்கொண்டு, சமாளித்து வெற்றி காண்கிறார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார்கள். இதனைப் பெண்களிடமிருந்து ஆண்கள் கற்று நடைமுறைப் படுத்தலாமே!
பேசி டென்ஷனை குறையுங்கள்!
பெண்கள் நேரம் கிடைக்கும் போது தங்கள் வீட்டினுள்ளிருந்து வெளியே வந்து அக்கம்பக்கம் பெண்களிடம் பேசி சிரித்து மகிழ்வர். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் டென்ஷன், மனச்சிக்கல்கள் விலகுகின்றன. அவசியமானால் அது சமையலாகட்டும், உடல்சார்ந்ததாகட்டும், அல்லது குடும்ப சிக்கல்களாகட்டும் பேசி, பிரச்னைக்கு, அக்கம்பக்கத்தினரிடம் மாற்று தீர்வு பெற்று, மன நிம்மதி கொள்கிறார்கள்.
ஆனால் ஆண்களோ அக்கம்பக்கத்தாரிடம் பேசுவது அபூர்வம். தங்கள் எண்ணங்களையும், பாராட்டுகளையும் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் அவர்களிடம் டென்ஷன் நிலை கொள்கிறது. ஆக, பெண்களிடம் கற்ற பண்பாக, அக்கம் பக்கத்தாரிடம் அளவளாவுவது இருக்கட்டும்.
விலகி... சேர்ந்து கொள்வதில் வல்லவர்கள்!
நான்கு பேர் சந்திக்கும் இடங்களில் பெண்கள் தேவைப்படும்போது, சேர்ந்தும் சில நேரங்களில் விலகியும் கச்சிதமாக செயல்படுவார்கள். இதனால் அவர்களிடம் வழவழா பேச்சு இருக்காது. அவசியமானதை அளவாய் பழகி, நாசுக்காக விலகிக் கொள்ளும் திறன் அவர்களுக்கு உண்டு. ஆக பெண்களிடம், ஆண்கள் இதனை செயல்படுத்த கற்க வேண்டியது அவசியம்.
நிதானம்.. பத்திரம்.. நிலையான பங்களிப்பு!
ஆண்கள் ரிஸ்க் எடுத்து செயல்படுவர். ஆனால் பெண்கள் இடம், ஏவல் உணர்ந்து அதற்கு ஏற்ப நிதானமாக யோசித்து செயல்படுவர். இதனால் அவர்களுக்கு கெட்ட பெயர் வருதில்லை. ஒரு பொதுசந்திப்பில் கூட மற்றவர்களை பேசவிட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள், தன் கணவர் என்ன பேசுகிறார் என பார்ப்பார்களே ஒழிய, அவசியமானால்தான் வாய் திறப்பர். அப்போதும் தன் கருத்துகளில் மற்றவர் புண்படாதவாறு ஜாக்கிரதையாக இருப்பர்.
ஆரோக்கியமான சாப்பாட்டிற்கு வழி!
வீடுகளில் பெரும்பாலும் முதலில் ஆண்கள் மற்றும் குழந்தைகள்தான் சாப்பிடுவர். பிறகு மீதம் இருப்பதைத்தான் பெண்கள் சாப்பிடுவர். இதனால் பெண்களுக்கு இரு நன்மை. அளவாக சாப்பிடுகிறார்கள். அதே சமயம் கூடுதலாக சாப்பிடாததால் அவர்கள் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.
சுத்தம் பராமரித்தல்!
பெண்கள் பல காரியங்களை செய்தாலும் மறக்காமல் உடனுக்குடன் கையைக் கழுவுவர். உண்மையில் அடுத்தவர்களுடன் கைகுலுக்கினால் கூட கையைக் கழுவவேண்டும். பெண்களிடமிருந்து ஆண்கள் கண்டிப்பாக கற்க வேண்டிய பாடம் இது.
தலைக் குடைச்சல் தவிர்த்தல்!
பெண்கள் தாங்கள் சார்ந்த குடும்பப் பிரச்னைகளை, பெரியவர்களிடம் உடனுக்குடன் பேசி, தீர்வுகண்டு, தலையினுள் பிரச்னை; குடையாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்வர். இதனை பெண்களிடமிருந்து ஆண்கள் கற்க வேண்டும். மனைவியுடன் பகிர்ந்து கொண்டு; தீர்வு பெற்று தலைக்குடைச்சலை ஆண்கள், தவிர்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.