நடிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும்: மனம் திறக்கிறார் அமலாபால்

ஹிந்தியில் கடந்த மாதம் வெளியான "நில் பண்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்காக வருகிறது "அம்மா கணக்கு.' அம்மாவிற்கும்
Updated on
2 min read

ஹிந்தியில் கடந்த மாதம் வெளியான "நில் பண்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்காக வருகிறது "அம்மா கணக்கு.' அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வுகள் மூலம் பதிவு செய்து இருக்கும் படைப்பு இது. 15 வயது மகளுக்கு அம்மாவாக நடிப்பது அமலாபால். இளையராஜா இசையில், அஸ்வினி ஐயர் இயக்கி வருகிறார். தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்காக அமலாபாலுடன் நடந்த சந்திப்பு இது....

எப்படி இருக்கீங்க?

அழகான காதல், அன்பான கணவன்... ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன். பிறந்து வளர்ந்தது கேரளமாக இருந்தாலும், சினிமா அறிமுகம் என்பது தமிழ்தான். அதே போல் திருமணமாகி இருப்பதும் தமிழ்நாட்டில்தான். அதனால் எப்போதுமே எனக்கு தமிழ்நாடு ஸ்பெஷல். நிறைய பேர் "தமிழ்நாட்டு மருமகளே' என்பார்கள். அது எனக்குப் பிடிக்காது. "தமிழ்நாட்டு பெண்' என்பதில்தான் மகிழ்ச்சி. பரபரப்பான சினிமாவிலிருந்து விலகி குடும்பம், உறவுகள் என்று இருப்பது கொஞ்சம் நிம்மதிதான்.

காதல்... திருமணம்... வாழ்க்கை... எப்படி இருக்கிறது...?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கையில் "பெஸ்ட் மொமெண்ட்' என்று இதை சொல்லலாம். ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்தால், அவளது தனிப்பட்ட வாழ்க்கை போய் விட்டது என எல்லோருமே நினைத்துக் கொள்கிறோம். திருமணத்துக்குப் பின்புதான் ஒரு பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்க்கை ஆரம்பமாகிறது. சொந்த தொழில், குழந்தை வளர்ப்பு இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அது தனிப்பட்ட விருப்பம்தான். நான் இப்போது நடிப்பதை விரும்புகிறேன். அதை விஜய்யிடம் சொன்னதும், ""உனக்கு பிடித்ததை செய்...'' என்று சொல்லி விட்டார். அந்த சுதந்திரத்தை அழகான தருணங்களாக மாற்ற வேண்டும். அதற்காகத்தான் நல்ல படங்களில் நடித்து வருகிறேன். நிறைய பேர் "எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள போகிறீர்கள்' என்பதை வழக்கமான கேள்வியாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லுவது, அதற்கு நிறைய காலம் இருக்கிறது என்பதுதான்.

"அம்மா கணக்கு' படத்துக்காக அம்மா வேடத்தில் நடிப்பது பற்றி...?

 ஒரு பெண்ணுக்கு அவள் அப்பாவை விட, மற்ற பந்தங்களை விட தாயான பெண்ணைத்தான் ரொம்பப் பிடிக்கும். அதில் உணர்ச்சிப்பூர்வமான பந்தம் இருக்கும்.

15 வயது யுவாவுக்கு நான் இதில் அம்மா. எனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையேயான உறவின் அற்புதங்கள்தான் கதை.  அம்மாவாக நடித்து விட்டீர்கள், இனி இப்படியான கேரக்டர்கள்தான் வரும்... என நிறைய பேர் பயமுறுத்தினார்கள். நான் அதற்காக பயப்படவில்லை. எனக்கு வேண்டியது நல்ல கேரக்டர்கள்தான். அதற்காக கதாநாயகனுக்கோ, கதாநாயகிக்கோ அம்மாவாக நடிக்கும் வயது எனக்கு கிடையாது. இப்போது கூட மலையாளத்தில் "ஷாஜஹானும் பரிக்குட்டியும்', கன்னடத்தில் "பாபி' என அடுத்தடுத்து அழகான படங்கள் இருக்கிறது. தமிழில் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கின்றன. நல்ல படங்கள் அமைந்தால், தொடர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  

திருமணத்துக்குப் பின் நடிப்பை விட்டு விலகுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், "பசங்க 2', இப்போது "அம்மா கணக்கு' என வரிசையாக நடிக்கிறீர்கள்...?

விலகவே இல்லை. நான் எப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். "பசங்க 2' நம் குழந்தைகளின் கல்வி முறை சார்ந்த படம். இந்த மாதிரி சில நல்ல படங்களில் என்னால் முடிந்த அளவு நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.  ஆனால், என்னைப் பற்றி ஏதேதோ தகவல்கள் பரவியிருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்.  என் கணவர் விஜய் நடிப்பதற்கு ஒப்புதல் தந்தார். இந்த சுதந்திரம் வேறு ஒரு நடிகைக்கு கிடைக்குமா? என்பது சந்தேகமே. அதனால்தான் நல்லப் படங்கள் என் தேர்வாக இருக்கிறது. இப்போது நடிக்கும் "அம்மா கணக்கு' வெளிவந்தால் என் நடிப்பு வேறு தளத்துக்குச் செல்லும்.  நல்ல கேரக்டர்கள் எப்போது வந்தாலும் நான் நடிக்கத் தயார்.

சினிமா என்றாலே பெண்கள் இப்படித்தான் என்று வரையறுத்து விட்டார்கள்...?கல்யாணம் ஆனாலோ, அல்லது 35 வயதை தாண்டினாலோ சரியான கேரக்டர்கள் கிடைப்பது இல்லை... ரொம்ப அரிதாகத்தான் சில படங்கள் அமைகின்றன...?

உண்மைதான். ஹீரோக்கள் 60 வயதிலும் அழகான ஹீரோயின்களிடம்  டான்ஸ் ஆடுவார்கள். பெண்களைப் பொருத்தவரை அது வேறு மாதிரி தான் இருக்கிறது.  ஆனாலும் ஜோதிகா, ஐஸ்வர்யாராய் மாதிரி இப்போது கொஞ்சம் முன்னேற்றம் வந்து விட்டது. இது இன்னும் அதிகரிக்க வேண்டும். நடிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com