ஆப்பிள் ரீங் ரோல்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 3-4
மைதா - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
ஏலம் தூள் - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
முட்டை - 1
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
பொடித்த சர்க்கரை - 1/2 கிண்ணம்
செய்முறை:
ஆப்பிளை வட்ட துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே உள்ள பகுதியையும் வட்டமாக நீக்கி வளையங்களாக்கிக் கொள்ளவும். அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து, அதில் உள்ள அதிகப்படியான ஈரத்தன்மையை நீக்க வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மைதா, பேக்கிங் சோடா, சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து மற்றொரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து, பின்னர் அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை மாவுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஆப்பிள் துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலம் தூளை சேர்த்து கலந்து, அந்த கலவையில் பொரித்து வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளைப் பிரட்டி எடுத்தால், ஆப்பிள் ரிங் ரோல் ரெடி.
***
மைசூர் போண்டா
தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம்
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - அரை கிண்ணம்
பெருங்காயத்தூள், ஆப்பசோடா - 1 சிட்டிகை
முந்திரி - 8 நறுக்கியது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: உளுத்தம் பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வைத்து மெத்தென்று அரைத்துக் கொள்ளவும். பின்னர், இஞ்சி, மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். அத்துடன் 1 சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை ஆப்ப சோடா மாவு சேர்க்கவும். அத்துடன் தேங்காய், மிளகு, சீரகம், உப்பு,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்னர், காயவைத்த எண்ணெய்யில் சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போட்டு நன்கு வேக வைத்து எடுத்தால் சுவையான மைசூர் போண்டா ரெடி.
***
முட்டை பணியாரம்
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - ஒரு கிண்ணம்
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும். பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அவற்றை தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் தாளித்த பொருட்களை முட்டை இட்லிமாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அதன்பின்னர், குழிப்பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக் கல்லில் முக்கால் பாகம் அளவிற்கு ஊற்றவும். பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான முட்டை பணியாரம் தயார்.
***
ஸ்வீட் கார்ன் கட்லட்
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 2
உருளைக் கிழங்கு (வேகவைத்து மசித்தது ) - 1 கிண்ணம்
பன்னீர் (துருவியது) - 1/2 கிண்ணம்
வெங்காயம் (நறுக்கியது ) - 1/2 கிண்ணம்
இஞ்சி (பொடியாக நறுக்கியது)- சிறிது
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி- தேவைகேற்ப
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை: ஸ்வீட் கார்னை வேகவைத்து மசித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக் கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். நறுக்கிய வெங்காயத்தின் மீது சிறிது உப்பு தூவி சிறிதுநேரம் அப்படியே வைக்கவும். ஸ்வீட் கார்ன் கலவையுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், சீரகத் தூள், பச்சை மிளகாய், கொத்துமல்லி சேர்க்கவும். அத்துடன் உப்பு சேர்த்த வெங்காயத்தை நன்றாக பிழிந்து எடுத்து தண்ணீர் இல்லாமல் இந்த கலவையுடன் கலக்கவும். நன்றாக கலந்த பிறகு கட்லட்டாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.
***
வெண்டைக்காய் ஃபிங்கர் சிப்ஸ்
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/2 கிலோ
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் ஒத்தியெடுத்து, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய்த் தூள் சேர்த்து,அத்துடன் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசறிக் கொள்ள வேண்டும். அல்லது வெண்டைக்காயை நீளவாக்கில் கீறிவிட்டு நடுவில் கலந்து வைத்துள்ள மசலாக்களை வைத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில் புரட்டி வைத்துள்ள வெண்டைக்காயை மொர மொரப்பாக பொரித்தெடுத்தால், வெண்டைக்காய் ஃபிங்கர் சிப்ஸ் தயார்.
____
மீன் ரோல்
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகளாக - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
செய்முறை: மீனைச் சுத்தம் செய்து, சிறிது நீர்விட்டு வேகவைத்து முள், தோல் நீக்கி பிசறிக் கொள்ளவும். பின்னர், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, அரிசி மாவு சேர்க்கவும். அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், உப்பு, சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர்,எண்ணெய்யைக் காயவைத்து சிறுசிறு ரோல்களாகச் சுறுட்டி சுட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.