நீ இருக்கும் இடத்தில் நீதியும் இருக்கும்! பா. ஜோதி நிர்மலாசாமி
1990 களில் வருவாய் கோட்ட அதிகாரியாக "டெபுடி கலெக்டர் நிலையில்' நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆங்காங்கே நடக்கும் அநீதிகள் குறித்து அடிக்கடி நேரடி தகவல்கள் வரும், ஒரு பெண் கோட்ட அதிகாரியாக இருந்ததால்தானோ என்னவோ அநேகர்... குறிப்பாக, பெண்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் சொல்வார்கள். ஒருநாள் காலை ஒரு வீட்டில் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் உடனே வந்தால் பிடித்து விடலாம் என்றும் ஒருவர் சொன்னார். நம்மை நம்பி ஒரு தகவல் சொல்லப்பட்டால் அதற்கு ஏற்பு நடவடிக்கை எடுப்பதே தகவல் தருபவருக்கு தரப்படும் மரியாதை என்பதால் உடனடியாக எனது பரிவாரங்களுடன் புறப்பட்டேன். உள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து நான்கைந்து காவலர்களும், வருவாய் துறையினர் ஐந்தாறு பேரும் இரண்டு வாகனங்களில் சென்றோம்.
அடையாளங்கள் மிகத் துல்லியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததால் அதிக தேடல் தேவைப்படவில்லை, சரியான முகவரியில் போய் நின்றோம். சிறிய ஓட்டு வீடு... தென்னந்தோப்புடன் பாதுகாப்பான சுற்றுச் சுவர் கொண்டதாக இருந்தது. போய் இறங்கியவுடன் எனக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது, என்னை எதிர்கொண்டது கல்லூரி படிப்பு படிக்கும் நிலையிலான மூன்று இளம்பெண்கள், அவர்களது தாயார் மற்றும் தகப்பனார். அவர்களைத் தாண்டி அவர்களின் வீட்டிற்குள் சென்று கள்ளச்சாராயத்தைத் தேடுவதற்கு தயக்கமாக இருந்தது, இருந்தாலும் கடமை என்று வரும்போது தெரிவுக்கும் சொந்தக் கருத்துக்கும்
இடமில்லை.
அப்பெண்களிடம் வந்த காரணத்தை நானே சொல்லிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். என்னுடன் வந்தோர் சாராயம் தேடினர், வீட்டினுள் இல்லை. விளையிலும் (தோட்டம்) இல்லை. அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள். தவறிழைத்து விட்டேனோ என தோன்ற ஆரம்பித்தது. தேடலில் எதுவும் கிடைக்கவில்லையென்றவுடன், எல்லோரும் கிளம்புங்கள் எனச் சொல்லி விட்டேன். என்னுடன் வந்தவர்கள் இரண்டு வாகனங்களிலும் தங்களை நிரப்பிக் கொண்டார்கள். கடைசியாக நானும் எனக்குப் பின்னே எனது அலுவலக உதவியாளரும் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். அதுவரை மிக அமைதியாக இருந்து கொண்டிருந்து, என்னுள் மெலிதான குற்ற உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த அம்மூன்று பெண்களும் நாங்கள் கிளம்புகிறோம் என்றவுடன் வேறு ஓர் அவதாரம் எடுத்தார்கள்.
மூன்று பேரும் என்னை ஏறக்குறைய மறித்துக்கொண்டு நின்று கொண்டார்கள். ஒருத்தி கேட்டாள், ""நாங்கள் கல்லூரியில் படிக்கும் பெண்கள், நீங்கள் இப்படி வந்து ரெய்டு செய்தால் நாங்கள் எப்படி நாளைக்கு கல்லூரிக்குச் செல்வது?''. இரண்டாமவள் ""ஒரு பெண்ணாக இருந்தும் நீங்கள் எங்களைக் கேவலப்படுத்தி விட்டீர்களே'' என்றாள், மூன்றாமவள் இன்னமும் கோபமாய் ""எங்கள் வீட்டில் ரெய்டு நடந்த பின் எங்களுக்கெல்லாம் எப்படி கல்யாணம் ஆகும்?'' எனச் சீறினாள். இது திடீரென்று பிறந்த ஆவேசமாகவும், அப்பாடா... தப்பித்தோம் என்ற நிம்மதி உணர்வில் பிறந்த தாற்காலிக ஆதாயமாகவும் எனக்குப் பட்டது. "இதில் ஏதோ உள்ளீடு உள்ளது' என எனது உள்மனது சொன்னது. நடந்து கொண்டே அவர்களைத் தாண்டி அவர்களின் வீட்டிற்கு வெளியே வந்து விட்டிருந்தேன். வாகனங்கள் நான் வருவதற்காக காத்திருந்தன. திரும்பி அப்பெண்களைப் பார்த்தேன், கண்களில் நிம்மதியையும் ஆனால் உதடுகளில் வெறுப்பையும் கொண்டிருந்தனர்,
என் உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து மீண்டும் வீட்டிற்குள் சென்றேன். எனது அலுவலக உதவியாளர் மட்டும் என்னுடன் வந்தார், வீட்டைச் சுற்றிக் கொண்டு நேரடியாக பின்னால் இருந்த தோட்டப் பகுதிக்குச் சென்றோம். அழகான தென்னந்தோப்பு, ஆங்காங்கே தென்னை ஓலைகள் சிதறிக் கிடந்தன. ஆனாலும் ஆறு இடங்களில் மட்டும் வேயப்பட்ட ஓலைகள் குறைந்த எண்ணிக்கையில் மிக நேர்த்தியாக தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, ஆறு இடங்களுக்கும் இடையே அளவெடுத்தாற்போல் இடைவெளி. ஏதோ பொறி தட்டிற்று, எனது உதவியாளரை ஒரு ஓலை அடுக்கை எடுத்து பிரிக்கச் சொன்னேன். எனது கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஓரிடத்தில் மட்டும் பத்து பெரிய பெரிய சாராயக் கேன்கள், முழு சாராயத்துடன். அடுத்த அடுக்கை உதவியாளர் பிரித்தார், அங்கும் சாராயம். அடுத்த அடுக்கிலும், அதற்கு அடுத்த அடுக்கிலும்...
எனது உதவியாளர் வீட்டின் வெளியே ஓடினார், காவலர்களையும் வருவாய் துறையினரையும் அழைத்து வந்தார், பிறகென்ன, அனைத்து சாராய கேன்களும் வெளியே எடுக்கப்பட்டன. மொத்தம் ஆறு வரிசை, வரிசைக்குப் பத்து என அறுபது கேன்கள், சாராயம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது, கலால் காவல் துறையினர் அழைக்கப்பட்டனர், அவர்கள் தங்கள் நடைமுறைகளைத் தொடர்ந்தனர்.
இப்போது, என்ன செய்வது இப்பெண்களை? ரெய்டு முடிந்த நிலையில் எங்களை ஏமாற்றி விட்ட சந்தோஷத்தை மறைக்கத் தெரியாமல் தாங்களாகவே வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட இப்பெண்களை நான் என்ன செய்திருக்க முடியும்? பெண்களாகிய அவர்கள் அங்கே இருப்பதால் அவ்விடத்தே அநீதி இருக்காது என்று நினைத்திருந்த என்னை அவர்கள் ஏமாற்றினார்கள்.
பெண் அதிகாரி என்ற நிலையில் அவர்களுக்கு நான் காட்ட வேண்டிய பரிவை என்னிடம் இருந்து அவர்கள் ஏற்கெனவே எடுத்து விட்டிருந்தார்கள். ஓரிடத்தில் பெண் ஒருத்தி இருந்தால் அங்கே நீதியும் இருக்கும் என்ற எனது எதிர்பார்ப்பை அவர்கள் பொய்த்து விட்டார்கள் என்பதால் மிகக் கடினமான அதிகாரியாக நான் மாற்றப்பட்டிருந்தேன். வீட்டில் இருந்த அனைவரையும் கள்ளச் சாராயப் பதுக்கல் குற்றத்திற்காக காவல் துறையிடம் ஒப்படைத்தேன். மகளிர் காவலர் வந்து இப்பெண்களை ஜீப்புகளில் கொண்டு சென்றதைப் பார்த்து நின்றேன். "இவர்கள் பேசாமலாவது இருந்திருக்கலாமே' என தோன்றிற்று.
அடுத்த இதழில்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

