சம்மர் ஸ்பெஷலை முன்னிட்டு விதவிதமான வற்றல்கள் போடுவது எப்படி என பார்க்கலாம்
அரிசி கூழ் வற்றல்
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 4 கிண்ணம்
தண்ணீர் - 8 கிண்ணம்
பச்சைமிளகாய் - 8
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: முதல் நாள் மாலை, ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு தேவையான அளவுத் தண்ணீரை ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்து வைக்கவும். இரவு முழுதும் புளிக்க விடவும். மறுநாள் காலை, புளித்த மாவில் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்க்கு கரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்து மாவில் சேர்க்கவும்.
வேறொரு வாயகன்ற அடி கனமான பெரிய பாத்திரத்தில், 8 கிண்ணம் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, கரைத்து வைத்துள்ள மாவை, ஒரு கையால் கிளறிக் கொண்டே அதில் ஊற்றவும். உதவிக்கு இன்னொருத்தர் இருந்தால், ஒருவர் ஊற்ற, இன்னொருவர் கிளற சுலபமாயிருக்கும். மாவு கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். உப்பு சரிபார்த்து, நன்றாகக் கிளறி கீழே இறக்கி வைத்து ஆற விடவும்.
பிறகு, மொட்டைமாடியில் வெயில் நன்றாக படும் இடத்தில் ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பேப்பரை விரித்து, முறுக்கு அச்சில், ஒற்றை நட்சத்திர வில்லையைப் போட்டு, கம்பிபோல் நீளமாக பிழிந்து விடவும். வற்றல் நன்றாக காய்ந்ததும், தானாகவே பேப்பரை விட்டு பிரிந்து விடும். பிறகு, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
•••
ஜவ்வரிசி வற்றல்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 2 கிண்ணம்
தண்ணீர் - 6 கிண்ணம்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை: ஜவ்வரிசியை தண்ணீரில் இரவு முழுதும் ஊற விடவும். மறுநாள் காலையில், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் 6 கிண்ணம் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுது, ஊற வைத்துள்ள ஜவ்வரிசி (தண்ணீரை வடித்து விட்டு), எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். ஜவ்வரிசி வெந்து, மினுமினுப்பாக மாறும். கெட்டியாக வந்ததும் இறக்கிவிடவும், மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெந்நீரை ஊற்றிக் கிளறவும். நீர்க்க இருந்தால், சிறிது அரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கிளறினால் கெட்டியாகி விடும். உப்பு சரிபார்த்து, கூழும் பதமாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். பிறகு மேலே சொன்னவாறு பிளாஸ்டிக் பேப்பரில் ஊற்றி காயவிடவும்.
•••
கொத்தவரங்காய் வற்றல்
தேவையான பொருட்கள்:
கொத்தவரங்காய் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: ரொம்ப பிஞ்சாக இல்லாத கொத்தவரங்காய்களாகத் தேர்வு செய்து, அடி, நுனி நீக்கிவிட்டு அலசி, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் குக்கரில் 2 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து எடுத்து வெயிலில் காயவிடவும். இது நன்கு காய வேண்டும் (அதாவது உடைக்கும் பதம் வரும் வரை). பிறகு, எடுத்து பத்திரப்படுத்தவும்.
••••
உருளைக்கிழங்கு வற்றல்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - அரை கிலோ
உப்பு - முக்கால் தேக்கரண்டி
செய்முறை: உருளைக்கிழங்குகளைத் தோல் நீக்கிச் சுத்தம் செய்து, சிப்ஸýக்கு சீவுவது போன்று மெலிதான வட்டங்களாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்து, குக்கரில் அமிழும்படி தண்ணீரை வைத்து, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி விடவும். உடனே வடிதட்டில் கொட்டித் தண்ணீரை வடிய வைக்கவும். ஆறிய பிறகு தனித்தனியாகப் பிரித்துப் பரத்தி வெயிலில் உலர்த்தவும். நன்றாகக் காய்ந்த பிறகு பத்திரப் படுத்தவும்.
•••
வெண்டைக்காய் வற்றல்
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1 கிலோ
தயிர் - 6 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: வெண்டைக்காய்களை ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். இதுபோன்று 2, 3 நாட்கள் நன்றாக காயவக்கவும்.
நன்றாக காய்ந்தபின் தயிரில் உப்பு சேர்த்து, இந்த வெண்டைக்காய்களைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து மறுபடியும் வெயிலில் காயவிட்டு எடுத்து வைக்கவும். இதைப் பொரித்து சாப்பிடலாம். குழம்பு செய்யவும் பயன்படுத்தலாம். பிறகு, ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.
•••
கத்திரிக்காய் வற்றல்
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1/4 கிலோ
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: முற்றின கத்திரிக்காய்களாக வாங்கி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். அரை வேக்காடு வெந்ததும் நீரை வடித்து, வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் உபயோகப்படுத்தலாம்.
வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்த வற்றலைப் பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருக்கும். சாதத்துக்கு வற்றலாகவும் பொரித்து சாப்பிடலாம்.
•••
மணத்தக்காளி வற்றல்
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி காய் - கால் கிலோ
தண்ணீர் - அரை லிட்டர்
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை: தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, அடுப்பிலிருந்து இறக்கி... உப்பு, மணத்தக்காளி சேர்த்து மூடி வைக்கவும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை நன்றாக வடிகட்டவும். மணத்தக்காளிக்காயை, ஒரு வாரம் வரை வெயிலில் காயவிடவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்தவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்தவும்.
•••
தக்காளி ஜவ்வரிசி வற்றல்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
ஜவ்வரிசி - ஒரு கிண்ணம்
இஞ்சிச் சாறு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: தக்காளியை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தக்காளிக் கூழ், இஞ்சிச் சாறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பை அணைத்து இறக்கி வைத்து, எலுமிச்சை பழத்தைப் பிழிந்து கலக்கவும். இந்தக் கலவையை ஆறியதும் சிறிது சிறிதாக எடுத்து, பிளாஸ்டிக் பேப்பர் அல்லது சுத்தமான துணியில் ஊற்றிப் பரப்பி காயவிடவும். நன்றாக காய்ந்த பிறகு எடுத்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
இதே முறையில் புதினாவிலும் செய்யலாம். பச்சைநிறத்தில் நல்ல வாசனையாகவும் இருக்கும்.
•••
அவல் வற்றல்
தேவையான பொருட்கள்:
அவல் - அரை கிலோ
தயிர் - அரை கிண்ணம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அவலை நன்றாக மண் போக அலசி வீட்டு, தயிரை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்தவுடன் இறக்கி அத்துடன் பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இதில் போட்டுப் பிசையவும். இந்த மாவை கையால் எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் கிள்ளிக் கிள்ளி வைத்து, வெயிலில் காயவிட்டு எடுத்து வைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.