வானம் எனது உலகமாகியிருக்கிறது : தமிழக பெண் விமானி காவ்யா

தமிழ் நாட்டின் பெரிய கிராம நகரமான மதுரையில், விமான நிலையம் வருவதற்கு முன், வானத்தில் விமானம் பறந்து மதுரை மக்கள் யாரும் பார்த்ததில்லை.
Updated on
3 min read

தமிழ் நாட்டின்  பெரிய  கிராம நகரமான  மதுரையில்,  விமான நிலையம்  வருவதற்கு முன்,  வானத்தில் விமானம் பறந்து   மதுரை மக்கள்  யாரும்  பார்த்ததில்லை.

பாடப் புத்தகத்தில்  விமானம் பற்றிப் படித்தும், சினிமா டிவிக்களில்  விமானத்தைப்  பார்த்தும் வளர்ந்த  ஒரு  மதுரை  மங்கை, விமானியாக  பறக்கிறார் என்பதை  மதுரை மக்களே  நம்பவில்லை.

காவ்யா, மதுரையின் பெருமைகளுள்  ஒன்றாக மாறியிருப்பவர். மதுரையின் செல்ல  மகள். தமிழ் நாட்டின் முதல் தமிழ் பெண் விமானி காவ்யா.

""ஆகாசத்தில்,  தனியே  தன்னந்தனியே  பறக்க  அத்தனை  ஆசையா''

""ரொம்ப ரொம்ப ஆசை. அது  பகலிலும்   இரவிலும்  ரசித்துப்  பார்த்து வந்த கனவு... பறவை  மாதிரி  ஜிவ்வென்று  பறக்க  மாட்டோமா... விண்ணைத் தாண்டி பல நாடுகள் போகமாட்டோமா  என்ற ஆசை, இப்போது நிஜமாகியிருக்கிறது. ஆம்! விண்ணைத்  தொட்டு  சுற்றுகிறேன்.  வானம்  எனது  உலகமாகியிருக்கிறது. விமானத்தை நான்தான் ஓட்டுகிறேனா? நானேதான் ஓட்டுகிறேனா? என்று   நம்ப முடியாமல், என்னை நானே பல முறை கிள்ளிப் பார்த்திருக்கிறேன். விண்ணில்  சுற்றிலும் கீழே மேலே  விரிந்து கிடக்கும்  நீல  நிற  வானம். பிரமாண்ட  பஞ்சுப்  பொதிகளாய்   மிதக்கும்  மேகங்கள். அந்த  மேகத்தினுள்  விமானம்  நுழைந்து  கடக்கும்  போது,   மேகம்  என்னை  தடவிச்  செல்வது  போன்ற  அனுபவம்... ஓ..    அதை  வார்த்தைகளில்  விவரிக்க  முடியாது...'' என்று  காவ்யா  சிலிர்க்கிறார்.

காவ்யாவின் அப்பா  ரவிகுமார்  மதுரையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில்  பேருந்து  ஓட்டுநராக பணிபுரிகிறார்.  வீட்டோடு    இருக்கும்  அம்மா  கல்பனா. ஒன்பதில் படிக்கும் தங்கை. சாதாரணக்  குடும்பம். ஆனால்

சாதனைக் குடும்பம்.

காவ்யா மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்.  மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்து முடித்ததும், கர்நாடக அரசு  பெங்களூருவில் ஜக்கூர்  பகுதியில் நடத்தி  வரும்  விமான  பயிற்சி நிலையத்தில்  சேர்ந்தார்.  இந்தப் பயிற்சி நிலையம் இந்தியாவின் பழமையான  பயிற்சி நிலையம்.  214 ஏக்கர்  பரப்பளவில்  அமைந்திருக்கும்  இந்தப் பயிற்சி நிலையம்  விமானியாக   தேவையான  பயிற்சிகளை அளித்து பயிற்சியின் முடிவில்  லைசென்ஸ் வழங்குகிறது.  இந்த லைசென்ஸ்  கிடைத்தால் மட்டுமே  விமானத்தை ஓட்ட முடியும்.

""விமானம் ஓட்டுவது,  விளையாட்டான விஷயம் இல்லை. விமானத்தில்  ஏறி அமர்ந்து, விமானம்  தரையிலிருந்து  வானம் நோக்கி உயரும்   போது  விமானத்தினுள்  அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு  அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கும்.  பயணத்தின்  போது, கட்டாந்தரையில் கார்  போகும் போது அதிருமே... அதேபோன்று  விமானமும் சில சமயம்  மேகத்தினுள்  கடந்து போகும் போது அதிரும். பயணிகள் அப்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களையும், 500 கோடி மதிப்புள்ள விமானத்தையும் பாதுகாப்பாக தரையிறக்க வேண்டும். பொறுப்புகள் அதிகம். கடந்த ஆறு ஆண்டுகளில், ஒரு கி. மீ  நீளமுள்ள  சிறிய ரன் வேயில்,  தனி ஆளாக  தரையிலிருந்து விமானத்தை  வானம் நோக்கி பறக்கச் செய்து நிர்ணயிக்கப்பட்டிருக்கும்   நேரம் வரை  விண்ணில் பறந்து, பிறகு  விமானத்தை  தரை  இறக்கிய  பெண் விமானி நான்தான். இதை ""சோலோ'' என்பார்கள்.  பயிற்சி காலத்தில் மட்டும் தான் தனியாக  விமானம் ஓட்ட முடியும். சாதாரணமாக  ஒரு விமானத்தில் இரண்டு விமானிகள் இருப்பார்கள்.  இரண்டு விமானிகளில்,  ஒருவருக்கு திடீரென்று    பயணத்தின்  போது   உடல்நலக் குறைவோ  வேறு ஏதாவது பிரச்னையோ  வந்துவிட்டால்,  இரண்டாவது  விமானிதான்  அந்த விமானத்திற்கு   பொறுப்பாளி.   அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்  மனோதைரியத்தை  ""சோலோ'' பயிற்சி தரும். கார்கில் போரில் தனது திறமைக்காக  ஜனாதிபதி  விருது  பெற்ற,  விங் கமாண்டர் அமர்ஜித் சிங் டாங்கே தான் எனக்கு பயிற்சி கொடுத்தார்.

என்னதான்  பயிற்சி  பெற்றாலும்,   முதல் முறையாக தனியாக   விமானம் ஓட்டும் போது  மனசு  மட்டுமல்ல கையும் காலும் நடுங்கத்தானே செய்யும். ரன் வேயில்  கொஞ்சம் ஓடி.  பிறகு  வேகம் கூட்டி   விமானத்தை தரையிலிருந்து  வானம் நோக்கி  அம்பாகப்  பாயச் செய்கிற  போது., எல்லாம்  நல்லபடியா  நடக்கணும்னு... பதட்டம் வரத்தான் செய்யும்.  அவற்றைச் சமாளித்து   தனியாக விமானத்தை     ஓட்டி   மீண்டும்  தரையிறக்கிய பிறகுதான் நிம்மதி வந்தது. இப்போது தனியாக  விமானம் ஓட்டுவது   பழகிப் போய்விட்டது''.

""விமானம்  ஓட்டும்  லைசென்ஸ்  பெற, ஒருவர் 200 மணி நேரம்  விமானம் ஓட்டியிருக்க வேண்டும், அதில் நூறு மணி நேரம்  விமானத்தை  "சோலோ'வாக ஓட்டிய அனுபவம் வேண்டும். நான் இதுவரை 65 மணி நேரம் "சோலோ'வாக  விமானத்தில் பறந்துள்ளேன். ஆரம்பத்தில் ஒரு இஞ்சின்  உள்ள விமானத்தை ஓட்டிப் பழக வேண்டும்.  பிறகு  பல இஞ்சின் உள்ள  விமானத்தைக் குறைந்தது 25 மணி நேரம்  ஓட்டிப் பழக வேண்டும்.  அதற்குப்  பிறகு, டைப்  ரேட்டிங் (பஹ்ல்ங் தஹற்ண்ய்ஞ்) என்ற பிரிவில்  போயிங், ட்ரீம் லைனர்  போன்ற பெரிய  விமானத்தை மூன்று மாதம் ஓட்டிப்  பழக வேண்டும். இந்த பயிற்சி  அமெரிக்கா, கனடா, ஸ்விட்சர்லாந்து   போன்ற நாடுகளில் மட்டுமே கிடைக்கும். நான், ட்ரீம் லைனர் விமானம் ஓட்டும் பயிற்சிக்காக  ஸ்விட்சர்லாந்து  போகலாம் என்றுள்ளேன்.

ஒரு மணி  நேர விமான பயிற்சிக்கு  இங்கு பத்தாயிரத்து ஐநூறு  ரூபாய் கட்டணம்.  தனியார்  விமான பயிற்சி  நிலையங்களில்  கட்டணம்  இன்னும் அதிகம். எனக்கு  ஸ்காலர்ஷிப்  கிடைத்திருப்பதால்  ரொம்பவும் உதவியாக அமைந்து விட்டது.  ஸ்காலர்ஷிப்  கிடைக்க தாமதம் ஆனதினால்,  பயிற்சியை  உரிய  காலஅளவில்  முடித்து  லைசன்ஸ்  பெற முடியவில்லை. இப்போது  தொடர்ந்து  கல்வி உதவிப் பணம் கிடைப்பதால்,  இந்த ஆண்டில்  விமானி லைசன்ஸ்  வாங்கி விடுவேன். விமானி ஆக  எல்லாப் பிரிவிலும்  பயிற்சி பெற குறைந்த பட்சம் ஐம்பது லட்சம் வரை  செலவாகும்.

இந்தியாவில்,  வானத்தில்  விமானம் ஓட்டி   அதிகபட்சம்   கடல் மட்டத்திலிருந்து, 45,000 அடிகள்  வரை பறக்கலாம்.. நான்,  நான்கு இருக்கைகள் கொண்ட  செஸ்னா 172 பி சிங்கிள் என்ஜின்  சிறு விமானத்தை  ஓட்டியிருக்கிறேன். தனி ஆளாக தரையிலிருந்து 3700 அடி உயரத்தில் 90 நாட்ஸ் வேகத்தில்  பறந்துள்ளேன். டேக் ஆப்  (பறப்பது), லேண்டிங் (தரை இறங்குவது)  இவற்றை  "தானே  செய்யும்  தொழில் நுட்பங்களைக்  கொண்டிருக்கும் விமானங்கள்'  வந்துவிட்டன. என்றாலும்,  எல்லாம்  முறைப்படி  இயங்குகிறதா  என்று கண்காணிக்க  சாதுர்யமுள்ள விமானம்  குறித்து  "அத்துப்படியான  விமானி' தேவை.

சிக்கலான  சூழ்நிலைகளை   சாமர்த்தியமாக  எதிர் கொள்ள வேண்டும்  என்று நினைப்பவள் நான்.  சென்ற ஆண்டு,  மகாராஷ்டிரா மாநிலத்தில்,  பயிற்சி   விமானி, விமானத்தில் ஏதோ கோளாறு காரணமாக  விமானத்தை தரை இறக்க  பாதுகாப்பான  ரன் வே  கிடைக்காததால்,  தேசிய நெடுஞ்சாலையில்  விமானத்தைப் பத்திரமாக  இறக்கினார்.   சவாலாக   அமையும்  இது போன்ற தருணங்களை  சாமர்த்தியமாகக் கையாண்டு அதில் சாகசத்தையும் சேர்க்க வேண்டும்.  சிறந்த  விமானி அப்படித்தான் இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com