சின்னத்திரை துளிகள்..

ராஜ் டிவியில் ஒளிபரப்பான 'என் இனிய தோழியே', 'சபீதா என்கிற சபாபதி' ஆகிய தொடர்களில் நடித்து வந்த பிரியங்கா. தற்போது ரம்யா கிருஷ்ணனின் 'வம்சம்' சீரியலில் நடித்து வருகிறார். இதுகுறித்து பிரியங்கா கூறுகையில்:
Published on

ராஜ் டிவியில் ஒளிபரப்பான "என் இனிய தோழியே', "சபீதா என்கிற சபாபதி' ஆகிய தொடர்களில் நடித்து வந்த பிரியங்கா. தற்போது ரம்யா கிருஷ்ணனின் "வம்சம்' சீரியலில்  நடித்து வருகிறார். இதுகுறித்து பிரியங்கா கூறுகையில்: 

கேப்டன் தொலைக்காட்சியில் நான் தொகுப்பாளினியாக இருந்தபோது சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பொருத்தமான, பிடித்தமான கேரக்டர்களாக இருந்ததால் சீரியல் நடிகையாக மாறினேன். அப்படி நான் முதன்முதலில் நடித்த என் இனிய தோழியே சீரியலில் நான் நடித்த கேரக்டரும், நடிப்பும் நன்றாக ரீச் ஆனது.

 அதைப்பார்த்து விட்டு சபீதா என்கிற சபாபதி சீரியல் வாய்ப்பு வந்தது. அதையடுத்து இப்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த தொடரில் ஹீரோயின் பூமிகாவின் சகோதரியாக நடிக்கிறேன். நான் நடிக்கும் ஜோதிகா என்கிற வேடம் பாசிட்டிவானது. நல்லது மட்டுமே செய்யக்கூடிய வேடத்தில் நடிக்கிறேன். இதனால் சமீபத்தில்தான் எனது கேரக்டர் வந்த போதும் நேயர்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அந்த அளவுக்கு டச்சிங்கான வேடம் என்கிறார் பிரியங்கா.

 "பொன்னூஞ்சல்' என்ற தொடரில் சித்தி வேடத்தில் நடித்து வருபவர் பாலாம்பிகா.  செண்டிமென்ட் அம்மாவாக பல தொடர்களில் நடித்து வந்த எனக்கு இந்த தொடரில் கொடுமைக்கார சித்தி வேடம்  கிடைத்திருக்கிறது.

 சினிமாவில் நடித்து வந்த நான் திருமணத்திற்கு பிறகு ஒரு பிரேக் கொடுத்து விட்டு சின்னத்திரைக்கு வந்தபோது அம்மா வேடங்களாக கிடைத்தன. குறிப்பாக, "பிரியமானவளே' தொடரில் அவந்திகாவின் அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது நல்ல ரீச் ஆனது. அதனால் அடுத்தடுத்து அம்மா வேடங்களே கிடைத்தபோதும், அந்தந்த கதைக்களங்களின் சூழலுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். அதனால் தொடர்ந்து அம்மா வேடம் என்றாலும் என்னால் மாறுபட்ட நடிப்பை கொடுக்க முடிந்தது.

 இப்போது பொன்னூஞ்சல் தொடரில் வில்லியாக நடிக்கிறேன். அக்கா பிள்ளைகளின் சொத்தில் வாழ்ந்து கொண்டே அவர்களை கொடுமை செய்யும் சித்தியாக நடிக்கிறேன். என்னைப் பொருத்தவரை இது ஒரு மாறுபட்ட வேடம் என்பதால் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். மேலும், பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிப்பவர்களை கண்டால் நேயர்கள் திட்டுவார்கள். ஆனால் என்னை சந்திக்கும் பெண்கள், இந்த சீரியலில் உங்கள் நடிப்பு வித்தியாசமாக உள்ளது என்கிறார்கள். அதனால் இந்த தொடர் என்னை சின்னத்திரையில் பரபரப்பான நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாலாம்பிகா.

சுமார் 30 சீரியல்களுக்கு மேல் நடித்தவர் லதாராவ். ஆனால் கடந்த இரண்டு ஆண்டு

களாக அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. அதேசமயம் சில படங்களில் நடித்து வருகிறார். அவரிடத்தில், மீண்டும் சின்னத்திரைக்கு வருவீர்களா என்றுபோது...

சின்னத்திரைதான் என்னை மக்களுக்கு அடையாளம் காட்டியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நடித்ததால் இப்போது எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு  எனக்கு நம்பிக்கையை தந்தது சின்னத்திரைதான்.  சீரியல்களில் நடித்து வந்தபோதே, பெரியதிரையில் இருந்து வாய்ப்பு வந்து பல படங்களில் நடிக்க தொடங்கினேன்.  இப்போது பெரியதிரையிலேயே நேரம் சரியாக இருப்பதால் சின்னத்திரைக்கு பிரேக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மேலும்  எனது முதல் மகன் 2-ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படிக்கிறார்கள். அதனால் அவர்களை கவனிக்க எனக்கு நேரம் தேவைப்படுகிறது என்கிறார் லதாராவ்.

ஒரு டிவி சீரியல் ஆரம்பிப்பது முதல் முடிகிற வரை அதில் நான் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால்தான் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை தொடர்ந்து நான் கடைப்பிடித்து வருகிறேன் என்கிறார் மலையாள சீரியல்களில் நடித்து வந்த சந்திரா லட்சுமண்.  தேவயானி நடித்த "கோலங்கள்' தொடரின் மூலம் தமிழுக்கு வந்தவர் இவர்.  முதல் தொடரிலேயே நல்ல வாய்ப்புகிட்ட. அதையடுத்து  சில தொடர்களில் நடித்தார். தற்போது "பாசமலர்' தொடரில்  லீட் ரோலில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்:

 ""பாசமலர் தொடரில் லீடு ரோலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் பாசத்துக்காக நிறைய விசயங்களை விட்டுக்கொடுத்து நடிப்பதால் எனது கதாபாத்திரத்துக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நான் சிலரைப்போன்று பாசிட்டிவ், நெகடிவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிப்பதில்லை. பாசிட்டிவ் வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன். காரணம், எனது முகத்துக்கு செண்டிமென்ட் வேடங்கள்தான் செட்டாகும். அதனால்தான் நடிப்பில் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக நான் நெகடிவ் வேடங்களை ஏற்பதில்லை. அதேபோல், சிறிய வேடங்களிலும் நடிப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் மட்டுமே நடிக்கிறேன்'' என்கிறார்  சந்திரா லட்சுமண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com