125- நாள் தொடர்ந்து கருப்பு  மேக்கப்!

ஒரு பெண்... அதுவும் இளம் பெண், வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது முகத்துக்கு பேஸ் க்ரீம், மணக்கும் பவுடர் போட்டு பளிச்சென இருக்கிறோமா? என்று முகம் பார்க்கும் கண்ணாடியில்
125- நாள் தொடர்ந்து கருப்பு  மேக்கப்!
Updated on
2 min read

ஒரு பெண்... அதுவும் இளம் பெண், வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது முகத்துக்கு பேஸ் க்ரீம், மணக்கும் பவுடர் போட்டு பளிச்சென இருக்கிறோமா? என்று முகம் பார்க்கும் கண்ணாடியில் உறுதி செய்த பிறகுதான் வீட்டை விட்டு இறங்குவார்.  ஆனால் 26 வயதான ஜெயா என்ன செய்கிறார் தெரியுமா? முகம் கழுவியதும், கண்ணுக்குப் போடும் கரிய மையை எடுத்து முகம், கழுத்து, கை, கணுக்காலுக்குக் கீழ் தடவி கருப்பாகிறார். பிறகுதான், வெளியே கிளம்புகிறார்.

 தெருவில் இறங்கியதும், அக்கம் பக்கம் வசிப்பவர்கள், பஸ்ஸில், ரயிலில், ஆட்டோவில் பயணிக்கும் போதும் எல்லோரின் பார்வைகள் அவரை மொய்க்கும். தூரத்தில் இருந்து பார்த்தால் இந்தப் பெண் அட்டக்கரி நிறம். கிட்டே வந்தால் கருப்பு மையைப் பூசியிருப்பது தெரியுது. ஒரு வேளை, இந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லையோ... அல்லது நிறமே இப்படியா, ""இல்லை விசித்திர நோயால்  நிறம் இப்படியாகி விட்டதா... என்ற ரீதியில் அனுதாபத்துடன் ஏற இறங்கப் பார்ப்பவர்களும் உண்டு.  சிலர் ஜெயாவிடமிருந்து  மூன்றடி விலகியே நிற்பார்கள்.

தைரியமான சிலர் ஏன் இப்படி.. என்று  கேட்கத் தவறுவதில்லை. அவர்களிடம்  ஒரு குட்டி லெக்சர் கொடுத்து விட்டுத்தான் அமைதி ஆகிறார் ஜெயா.

ஜெயா இன்று கொச்சி நகரின் ஒரு அடையாளம். இவர் மட்டும், அடர்ந்த கருப்பு நிறத்தில் மெனக்கெட்டு ஏன் காட்சி தர வேண்டும். அவரே சொல்கிறார்:

 ""இந்த  ஆண்டு  ஜனவரி 27-லிருந்து  நான் இப்படி மாறி விட்டேன். ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் ரோஹித்  வெமுலா  என்பவரின்  தற்கொலை  என்னை  வெகுவாகப்  பாதித்தது. இந்தியாவையே அதிரச் செய்த இந்த  சம்பவம்,  எங்கோ  ஹைதராபாத்தில்   நடந்த  சம்பவம் என்று என்னால் சும்மா இருக்க முடியவில்லை. மனித  உயிருக்கு  மதிப்பு  தராத  கொடுமையை எதிர்த்து நான் ஏதாவது செய்ய வேண்டும் என  தீர்மானித்தேன். அடிப்படையில் நான் ஒரு கலைஞி  என்பதால்,  எதிர்ப்பினை  உணர்வுப் பூர்வமாகக்   காட்ட   நானே,   ஊடகமானேன். என்  மேல்  கண்  மையைத்  தீட்டிக்  கொண்டேன். இப்படி  செய்வதால்  யாருக்கும்  எந்த  இடையூறும் இல்லை. சட்டம்  ஒழுங்கு  குலையும்  அபாயமில்லை.  இந்த  ஒப்பனையில், இயல்பான  புன்னகை கூட  என்னிடமிருந்து விலகிக்  கொள்ளும். 

முகத்தில் கரி பூசுதல்.... கறுப்பு மையை முகத்துக்கு நேரே வீசுதல் என்பது குறிப்பிட்ட ஒருவரை  அவமானப்படுத்துவதற்காக  செய்யப்படும் செயல்கள். எதிர்ப்பினைக்  காட்ட  கருப்புக் கொடி காட்டுகிறார்கள். ரோஹித் தற்கொலை செய்து கொண்டதும், டில்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அது  எதிரொலித்தது. நலிந்த  வர்க்கக்  குழந்தைகளை  உயிருடன்  எரிப்பது,  அடித்துத் துன்புறுத்துவது,  கெüரவக்  கொலைகள் இவையெல்லாம்  குறிப்பிட்ட  மக்களுக்கு எதிரான செயல்கள். இன்றைய  காலகட்டத்தில்,  சமூக வன்முறை வலுப்பட்டிருக்கிறது.  செல்வாக்கு  உள்ளவர்கள்  மட்டுமே இங்கே வாழத் தகுதி உள்ளவர்கள்  என்ற  நிலைப்பாடு ஓங்கி  ஒலிக்கிறது. சாதாரணர்கள்   அடங்கி ஒடுங்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  ஜாதி சமய பொருளாதார பேதம் இல்லை என்று சொல்லும் அரசியல் சாசனம் உள்ள இந்த நாட்டில், வேறுபாடுகள்  வேர்  விட்டு  வளரவும்  ஆரம்பித்து  விட்டது. இந்த அபாயகரமான  மனப்போக்கை எதிர்ப்பதற்காகவும்,  இப்படி    சமூக நீதிக்கு  எதிரான    சூழ்நிலை உருவாக்கி விட்டதே  என்ற   சோகத்தை,  துக்கத்தைப் பிரதி பலிக்கவும்தான்     எனக்கு நானே  கருப்பு  நிறம்  தேய்த்துக் கொள்கிறேன். பல்வேறு  சமூகக்  கோளாறுகளால்  களங்கப்பட்டு  நிற்கும்  இந்தியாவின்  நிலைமையையும் நான் சிம்பாலிக்காக  உணர்த்துகிறேன். இந்த  நிறப்பரிசோதனை,  125  நாட்கள்  நீடிக்கும்.

கருப்பாக  இருப்பவர்கள், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்ற கண்ணோட்டம்  இருக்கிறது. தோலின்  நிறத்தை   ஜாதியின்  அடையாளமாக்குவதும்   அராஜகம்தான்.  கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு பாட நல்லாத்தான் இருக்கு. ஆனா நிஜ வாழ்க்கையில்  கருப்பு யாருக்கும் பிடிக்கிறதில்லை. அதுதான் உண்மை.

கரிய நிறத்தில் கொச்சி நகரை  வலம் வந்த, எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை  நூலாக வெளியிட உள்ளேன். இந்த  கருப்பு  ஒப்பனை  நிறைவு நாளன்று, நடன  நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு  செய்திருக்கிறோம். நடனக் கலைஞர்கள்  சம்பிரதாய ஒப்பனை செய்வதிலிருந்து விலகி, என்னைப் போல்  கருப்பு  வர்ணம் பூசிக் கொண்டு நடனம் ஆடுவார்கள்.  எனது இந்த மெüன  எதிர்ப்பால், மக்கள்  மனங்களில்  மாற்றம்   உடனே வரும்  என்று  நான்   நம்பவில்லை.   ஆனால்  ஒரு  சிந்தனையை  சில  மனங்களிலாவது விதைக்குமே!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com