மகளிரின் மகாசக்தி!

அரசியல் என்பது ஆண்களுக்கானது. அதில் பெண்கள் ஈடுபடுவதும், வெற்றி பெற்று ஆணாதிக்கத்தை முறியடிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. இக் கருத்து வலுப்பெற்றிருந்த நிலையில்
மகளிரின் மகாசக்தி!

அரசியல் என்பது ஆண்களுக்கானது. அதில் பெண்கள் ஈடுபடுவதும், வெற்றி பெற்று ஆணாதிக்கத்தை முறியடிப்பதும் அவ்வளவு சுலபமல்ல. இக் கருத்து வலுப்பெற்றிருந்த நிலையில் அரசியலில் ஆணாதிக்கத்தை ஒழித்து சாதனை படைக்க  ஜெயலலிதாவால்  முடியும் என்று உறுதியாக நம்பிய எம்.ஜி.ஆர், அவரை 1982-ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் அறிமுகம் செய்தார்.

அவரின் கன்னிப்பேச்சு மக்களைக் கவரும் வகையில் அமைந்தது. அதனைத் தொடர்ந்து அதிமுகவில்  பொறுப்புக்களை ஏற்றார்.  1984-இல் மாநிலங்களவை உறுப்பினரானார். எம்ஜிஆருக்குப்பின் கட்சி பிளவுபட்டு, 1989-இல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். பின், ஒருங்கிணைந்த அதிமுகவின் வெற்றிச்சின்னம் இரட்டைஇலையைப் போராடிப் பெற்றார். தொடர்ந்து, 1991, 2001, 2011 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார்.

தற்போது, 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 134 இடங்களில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனையாக 6ஆவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எப்போதும் பெண்கள் ஆதரவு உண்டு என்று சொல்வார்கள். அது உண்மைதான். அதே பெண்களுக்கு தன்னாலான அனைத்தையும் அவர் செய்ய உறுதி பூண்டுள்ளார் என்பதும் அவரது முந்தைய ஆட்சிகளின் மூலம் தெரியவருகிறது.

கிராமப்புற பெண்களுக்கு அவர் செய்த மகத்தான பணி ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைப்பது. ஒருமுறை அவரிடம் கிராமப்பெண்கள், ""அம்மா, நாங்கள் ஒருமுறை இயற்கைக்கடன் கழிப்பதற்கு ஐந்துமுறை எழ வேண்டியிருக்கிறது. எங்கள் பிரச்னைக்குத் தீர்வு காணுங்கள்'' என்று கேட்டனராம். ஆமாம்; கிராமப்புறங்களில் பெண்கள் படும் இன்னல் என்பது சொல்லி மாளாது. இந்தத் துயரைப் போக்க, தான் முதலமைச்சராக வந்ததும் ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் வசிக்கிற இடங்களில் "ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள்' மூலம், இயற்கைக்கடன் கழித்தல், குளியலறை, துணி துவைக்கும் அறை போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தார். இத்திட்டம் இன்றும் தொடர்கிறது.

அடுத்து, கிராமப்புறப் பெண்கள் படிப்பு தடைபடுவது ஏன் என்று கண்டறிந்து, அவர்கள் குறிப்பிட்ட வகுப்பு வரைப் படித்து இடை நிற்றல் என்பது வழக்கமாக இருந்தது. தொலை தூரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல முடிவதில்லை. அதனைப் போக்க உருவானதுதான் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கிய "இலவச சைக்கிள் திட்டம்' (2001-06). இத்திட்டம், மாணவர்களுக்கும் விரிவு செய்யப்பட்ட போதிலும், மாணவிகளின் கல்வி பாதியிலேயே நிற்பது குறைந்திருக்கிறது என்பது மகத்தான உண்மை.

அடுத்து, காவல் நிலையங்களில் பெண்கள் மோசமாக நடத்தப் படுகிறார்கள் என்றும் அவர்களது குறைகளை ஆண் போலீசார் முன்பு எடுத்துவைக்க முடிவதில்லை என்றும் அறிந்து அவர்களுக்காக உருவானதுதான் "அனைத்து மகளிர் காவல் நிலையம்' (1991-96). இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்மையானதாகும்.

 பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட கல்வி மட்டும் போதாது,  அவர்கள் சுயமாகத் தொழில் புரிந்து பணம் ஈட்டவேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் "மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்' (1991-96). மகளிருக்கு தொழில் புரியும் வாய்ப்பு, பயிற்சி மற்றும் நிதி உதவி அளித்து அவர்கள் தொழில் தொடங்கவும் வைத்து, அவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தினார். இன்று மகளிர் சுய உதவிக்குழுவினர் மகத்தான சாதனை படைத்து வருகின்றனர்.

கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் ஜெயலலிதா விரும்பியதன் விளைவாக உருவானதே "தொட்டில் குழந்தைகள் திட்டம்' (1991-96). பெண் குழந்தை பிறந்தால் வளர்க்க விரும்பாத சூழலில், இத்திட்டத்தின்படி குழந்தைகள் நலக் காப்பகம் மூலம் பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். இக்குழந்தைகளுக்கு பெற்றோர் பெயர் என்பது முதலமைச்சர் பெயரே அமையும் என்றும் அறிவித்து மாபெரும் புரட்சி செய்தார். இத்திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் வாழ வைக்கப் பட்டுள்ளனர். அந்தப் பெண் குழந்தைகளில் பலர் பட்டதாரிகளாக உயர்ந்தனர். அரசுப்பணிகளிலும் சேர்க்கப்பட்டு  உள்ளனர். அவர்களுக்கு நல்வாழ்க்கையை இதன் மூலம் அமைத்துக் கொடுத்தார்.

பெண்கள் தங்களது இல்லத்தில் அனைத்து வசதிகளுடன் வாழவேண்டும், அவர்கள் மிளகாய் அரைக்கவும், மாவு அரைக்கவும் படும் கஷ்டத்திலிருந்து மீட்க எண்ணிய முதலமைச்சர் ஜெயலலிதா 2011-16 ஆட்சிக்காலத்தில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கி மகிழ்ந்தார். குளிர் பிரதேசமான நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விசிறிகளுக்குப் பதிலாக காந்த அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண்களின் திருமணத்திற்காக ப்ளஸ்-டூ வரை படித்த பெண்களுக்கு ரூ.25ஆயிரமும் 4 கிராம் தங்கமும், பட்டம், டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரமும் 4 கிராம் தங்கமும் அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.

இத்திட்டத்தில் தற்போது 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதேபோன்று ஏழைப் பெண்களின் வளைகாப்புக்கு என்று ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்பெயர் "ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்'.

ஒன்றியங்கள்தோறும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, வளைகாப்பு செலவை அரசு ஏற்கிறது. அதன்படி, ஒரு குடும்பத்திலிருந்து 50பேர் வரை வளைகாப்பு விழாவில் பங்கு பெற அனுமதி உண்டு. இதுதவிர கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கப்படுகிறது மற்றும் பேறு காலத்திற்கு முன்னும் பின்னுமாகச் சேர்த்து   ரூ.6ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் அறிவித்தார். இந்தத் தொகை தற்போது ரூ.12ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, கிராமப்புற மகளிர் மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமாக இருக்க விலையில்லா நாப்கின்கள் வழங்கவும், அந்த சமயத்தில் ஆரோக்கியத்துக்காக சத்து மாத்திரைகள் வழங்கவும் உத்தரவிட்டார்.

பெண்கல்வி உயர, சிறப்பு ஊக்கத்தொகை, விலையில்லா காலணிகள், சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகள் என்று யோசித்து, யோசித்து மகளிருக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

இதுபோன்ற திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக பெண்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மகாசக்தியாகப் பார்க்கிறார்கள், நேசிக்கிறார்கள். அவரின் வெற்றியைத் தங்களின் வெற்றியாகவே கருதுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com