சொந்த ஊரு காரைக்குடி பக்கத்தில் தேவகோட்டை. திருமணத்திற்கு பின்பு சென்னை வாழ்விடமாக மாறிப்போனது. சென்னையைப் பொருத்தவரை ஒருவருடைய வருமானத்தில் குடும்பம் நடத்துவது என்பது அரிதாகிப் போனதால், ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தேன். அதேசமயம், எனக்கு கிராப்ட் ஒர்க் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம் என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிராப்ட் வேலைகளும் கற்று வந்தேன். ஆனால், நான் விளையாட்டாக கற்றுக் கொண்ட கைத்தொழிலே தற்போது என்னை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது'' என்கிறார் கைவினைக் கலைஞரான மீனாட்சி. சென்னை, கே.கே.நகரில் வசித்து வரும் அவரை சந்தித்தோம்:
"தற்போது என் மகளுக்கு பத்து வயதாகிறது. அவள் என் அருகாமையை மிகவும் விரும்புவதால் வேலையை விடவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. திடீரென்று ஒரு வருமானம் நின்று போனதால், தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமமாக இருந்தது. அப்போதுதான் என் கணவர் சொன்னார். ""இன்று நினறய பெண்கள் வீட்டிலிருந்தபடியே ஏதாவது சிறு தொழில் செய்து வருமானத்தை ஈட்டிக் கொள்கிறார்கள். நீயும் நிறைய கைவேலைகளை எல்லாம் கற்று வைத்திருக்கிறாய். அதில் ஏதாவது முயற்சி செய்து பாரேன்'' என்றார்.
அவர் கொடுத்த ஊக்கத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளவர், தோழிகள், உறவினர்கள் என உல்லன் நூலினால் வாசல் தோரணம் போட்டு கொடுக்க ஆரம்பித்தேன். பின்னர், க்ரோஸô, உல்லன் நூலை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று தோன்றியது. நிறைய யோசித்ததில், தற்போது கல்லூரி பெண்கள் பலரும் சுடிதார் அல்லது டாப்ஸ் மீது கோட் ஒன்றை விரும்பி அணிந்து கொள்கிறார்கள். அது போன்ற கோட்டை குழந்தைகளுக்கு ஏற்றவாறு க்ரோசாவினால் போட்டு பார்த்தேன். வித்தியாசமான புது டிசைன்களில் இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அந்த உத்வேகத்தில், அதனுடன் சேர்த்து வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
பல தேடல்களுக்கு பின் பெங்களூரில் இருந்த என் சித்தி சொன்னாங்க, அவர்கள் வீட்டின் அருகில் இருந்த ஒரு பெண்மணி நிறைய கைவேலைகள் கற்றுத் தருவதாகவும். அவரிடம் கற்றுக் கொண்டவர்கள் நல்ல தொழில் முனைவோராக மாறி வருவதையும் சொன்னார். அவரிடம் வந்து ஏதாவது கை வேலை கற்றுக் கொள்ளும்படி கூறினார். இதனால் பெங்களூர் சென்று பதினைந்து நாள் தங்கியிருந்து அவரிடம் பட்டு சேலை, காட்டன் சேலைகளில் க்ரோஷா ஊசிக் கொண்டு பட்டு நூலினால் குஞ்சலம் போடுவதைக் கற்றுக் கொண்டேன்.
சென்னை, திரும்பியதும். என் தோழிகள் சிலரின் பட்டு சேலை, காட்டன் சேலைகளை வாங்கி அதில் பட்டு நூலினால் புதுப்புது டிசைன்களில் குஞ்சலம் போட்டு கொடுத்தேன். நானே எதிர்பார்க்காத அளவு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் ஆசிரியைகளும், கல்லூரி பெண்களும் இந்த குஞ்சலம் சேலையை அதிகம் விரும்புகிறார்கள். சாதாரணமாக ஒரு சேலைக்கு குஞ்சலம் போட அரை நாள் ஆகும். அதில் தங்க நிற மணிகள் சேர்த்து ஹெவியான டிசைன்கள் செய்தால் ஒரு நாள் அல்லது 2 நாள் வரையிலும் கூட ஆகும். இதில், 150 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை டிசைன்கள் இருக்கிறது.
தற்போது,பட்டு நூல், உல்லன் நூல், க்ரோஸô போன்றவற்றல் குஞ்சலத்தில் மட்டும் 30 வகையான டிசைன்கள் போட்டு தருகிறேன். இதைத் தவிர, தற்போது உல்லனினால் வாசல் தோரணம் பின்னுவது, க்ரோஸôவினால் கோட் பின்னுவது, குளியல் சோப்பில் கைவேலைகள் செய்து அழகான பொம்மை, பூக்கள் போன்றவற்றை செய்வது, பழைய காட்டன் சேலையில் மிதியடி செய்வது போன்றவற்றையும் கற்று தருகிறேன்'' என்றார்.
- ஸ்ரீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.