

அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாய் அனைத்து நிலைகளிலும் பெண்ணின் ஆளுமை தெரிகிறது. ஆண்களுக்கு நிகராக பணிபுரிவது மட்டுமன்றி மேல்நிலை, கீழ்நிலை பதவியிடங்களையும் பெண்கள் அலங்கரிக்கும் அமைப்பும் தொடர்கிறது. அதிகார பதவிகளில் பெண்கள் இருக்கையில் அவர்களின் கீழ் பணிபுரியும் உடன்பணி ஆண்கள் விதிமுறைகள் அனுசரித்து விசுவாசமாயும் இருந்துவிட்டால் அது கிடைத்தற்கு அரிய வரம் பெற்ற நிலைதான். அப்படி வரங்களை நான் அடிக்கடி பெற்றிருக்கிறேன்.
கூடவே வரவேண்டிய உதவியாளரும், ஆய்விடங்களுக்கு கூட்டிச் செல்லும் வாகன ஓட்டுநரும் பண்புடன் வாய்த்துவிட்டால் பணியது சிறக்கும். கோட்டாட்சியராகப் பணி செய்து ஜொலித்தார். வீர தீர செயல்களை விருப்பமுடன் செய்தார், ஆகி வந்த பணிகள் யாவிலும் வேகம் காட்டி மிளிர்ந்தார் என களப்பணிகள் குறித்து யார் சொல்லிக் கேட்பினும், எனக்கு வாய்த்த பணியாளரது முகங்கள் வந்து நிழலாடும்.
இவள் ஒரு பெண்தானே இவளுக்கென்ன பணிவிடை செய்வது ஆண்மகன் தான் என்ற அடிப்படை கெüரவம் என்னாவது என்ற அர்த்தமற்ற எண்ணங்களை இவர்கள் வெளிப்படுத்தியதே இல்லை. தகப்பனில் கொஞ்சம், சகோதரனில் கொஞ்சம், நண்பனில் கொஞ்சம் என பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து ஆக்கம் செய்து வந்த சாக்கியங்கள் இவர்கள். செய்யும் அரசு பணியில் செய்முறை விதிகள் இருந்தும், விதிகளுக்குள் அடங்காத விசுவாசம் இவர்களுடையது. எத்தனை பெருமைகள் எமைத்தேடி வரினும் இவர்களின் பங்கு அதில் கணிசமாய் உண்டு.
பத்மனாபபுர கோட்டாட்சியராகப் பணியேற்றபோது அலுவலக உதவியாளர் என ஒருவர் வந்து நின்றார். முறுக்கு மீசை, முரட்டு உருவம் கொண்டிருந்து ஓய்வு பெற்றதொரு ராணுவ வீரர் என்றார். செல்லப்பன் என்ற திருநாமம் கொண்டு சிரிக்கும்போது மட்டும் குழந்தையாய்த் தெரிந்தார். சம்பந்தப்பட்டோரது பெயர் சொல்லும் வழக்கமில்லை, ஆனால் பெயர் மறைப்பின் அதிலே நியாயமே இல்லை.
கடத்தல் தடுப்பு வேட்டைகள், ஆய்வுகள் அனைத்திலும் களத்தில் உடனிருந்து கவனித்துக் கொள்வார். எனைச்சுற்றி எப்போதும் கற்பனை வளையம் ஒன்றை தானே இட்டுக்கொண்டு காவல் இருப்பார். கடற்கரை கிராமத்தில் ஒருமுறை சட்டம்-ஒழுங்கு பணி. குளச்சல் கடற்கரையில் காவல் காட்சிப் பேரணி. ஆர்.டி.ஓ-வாக நான் பரிவாரங்களுடன் சென்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அங்கு வந்திருந்தார். பேரணியில் நடந்து கொண்டே விவாதமும் நடந்தது. வளைய கண்காணிப்பில் தொடர் கவனம் வைத்து உடன் வந்து கொண்டிருந்தார் உதவியாளர் செல்லப்பன். திடீரென்று யாரோ தனது கையை இழுத்து விட்டதில் உடன் வந்த எஸ்.பி. கொஞ்சம் அதிர்ந்து நின்றுவிட்டார். யாரென்று பார்த்தால், அது நமது செல்லப்பன்தான். விவாத ஈடுபாட்டில் விளைந்த கவனத்தில், செல்லப்ப வளையத்தை நான் தாண்டியிருந்தேன். எஸ்.பி-யின் அருகில் சென்று ஏதோ சொல்லும்போது, உதவியாளர் செல்லப்பன் அவரை நகர்த்தி விட்டுவிட்டார். அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது, செல்லப்பன் யார் முகத்தையும் பார்ப்பதில்லையென்று. அவர் கவனமெல்லாம் எனக்கான பாதுகாப்பில் மட்டும்தான். புரிந்துகொண்ட எஸ்.பி-யும் சிரித்துக் கொண்டுவிட்டார். நல்ல கார்டு (Guard) தான் என பாராட்டிச் சென்றார். இது எஸ்.பி-யின் பெருந்தன்மை குணத்தைக் காட்டியது... கூடவே செல்லப்பனின் சகோதரத்தையும்...
மணல் கடத்தல் தடுப்பிலும், கள்ளச்சாராய வேட்டையிலும் என்னோடு செல்லப்பன் இருக்கிறார் என்ற உணர்வில், தனை மறந்து களம் பாய்ந்த நிகழ்வுகள் நூறு. கையிலே அரிவாள் இல்லாத ஐயனாராய் உடனிருந்து விழிப்புடன் எனைக்காத்து நிற்பார்.
எனது வாகன ஓட்டுநரும் சளைத்தவரில்லை. பத்மகுமார் என்று பெயர் கொண்டிருந்து, அர்ஜுனனுக்கு கண்ணனாய் அழைத்துச் செல்வார். கோட்டத்தின் சாலைகளின் குண்டு குழி, யாவுமே அவருக்கு அத்துபடி. மலைப்பாங்கு பிரதேசத்தில் அன்றாட பயணம் ஒரு நாளும் அயர்த்தாத வகையில் கவனம். அவர் ஓட்டி வரும் எனது அலுவலக வாகனம் கண்டு அலறியடித்து ஓடுவர் கடத்தல்காரர்கள். கடத்தல் வாகனங்களை துரத்திப் பிடிக்க பத்மகுமாரால் மட்டும்தான் இயலும் என்போம். இவ்விருவரும் இன்று இவ்வுலகில் இல்லை. ஆனால், நெஞ்சார்ந்த நன்றியோடு என்றும் என் நினைவில்.
பெண் அதிகாரிகளது உடன் பணியாளர்கள், சகோதர நிலையையும் தாண்டி உயர்ந்து, தெய்வநிலை எட்டும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு. இச்சம்பவம் என்னிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒன்று. வாகனத்தில் பயணித்து ஓரிடம் வந்தபோது பெண் அதிகாரி ஒருவர் சங்கடம் உணர்ந்திருக்கிறார். மாதாந்திர உடல்நல மாற்ற விளைவால் வாகனமிருந்து இறங்குகையில் நெருக்கடி கண்டார். காலுக்கு அடியில் வைக்கப்பட்ட மிதியடியில் உடல்நல மாற்றத்தால் வெளிப்பட்ட பதிவுகள். செய்வது அறியாது நின்றுவிட்ட அவரிடம், சலனமேயின்றி அவர் ஓட்டுநர் சொன்னாராம், நீங்கள் சென்று உங்கள் பணியைப் பாருங்கள் நான் இது குறித்து கவனித்துக் கொள்கிறேன். ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அலுவலகப் பணி முடித்துவிட்டு, மீண்டும் தனது வாகனத்திற்கு திரும்பி வந்தபோது நெருக்கடியின் சுவடே இல்லாது இருந்ததாம். அடுத்தவர் அறியாமல், ஆரவாரம் இல்லாமல் எடுத்து முடித்திருந்தார் அந்த தாயுமான சாரதி. இது குறித்து அதிகாரி என்னிடம் சொன்னபோது, ஒரு நொடி வாழ்த்தி மகிழ்ந்தது மனது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து பணி செய்கையில் பெண்ணின் நெருக்கடியைப் புரிந்துகொள்ளும் ஓர் ஆண், தம்பட்டம் அடிக்காது, தயவும் காட்டுவது, அவனை தந்தையின் ஸ்தானத்திற்கும் மேலே உயர்த்தும். கடவுளின் நிலைக்கு அருகில் கொண்டு வைக்கும். அதிகாரிக்கு விழ இருந்த எதிர்பாரா அடியை தான் வாங்கிக் கொண்ட உதவியாளரும் இருந்தார்.
தஞ்சாவூரில், ஒரு பொது நீச்சல் குளத்தில், குழந்தைகளோடு சென்றிருந்தபோது, அபசகுன பேச்சு விடுத்து அதிகாரம் செய்த, குறுகிய மனது பெண்ணிடம் குறுக்கிட நேர்ந்த நிலையில், அம்முதிர்ச்சியிலா பெண் அடிக்கப் பாய்ந்தபோது, அதை தான் வாங்கிக் கொண்டார் என் உதவியாளர் தங்கவேல். அவரும் அவருடன் பாஷா என்றொருவரும் கூடவே இருந்து எம் நலம் காத்து வந்தார்கள். மாவட்ட ஆட்சியராய் பணி செய்தபோது, கூட்டிக்கொண்டு வரப்பட்டதொரு முரட்டுக் கூட்டம், வேண்டுமென்றே திட்டமிட்டு வெளிப்படுத்திய வன்முறையை கடமையோடு எதிர்கொண்டார் வெங்கட்ராமன் எனும் டபேதார்.
நான்கு வருடத்திற்கும் மேலாக சேவைப்பணி செய்து வந்த, நரேஷ் என்றதொரு நல் உதவியாளர்தான், இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் என்ற உணர்வோடு இதை எழுத வைக்கிறார். கண்ணை இமை இரண்டும் காப்பதுபோல் எம் குடும்பம், வண்ணமுற காத்து எனும் பாரதியின் வரிகளுக்கு வாழும் இலக்கணமாம் இவர் யாம் பெற்ற வரம். தகப்பன், சகோதரன், நண்பனோடு கூட மகன் என்பதிலும் கொஞ்சம் எடுத்து செய்த தவம்.
அதிகார வர்க்க மகளிர்க்கு இங்கு அன்பானதொரு செய்தியும் உண்டு. பணியின் காரணமாய் இவர்கள் சேவைகள் செய்கையில், தனி மனித மரியாதை இவர்களின் தேவையாய் இருக்கிறது. பெண்மையின் குறியீடுகளை ஆண்கள் சுமக்க வைப்பது அவர்கள் மீது திணிக்கும் அசெüகரியமாகும். எனவே, பெண்களுக்கு மட்டுமான டம்பப் பைகளை, பயன்படுத்தும் பழக்கத்தை நான் கொண்டிருக்கவில்லை. பணியின் ஈடுபாட்டில் உடைமைப் பொருட்களை மறக்கும் பழக்கம் என்னிடம் உள்ளது. அவைகளை எடுத்துவர நேரும் ஆண் உதவியாளர்களின் மனநிலை அறிந்து சங்கடம் தவிர்க்கிறேன்.
ஒருமையில் அவர்களை அழைப்பதைத் தவிர்ப்பதும், பெயர் சொல்லி அழைத்தாலும் பன்மையில் விளிப்பதும் தனிமனித மரியாதைக்கு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். தவறிழைக்கும் நேர்வுகளில் தண்டிக்கவும் வேண்டும். அதற்கென்று விதிமுறைகள் தனியே இருப்பதால் அதை விடுத்து மரியாதை குறைப்பது பாவம்.
தான் அணியும் செருப்புகளை எடுத்து வரச்செய்வதிலும் சாப்பிட்ட பின்பு பாத்திரங்கள் கழுவுவதிலும், வீடுகளில் ஆடைகளை துவைக்க வைப்பதிலும் எக்காரணம் கொண்டும் இவர்களை ஈடுபடுத்தல் தவிர்க்கலாம். இச்சேவகர்கள் யாவரும் அவரவர் வீடுகளில், தம் குடும்பத்தார் அனைவருக்கும் முதன்மை நாயகர்கள். சுய கெüரவம் குறைக்கும் பணிகளை விலக்கினால் மரியாதையோடு விசுவாசத்தையும் வெல்லலாம். இதிலே பலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், இதுவே எம் கருத்து என்பதாய்க் கொள்க.
சந்தர்ப்பவசத்தால் சார்பு பணிக்கு வருபவர்கள் தம் சுயமரியாதை மறைத்து திரையிட்டுக் கொள்கிறார்கள். வேலையின் நிமித்தம் வெளிக்காட்டாவிடினும், அதை முற்றிலும் துறந்ததாய் அர்த்தங்கொள்ளலாகாது. பணிகளின்போது நம் நலம் காத்துக்கொள்வதால், இவர்கள் சகோதர நடத்துதலுக்கு உரிமையானவர்கள்.
அதிகார பதவிகளை அனுபவிக்கும் பெண்கள் தனிமனித மரியாதை உள்வாங்கி தெளிவோம். உடன்பிறப்பு சகோதரனிடம் சொல்லத் தயங்கும் பணிகளை, நம் உடன்பணி சகோதரர்களிடமிருந்தும் விலக்கியே வைப்போம். அதனால் விளைந்திடும் விசுவாசப் பெருக்கில் இங்கிவரை யாம் பெற்ற தவம் கண்டு சிறப்போம்.
படம்: ப.ராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.