சமையல்... சமையல்... சமையல்...

பிடி கருணைக் கிழங்கை  மண் இல்லாமல் அலசி குக்கரில்  வைத்து 3 விசில் விட்டு வேக வைத்துக்
சமையல்... சமையல்... சமையல்...
Updated on
3 min read

பிடி கருணை வறுவல்
தேவையானவை:
பிடி கருணைக் கிழங்கு - அரை கிலோ.
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -  1 தேக்கரண்டி
புளி கரைசல்  -   1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:  பிடி கருணைக் கிழங்கை  மண் இல்லாமல் அலசி குக்கரில்  வைத்து 3 விசில் விட்டு வேக வைத்துக்  கொள்ளவும். பின்னர், நீரை வடித்துவிட்டு கிழங்கின் தோலை நீக்கிவிட்டு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.  அத்துடன் மிளகாய்த்தூள், பெருஞ்சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு, புளி கரைசல் சேர்த்து புரட்டி 5 நிமிடம் வைத்து விட வேண்டும் பின்னர், தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு கிழங்கைத் துண்டு துண்டாக எடுத்து வைத்து  வறுத்து எடுக்கவும்.
பாகற்காய் ரோஸ்ட்
தேவையானவை:
பாகற்காய் - கால்கிலோ,
புளி கரைசல் -   2 தேக்கரண்டி
கடலைமாவு -  2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 கிராம். 
செய்முறை: பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கி கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வைத்துப் பாதி வெந்ததும் இறக்கி வடிக்கட்டவும். பிறகு  வேக வைத்த காயில் உப்பு, மிளகாய்த் தூள், கடலை மாவு கலந்து புளி கரைசல் கலந்து நன்கு பிசறிக் கொள்ளவும். பின்னர், தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு வறுத்தெடுக்கவும். பாகற்காய் ரோஸ்ட் ரெடி.    
காளான் திரட்டல்
தேவையானவை:
காளான் -  100 கிராம்
நிலக்கடலை - 50 கிராம்
எள் - 1 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
மிளகு - சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:  நிலக்கடலை, எள் இரண்டையும் கொரகொரப்பாக பொடித்து தனியாக வைக்கவும். பின்னர், காளானை வேக வைத்து, நீர் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு காளனை சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடித்த மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர்,  பொடித்த மிளகு- சீரகத் தூளை சேர்த்து  நன்கு வதக்கவும்.  பின்னர் பொடித்த நிலக்கடலைத் தூளை சேர்த்து புரட்டி இறக்கவும். காளான் திரட்டல் ரெடி.
புடலங்காய் தயிர் கூட்டு
தேவையானவை:
பிஞ்சு புடலங்காய் - 200 கிராம்
கெட்டித் தயிர் - 200 மி.லி.
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: புடலங்காயை மேல் தோல் சீவி, விதையை நீக்கிவிட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்துக்  கொர கொரப்பாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும். 
 பின்னர், நறுக்கி வைத்துள்ள புடலங்காயை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும். காய் முக்கால் பதம் வெந்ததும்,  அரைத்து வைத்துள்ள மசாலா கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். தண்ணீர் சுண்டி கெட்டியாகும் சமயத்தில், புளிப்பில்லாத கெட்டித் தயிரை சேர்த்து கிளறி இறக்கிவிடவும். புடலங்காய் மோர் கூட்டு தயார்.
குடமிளகாய் பொரியல்
தேவையானவை:
குடமிளகாய் - கால் கிலோ
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
கேரட் துருவல் - 1 கிண்ணம்
செய்முறை: குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில்  எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பை  தாளிக்கவும். நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து கிளறி  5 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர், தேங்காய்த் துருவல், கேரட் துருவல் சேர்த்து கிளறி இறக்கி விடவும். குடைமிளகாய் பொரியல் ரெடி.
முளைக்கீரை  பால் மசியல்
 தேவையானவை:
முளைக் கீரை - 1 கட்டு
எண்ணெய் - 100  கிராம்
மிளகாய் வற்றல் - 5
சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சாதாரண பால் -  1 தேக்கரண்டி
செய்முறை: கீரையை  ஆய்ந்து அலசி சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி வைத்துக்  கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர்விட்டு , கீரை மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் தாளித்து மசித்து வைத்துள்ள கீரையில் கொட்டி. அத்துடன் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து கடைந்து கொள்ளவும். முளைக்கீரை பால் மசியல் தயார்.
வெஜிடபிள் ஊறுகாய்
தேவையானவை:
கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய்,
கீரைத்தண்டு, கேரட் - தலா 100 கிராம்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
வெறும் மிளகாய்த் தூள் - 25 கிராம்
கடுகு, வெந்தயம் - தலா 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் -  கால் கிலோ
 செய்முறை: எல்லாக் காய்களையும் பொடியாக நறுக்கி குக்கரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேகவைத்து  நீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடுகு, வெந்தயம் இரண்டையும் லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  பொடித்த கடுகுத் தூள், பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள்  மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறி உடனே வேக வைத்த காயைக் கொட்டி கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால்  கூடுதலாக கொஞ்சம் உப்பை சேர்த்துக் கொள்ளலாம்)  ஒரு வாரம் வரை இந்த ஊறுகாயைப் பயன்படுத்தலாம்.
கீரைத் தண்ணீர்ச் சாறு
தேவையானவை:
அகத்தி, மணத்தக்காளி 
ஏதாவது ஒன்றில்  - 1 கட்டு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
வடகம் - 1 தேக்கரண்டி
புளி -  1 கொட்டை பாக்கு அளவிற்கு
தேங்காய்ப் பால் - 1  குழிக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
செய்முறை:   கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி  உப்பு, புளி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு வடகம் தாளிக்கவும், பின்  கிள்ளிய மிளகாய் வற்றல், பூண்டு தட்டிப்போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி  சேர்த்து வதக்கி வேக வைத்த கீரையோடு சேர்த்து கிளறவும். ஒரு கொதி வந்ததும், மிளகுத் தூள், தேங்காய்ப் பால் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். கீரைத் தண்ணீர்ச் சாறு தயார்.
 - இரா.கமலம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com