எதிர்பார்ப்புகள்தான் உறவுகளின் பெரிய சிக்கல்! மனம்திறந்து பேசுகிறார் இயக்குநர் லிங்கன் ராஜாளி

எதிர்பார்ப்புகள்தான் உறவுகளின் பெரிய சிக்கல்! மனம்திறந்து பேசுகிறார் இயக்குநர் லிங்கன் ராஜாளி
Updated on
2 min read

கூடுவதும் பிரிவதும்தான் வாழ்க்கை. பிறப்பு, இறப்பு போன்று இரண்டும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். எதற்குக் கூடினோம், எப்படி பிரிந்தோம் என்பது இதில் முக்கியமானது. மனிதனின் வாழ்க்கையில் தொடக்கமும், முடிவும் தனிமைதான். வேலை, பணம், மண், பொருள் என தேடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், எல்லாரும் கடைசியில் ஏங்கி நிற்பது அன்பு என்ற ஒற்றை வார்த்தைக்குத்தான். "சாப்பிட்டியா? வெயில்ல அலையாதே? உடம்ப பார்த்துக்கோ...' என எங்கோ கிராமத்தில் இருந்து வந்து விழுகிற வார்த்தைகளுக்காக இன்னும் காத்திருப்பவர்கள் எத்தனை பேர். பரபரப்பும், விறுவிறுப்பும் கூடி விட்ட வாழ்க்கையில் நாமெல்லாம் இழந்து நிற்கிற சொந்தங்களும், பந்தங்களும் எத்தனை... வார்த்தைகளில் ஈர்க்கிறார் லிங்கன் ராஜாளி. தாய் - மகன் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் "லாலி லாலி ஆராரோ' படத்தின் இயக்குநர்.
* கசிந்துருகும் காதல் கூட காமெடியாகி விடுகிற காலம் இது... இந்தக் கால கட்டத்தில் தாய் - மகன் பாசத்தை முன் வைக்கும் கதையை சொல்லுவது சரியாக வருமா...?
செவ்வாய் கிரகத்துக்கா இடம் பெயர்ந்து விட்டோம். இரண்டு நாள் விடுமுறை கிடைத்தால், அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என கிராமம் தேடி ஓடுவதில்லையா? அம்மாவின் கையில் சாப்பிட்டு விட்டு புதுத் தேடலுடன் நகரம் நோக்கி ஓடி வரும் பிள்ளைகள் எத்தனை பேர். மண்ணும், மனிதர்களுமான வாழ்க்கையைத்தான் நம் மனசு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அம்மா - மகன் உறவில்தான் எத்தனை எதார்த்தம். எத்தனை அழகு. அம்மாதான் உலகம் என்று வாழும் ஒருவன். அதே போன்று தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்ற நினைப்பில் உள்ள ஒரு அம்மா. இவர்களின் அன்பு, நேசம், பாசத்துக்கு இடையில் ஊடுருவி வருகிறது ஒரு காதல். அதை அந்த தாய் எப்படி எதிர்கொள்கிறாள் என்பது ஒரு லைன். தன் மகள்தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு தகப்பன். தகப்பனை தவிர உலகத்தில் உயர்ந்தது இல்லை என்று வாழும் மகள். இவர்களுக்கு இடையே ஒரு காதல். இது இன்னொரு லைன். இந்த இரண்டு லைன்களுக்கு இடையேயான கோர்வைகள்தான் திரைக்கதை.
* கதையின் உள்ளடக்கமும் இதுதானா...?
வாழ்க்கையை இன்னும் அழகுப்படுத்தி வைத்திருக்கிற வித்தை காதலுக்கு மட்டுமே உரியது. ஆனால், அதே காதல் அருமையான உறவுகளை துண்டித்து விடுகிறது. எல்லாமும் நீதான்யா.... என நம்பி இருக்கிற உறவுகளுக்கு ஒரு காதல் வந்து ஏமாற்றம் தந்து விடுகிறது. "உனக்காக எதையும் விட்ருவம்மா...' என்ற மகன், "இப்போது வேலையா இருக்கேன்.. அப்புறம் பேசுறேன்...' என அம்மாவுக்கே நேரம் ஒதுக்கி கொடுக்கிற சூழலுக்கு உள்ளாகி விடுகிறான். எப்படியெல்லாமோ கல்யாணம் செய்து வைக்க காத்திருக்கிற பெற்றோர்களை, எனக்கு எப்போதோ கல்யாணம் முடிந்து விட்டது என கடந்து விடுகிறது இளந்
தலைமுறை. ஆராய்ந்து பார்த்தால், எதிர்பார்ப்புகள்தான் உறவுகளுக்குள் இருக்கிற முக்கிய பிரச்னை. எதிர்பார்ப்புகள் பொய்யாகும் போதுதான், இங்கே எல்லாவற்றிலும் சிக்கல். மனசுக்கு பிடித்தவர்களை காதலிக்க தெரிந்த நம்மால், நம் வீட்டு உறவுகளின் மனதிலும் இடம் பிடிக்க முடியாதா? என நடக்கிற போராட்டம்தான் கதை. பிரிகிற வலிக்கு பயந்தோ, பிரிந்தால் உலகம் என்ன சொல்லுமோ என்கிற இமேஜுக்கு பயந்தோ சேர்ந்து வாழ்வது போல அபத்தம் வேறு இல்லை என்பது இந்தக் கதையின் தாக்கமாக இருக்கும்.
* சரண்ராஜ் மகன் தேஜ், இந்தக் கதைக்குள் எப்படி வந்தார்...?
தேஜுக்கு இதுதான் அறிமுகம். சில வருடங்களாகவே நல்லதொரு அறிமுகத்துக்கு காத்திருந்தார். சினிமாவுக்காக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராகி வந்தார். எதேச்சையான ஒரு சந்திப்பின் போது, கதை சொல்லி நடிக்கிறீங்களா? என்று கேட்டேன். கொஞ்சம் அமைதியாக இருந்தவர், பின் சம்மதித்தார். நிச்சயம் அவருக்கு இது நல்ல அறிமுகம். எந்தவொரு சாயலும் இல்லாத முகம். கதையும் அப்படித்தான் இருக்கும் என்பதால், நிறைய மாயங்கள் நடந்துள்ளன. கொஞ்சமும் ஈகோ தலைக் காட்டாமல், அப்படியே தன்னைக் கொடுக்கிற இளைஞன் தேஜ். இந்த ஒரு படம், அவருக்கு நல்ல வெளிச்சம் கொடுக்கும்.
* அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார்... புதுசாக இருக்காங்களே...?
லட்சுமிப்ரியா மேனன். தமிழ் சினிமாவுக்கு புதுசு. மலையாள சினிமாவில் நன்கு பரிச்சயமானவர். தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே இரண்டு, மூன்று பேர்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு அலுத்து விட்டது. அதனால்தான் லட்சுமிபிரியா மேனனை அழைத்துவந்தேன். கதாநாயகி ஷிவானிக்கும் கேரளம்தான். இயல்பான அழகு, உறுத்தாத நடிப்பு என இந்தப் படத்துக்கு அவர் பெரிய பலம். இந்தப் படம் உண்மையிலேயே புத்தம் புது அனுபவமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com