பெண் கவிஞர்கள்!

பண்டைக்கால இந்தியாவில், தமிழகத்தில் சங்க காலத்தில்  பெண்கள்  சிலருக்கு வாய்ப்பு கிடைத்ததில் அவர்கள் சிறப்பாகத் தங்கள்
பெண் கவிஞர்கள்!
Updated on
1 min read

பண்டைக்கால இந்தியாவில், தமிழகத்தில் சங்க காலத்தில்  பெண்கள்  சிலருக்கு வாய்ப்பு கிடைத்ததில் அவர்கள் சிறப்பாகத் தங்கள் முத்திரையைப் பதித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளன. மக்கள் காதலையும் வீரத்தையும்  இரு கண்களாகப் போற்றி வளர்த்தனர். அகம் புறம் பாடி. பெண் புலவர்களில் ஒளவையார், நக்கண்ணையார், பூங்கண் உத்திரையார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், சிற்பித்தியார், பாரி மகளிர், நன்முல்லையார், வெண்ணி
குயத்தியார் போன்றோர் சிறந்த பெண்பாற் புலவர்கள் ஆவர்.
ஒளவையார் சங்கப் பெண்பாற் புலவர்களில் தலைமை பெற்றவர். மக்கள் கவிஞராக விளங்கினார். பல்வேறுபட்ட மக்களைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் இசைக்கருவிகள், உழவுக் கருவிகள் பற்றியும், இயற்கைக் காட்சிகள் பற்றியும் பாடல்களைப் பாடியுள்ளார்.    புறநானூறு, அகநானூறு, குறுந்தொகையில் இவரது பாடல்கள்  உள்ளன. ஒளவையார் புலமையின் சிறப்பால் அவர் நீண்ட காலம் வாழ்ந்தால் நாட்டுக்கு நலம் விளையும் என்று கருதியே அதியமான் நெடுமான் தனக்கு அரிதாகக் கிடைத்த நெல்லிக் கனியை அவருக்கு அளித்து மகிழ்ந்தான்.
போர்க்களத்தில் இறந்தவர்களுக்குப் பெண்கள் நடுகல் வழிபாடு செய்யும் பண்பாடு இருந்ததாக நன்முல்லையாரின் புறநானூற்றுப் பாடலிலிருந்து அறிந்து கொள்ளலாம். (புறம் - 306) தந்தையையும் கணவனையும் இழந்து போர்ப்பறை ஒலிக்கக் கேட்டுப் பெண்ணின் வீரத்தையும் துணிவையும் ஒக்கூர் மாசாத்தியார் புறநானூற்றில் பாடியுள்ளார்.
மார்பில்  விழுப்புண் பட்டு இறந்த தலைவனை நினைத்து வருந்திய தலைவியின் நிலை பற்றி நப்பசலையார் புறநானூற்றில் பாடியுள்ளார். (புறம் - 280). மகனை, உடல் வலிமையும் மனவலிமையும் உடையவனாகப் பாதுகாத்துச் சமுதாயத்திற்கு வழங்க வேண்டிய தாயின் கடமை பற்றி பொன்முடியார் புறநானூற்றில் பாடியுள்ளார். (புறம்- 312) காதலை மிகவும் சிறப்புடன் எவ்விதமான பூச்சுக்களும் இல்லாமலும் துன்ப உணர்வே மேலோங்கியும் உள்ள பாடல்களை வெள்ளி வீதியார் பாடியுள்ளார். வெண்ணிப் பறந்தலைப் போரில் சோழன் கரிகால் பெருவளத்தான் வென்றான். இதனால் புறப்புண் ஏற்பட்டதை எண்ணி நாணி, உணவு உண்ணாது வடக்கிலிருந்து உயிர் நீத்த நெடுஞ்சேரலாதனின் தன்மானமே வெண்ணிக் குயத்தியாரின் எண்ணத்தைக் கவர்ந்தது.
வீரத்தைவிடத் தன்மானமே சிறந்தது எனத் தன் பாடலில் காட்டிய வெண்ணி
குயத்தியாரின் (புறம் - 66) அஞ்சாமை பாராட்டிற்குரியது. தோழி கூற்றாக அள்ளூர் நன்முல்லையார் பாடிய பாடல்கள் சிறப்பிற்குரியன. வீர மரணம் அடைந்த மகனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த தாயின் நிலைப்பற்றி காக்கைப்பாடினியார் புறநானூற்றுப் பாடலில் பாடியுள்ளார். கற்பின் திண்மையையும் பெருமையையும் ஆதிமந்தியார் தமது அகப்பாடலில் பாடியுள்ளார்.
இவ்வாறாகப் பண்டைக்காலத்தில் பெண் புலவர்கள் தாங்கள் கூற விரும்பிய கருத்துக்களைச் சுதந்திரமாகவும், இலக்கிய நயத்துடனும் பாடல்களில் பாடி இலக்கியத் தொண்டாற்றியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com