டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்

டாக்டர், எனது மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கரு துடிப்பு இல்லாமல் இருப்பதாக மருத்துவர் கூறினார்.
டாக்டரைக் கேளுங்கள்: மகளிர் சிறப்பு மகப்பேறு மருத்துவர். டாக்டர் எழிலரசி பிரசன்னா பதிலளிக்கிறார்
Updated on
3 min read

டாக்டர், எனது மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கரு துடிப்பு இல்லாமல் இருப்பதாக மருத்துவர் கூறினார். இந்த கரு வளராது என்றும் இதைக் கலைத்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்போதெல்லாம் நிறைய பேருக்கு இதுபோல இருக்கிறதே ஏன்?
- மைதிலி, அரக்கோணம்.
நீங்கள் கூறுவது உண்மைதான். இதை MISSED ABORTION என்று கூறுவோம். கரு உருவாகும்போதே சரியான முறையில் உருவாகவில்லை என்றால் (மரபணு காரணங்கள்) இதயத்துடிப்பு உருவாகாமலே இருக்கலாம். சிலருக்கு, ஆறு வாரத்தில் இதயத்துடிப்பு உருவாகி, பின் ஓரிரு வாரங்களுக்குப்பின் இதயத்துடிப்பு நின்று போகலாம். அதிகமாகிக் கொண்டு வரும் திருமண வயதும் ஒரு முக்கிய காரணம். சுற்றுப்புறச் சூழல் மாற்றம், மாறி வரும் உணவுப் பழக்க
வழக்கம், மன அழுத்தம் இவையும் காரணமாக இருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும் ஒருமுறைக்கு மேல் இதுபோல் ஏற்படுமேயானால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் சாலச் சிறந்தது.

என்னுடைய தங்கைக்கு முதல் குழந்தை எட்டு மாதத்திலேயே பிறந்து விட்டான். தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். இப்போதும் குறைப்பிரசவம் ஆகுமா? அதுபோல் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
- மேகலா, ராமநாதபுரம்.
 ஒருமுறை குறைப் பிரசவம் ஆகி இருந்தால் (PRETERN DELIVERY), மறுமுறையும் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். எனவே உங்கள் தங்கை, மகப்பேறு மருத்துவரின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருப்பது மிகவும் அவசியம். மருத்துவர், இம்முறை குறைப்பிரசவம் ஆகாமல் இருக்க மருந்துகள் பரிந்துரை செய்வதுடன் மட்டும் அல்லாமல், ஒருவேளை அங்ஙனம் நேர்ந்துவிட்டால், சிசுவிற்கு சுவாசக் கோளாறு ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். எனவே உங்கள் தங்கையை மருத்துவரின் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள். நல்லதே நடக்கும். வாழ்த்துகள்!

டாக்டர் எனது மகள் 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள். ஸ்கேன் செய்து பார்த்ததில் நஞ்சு கீழே இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? சிறிது விளக்க முடியுமா?
- சிந்தாமணி, சேத்தியா தோப்பு.
இதனை ‘LOW LYING PLACENTA’ கீழே இருக்கும் நஞ்சு என்று கூறுவோம். பெரும்பாலான பேருக்கு கரு வளரும்போது நஞ்சு மேலே சென்று விடும். இதனால் ஒரு சில நேரங்களில் லேசான உதிரப்போக்கு ஏற்படலாம். அதனால் சற்று கவனம் தேவை. குறிப்பாக, கணவன் மனைவி உறவு தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் உங்கள் மகளுக்கு எட்டு மாதத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கவும். அது மேலே போயிருக்கும் பட்சத்தில் கவலைப்பட ஒன்றுமில்லை. நஞ்சு, எட்டு மாதத்திலும் கீழேயே இருந்தால், தகுந்த மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் அப்போது வழங்குவார்.

டாக்டர் எனக்கு வயது 41. திருமணம் ஆனது 25 வயதில். 10 ஆண்டுகளாக குழந்தை இல்லையென்று சில ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கிறோம். தற்போது எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறது. கருத்தரிப்பதற்கு ஏற்ற வழிமுறைகள்; சிகிச்சை முறைகள் பற்றிக் கூறுவீர்களா?
- ராணி, நாமக்கல்.
கண்டிப்பாக கூறுகிறேன் ராணி. மருத்துவ விஞ்ஞானம் நன்கு முன்னேறி உள்ள இந்த காலகட்டத்தில், குழந்தையின்மை சிகிச்சை முறையை மேற்கொண்டிருக்கும் தம்பதியினர் குழந்தைப்பேறின்றிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. எனவே உங்கள் விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும். தங்கள் வயது 41 என்பதாலும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகி இருப்பதாலும் உங்களுக்கு IN - VITRO - FERTILISATION (IVF) என்று சொல்லக்கூடிய செயற்கை கருத்தரித்தல் முறைதான் ஏற்புடையதாக இருக்கும்.
 அதற்கு முன் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சில பரிசோதனைகள் செய்து கொள்வது மிகவும் அவசியம். நீங்கள் உடனடியாக அருகில் இருக்கும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். தட்டுங்கள்! திறக்கப்படும்!

எனக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. மீண்டும் கர்ப்பமாக இருக்கின்றேன். கருவைக் கலைத்துவிடலாமா? குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று குழப்பமாக இருக்கிறது. உடனுக்குடன் குழந்தை பெறுவது நல்லதா?
-இந்திரா, காங்கேயம்.
குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் சுகப்பிரசவமா, சிசேரியனா என்று கூறவில்லை. எதுவாயிருப்பினும் பாதகமில்லை! உங்களுக்குக் குழப்பம் வேண்டாம். நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். கலைப்பதற்கான செயல்களைச் செய்வதைக் காட்டிலும் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வதே நல்லது. உடனுக்குடன் குழந்தை பெற்றுக்கொள்வது உடல் நலத்தைப் பாதிக்கும் என்றாலும்கூட, கருக்கலைப்பை ஒப்பிட்டுப் பார்க்கையில் இது பல படி மேல். உடனுக்குடன் பிள்ளை பெற்றுக்கொள்வது நல்லதல்ல என்று கருதி, கருக் கலைத்தால் உங்களுக்கு கருக்கலைப்பால்  வரும் கேடுதான் மிஞ்சும். மாறாக, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தால் இன்னும் ஈரைந்து மாதத்தில், ஒரு குட்டி தேவதையோ அல்லது ஒரு தேவகுமாரனோ உங்கள் வீட்டில் தவழ்வது நிச்சயம். அப்போது உங்கள் உடல் வருத்தம் எல்லாம் மறந்தே போகும். யோசித்து தெளிவாக முடிவெடுங்கள்!

குழந்தை பெறுவதற்கு முன்பு நான் மிக ஒல்லியாக இருந்தேன். குழந்தை பெற்ற சில வருடங்களில் உடம்பு குண்டாகிவிட்டது.  வயிறும் பெரிதாகிவிட்டது. குழந்தை பிறந்தவுடன் வயிற்றை துணியால் கட்டி வைக்காவிட்டால் காற்று புகுந்துவிடும். வயிறு உப்புசம் ஆகும் என்கிறார்களே, இது உண்மையா?
- சித்ரா, திருவண்ணாமலை.
குழந்தை பெற்றவுடன் உடல் பருமனாக இருப்பது அனைவருக்கும் இயல்பானதுதான். ஆனால் வெகுசிலரே, உடல் மீது அக்கறை கொண்டு, உடற்பயிற்சிகள் செய்தோ அல்லது உணவுக் கட்டுப்பாட்டுடனோ, உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் குழந்தை பெற்ற பின் உடல் மீது அக்கறை கொள்வதில்லை. அதேபோன்று வயிறு பெரிதாவது சரிவர உடற்பயிற்சி செய்யாததினால்தான்! கருவுற்றிருக்கும்போது வயிறு விரிவடைவதால் தசைகள் தளர்வடையும். தகுந்த பயிற்சிகளைச் செய்தால் மட்டுமே இதைத் தவிர்க்க முடியும். வயிற்றில் துணி கட்டி வைக்காவிட்டால் காற்று புகுந்துவிடும், வயிறு உப்புசம் ஆகும் என்பதெல்லாம் உண்மை அல்ல! முற்றிலும் அபத்தம்! அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்தவுடன் வயிற்றை இறுக்கிக் கட்டும்போது, பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.  போனது போகட்டும் சித்ரா! உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்! உடல் எடையைக் குறையுங்கள். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
தொகுப்பு: ப. ரவி வர்மன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com