குறைப்பிரசவம் காரணிகள் - தடுக்கும் வழிகள்!

முழுமையான மற்றும் ஆரோக்கியமான குழந்தை 9 மாதங்கள் அல்லது 40 வார பேறு காலத்திற்கு பிறகே பிறக்கும்.
குறைப்பிரசவம் காரணிகள் - தடுக்கும் வழிகள்!
Updated on
1 min read

முழுமையான மற்றும் ஆரோக்கியமான குழந்தை 9 மாதங்கள் அல்லது 40 வார பேறு காலத்திற்கு பிறகே பிறக்கும். 37 வாரங்களுக்கு முன்பே பிறக்கும் குழந்தை குறைப்பிரசவமாகும். இதன் எடை, குறைந்தும் காணப்படும். 32 வாரங்களுக்கு முன்பே பிறந்தால், அது தீவிரக் குறைப் பிரசவமாகும். 

ஏற்கெனவே குறைப் பிரசவத்தில் தாய் ஒரு குழந்தைப் பெற்றிருந்தால், மீண்டும் குறைப் பிரசவத்தில் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறு உண்டு.

பேறு காலத்தில் கருப்பை அல்லது   கருப்பைவாய் தொற்றுநோய் அல்லது அதிக குழந்தைகள் பிறக்கும் சூழல் ஆகியவையும் குறைப் பிரசவத்திற்கு வழி வகுக்கும்.

குழந்தையின் இயல்பான பிறப்பிற்குக் கருவுற்றிருக்கும்  தாயின் மருத்துவநிலையும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரகக் கோளாறு ஆகியவையும், குறைப்பிரசவத்திற்குக் காரணியாகலாம்.

தொடர் கருச்சிதைவுகள் அல்லது பிறவிக் கோளாறுகளாலும், குறைப்பிரசவம் நிகழலாம். குறைப் பிரசவத்திற்குக் கருவுற்று இருக்கும் தாய்மார்களின் பங்களிப்பே அதிகம்.  எனவே பேறு காலத்தில் உடல்நலத்தைப் பாதுகாப்பதன் மூலம், குறைப் பிரசவ இடரைத் தவிர்த்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.

இதற்குக்  கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்:
* புகை, மது , போதை மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்தல். 
* கருவுறுவதற்கு முன்பும், கருவுற்ற பின்பும் பேறுகாலம் முழுவதும் தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறுதல். 
* உயர்ரத்த அழுத்தம் அல்லது  நீரிழிவு நோயைத் தடுத்தல்.
* வைட்டமின் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகள், கருவுறு
வதற்கு முன்பும் பின்பும் குறைந்தபட்சம் 400 மைக்ரோ கிராம் அளவு போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளுதல்.
* பேறுகாலப் பிரச்னைகள், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே பிரசவ வலி, எச்சரிக்கை சமிக்ஞைகள் ஆகியவை குறித்த மருத்துவ ஆலோசனைகள்.
* நிறை அல்லது குறை பிரசவக் குழந்தை எதுவாக  இருப்பினும், அதற்கான மிகச் சிறந்த ஆரோக்கிய உணவு தாய்ப்பால் மட்டுமே.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஆண் குழந்தையை விடப் பெண் குழந்தை உயிர் பிழைக்கும் சாத்தியம் அதிகம் என்பது உண்மையா?   இது, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளதா?  அவ்வாறிருப்பின் இதற்கான காரணமென்ன?
குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஆண் குழந்தையை விடப் பெண் குழந்தை  உயிர் பிழைக்கக் காரணம், கருவிலிருப்பது ஆண் குழந்தையே என்பதை உறுதிப்படுத்தும் "ஒய்' குரோமோசோம் காயத்திற்கு மறுவினையாக, மூளை செயல்படுவதிலும் பாலின மாறுபாடுகள் இருப்பதால் நரம்பியல் ரீதியாக வேறுபாடுகளுக்கு வழிவகுத்து, அதன் ஆயுளை பாதிக்கிறது.   

பவித்ரா எழுதிய "பெண்களுக்கான கர்ப்ப கால ஆலோசனைகள்'   நூலிலிருந்து.
 வெளியீடு:  அருணா பப்ளிகேஷன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com