நவீன படைப்புகளிலும் பாரம்பரியம் இருக்க வேண்டும்!

வீட்டிலிருந்தபடியும் பெண்கள் சாதிக்கலாம், புகழ் பெறலாம் என்பதற்கு உதாரணம் லதாமணி ராஜ்குமார்.
நவீன படைப்புகளிலும் பாரம்பரியம் இருக்க வேண்டும்!
Published on
Updated on
2 min read

வீட்டிலிருந்தபடியும் பெண்கள் சாதிக்கலாம், புகழ் பெறலாம் என்பதற்கு உதாரணம் லதாமணி ராஜ்குமார். இவர் ஓர் ஓவியர், கைவினைக் கலைஞர், சமையற்கலையில் நிபுணி,  அழகுக் கலையிலும் கைத்தேர்ந்தவர் எனப் பல சிறப்புகளைக் கொண்டவர். சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது சிருஷ்டி ஆர்ட் அண்ட் கிராப்ஃட் கிளாஸில் இவரைச் சந்தித்தோம்:

"சிறு வயதிலிருந்தே எனக்கும் படிப்பிற்கும் ஏழாம் பொருத்தம்தான். ஆனால் என் உடன் பிறந்த நான்கு சகோதர, சகோதரிகள் அனைவரும் நல்ல படிப்பாளிகள். அதனால் என் பெற்றோருக்கு என்னை நினைத்து பயமும் கூடுதல் பொறுப்பும் இருந்தது.  எனக்கு படிப்பில்தான் அவ்வளவு ஆர்வமில்லையே தவிர எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸில் அதிக ஆர்வம் இருந்தது.  இதைப் புரிந்து கொண்ட என் பெற்றோர் என்னை ஓவியப் பயிற்சிக்கு சேர்த்துவிட்டனர். 

இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே ஓவியம் வரைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தொடர்ந்து மியூரல் ஆர்ட், கலம்காரி, மதுபனி, கண்ணாடி ஓவியம், ஆயில் பெயிண்டிங் என பல வகையான ஓவியங்களை கற்றுக் கொண்டேன். 

மேலும் கைவினை வகுப்புகளுக்கும் சென்று  தேர்ச்சி பெற்றேன். பதினோராம் வகுப்பு படிக்கும்போது தஞ்சாவூர் ஓவியத்தில் அனாடமி வரைவது, பெயின்டிங், கற்கள் பதிப்பது, தங்கத்தகடு பதிப்பது, போர்டு எப்படித் தயாரிப்பது, வஜ்ரம் எப்படி செய்வது போன்ற பல நுணுக்கங்களையும் முறையாக கற்றுக்கொண்டேன். அதைத்தொடர்ந்து குக்கிங், பேக்கிங், மேக்கப் பயிற்சிகளும் கற்றுக்கொண்டேன். இவையெல்லாமும் எனக்கு கலைகளாகத்தான் தெரிந்தது. 

அப்போது எனது தந்தை மணி திரைத்துறையில் இருந்தார். பி.மாதவனுடன் பார்ட்னராக இணைந்து, "ஆடுகள் நனைகின்றன', "வீட்டுக்கு வீடு வாசற்படி'  போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.  அந்தக்காலத்தில் எங்களுக்கு சொந்தமாக ப்ரிவியூ தியேட்டரும் இருந்தது. அப்பாவை பொறுத்தவரை பெண்கள் ஆசிரியை போன்ற பாதுகாப்பான வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று சொல்வார்.  அதனால்  வீட்டின் மாடியிலிருந்த ப்ரிவியூ தியேட்டரையே  எனக்கு ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் கிளாஸôக மாற்றிக் கொடுத்தார். 

ஆரம்பத்தில் மாணவர்கள் யாரும் வரவில்லை நான் மட்டும் தனியாக அமர்ந்து ஏதாவது கைவினைப் பொருட்கள் செய்வதும், ஓவியம் வரைவதுமாக இருப்பேன். 

சில நாட்கள் கழித்து 5 பேர் கிளாஸுக்கு வந்தனர். அப்படியே மெல்ல மெல்ல என் பயிற்சி வகுப்புக்கு மக்கள் வர ஆரம்பித்தனர். 

அந்த சமயத்தில் பொதிகை டிவியில் கலை பொருள்கள் செய்து காண்பிக்க ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. நிறைய விதவிதமான கேக் வகைகளை செய்து காண்பித்தேன். அதன்பிறகுதான் ஜெயா டிவியில் "இனிய இல்லம்'  நிகழ்ச்சியின் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 11 ஆண்டுகள் அந்நிகழ்ச்சியை நடத்தினேன். தேங்காய் சிரட்டையை வைத்து மேளம் செய்வது, சேவிங் பேங்க் செய்வது, பூக்கள் என்று எடுத்துக் கொண்டால் மண், க்ளே, பிஓபி, சோப், கண்ணாடி, ஆர்கண்டி, ரிப்பன், பேக்கிங் மெட்டிரியல், பட்டுக் கூடு, சாக்லேட் என கிட்டதட்ட 150 வகையான பூக்கள் செய்து காண்பித்தேன். அதன்மூலம் மக்களிடம் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. 

அதுபோன்று புதுமையாக இருக்க வேண்டும் என்று புதிதுபுதிதாக ஏதாவது செய்து கொண்டே இருப்பேன் அப்படி வெஜிடபிள் கார்விங்கில் மனித உருவங்களை வரைய ஆரம்பித்தேன். புதுமனை புகுவிழாபோன்ற  நிகழ்ச்சிகளுக்கு வெஜிடபிளில்  மாடுகளுடனான புதுவீடு போன்றவற்றை செதுக்கி வைத்தேன். இவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய கேட்டரிங் கல்லூரிகளிலிருந்து வந்தும் கார்விங் கற்றுக் கொள்கிறார்கள்.

தற்போது, என் பயிற்சி பள்ளி தொடங்கி 18 ஆண்டுகள் கடந்துவிட்டது 7 வகை பயிற்சியை மட்டுமே நம்பி ஆரம்பித்த இந்த வகுப்பில் தற்போது 500 வகையான பயிற்சிகள் தருகிறேன். இதுவரை என்னிடம் கிட்டதட்ட 6500க்கும் அதிகமானோர் பயின்றிருப்பார்கள். இரண்டு வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை இன்றும் பலர் கற்று வருகிறார்கள். நிறைய விருதுகளும் பெற்றுள்ளேன். சமீபத்தில் குளோபல் ஃபவுண்டேஷன், மதர்தெரசா எக்ஸலென்ட் அவார்டை எனக்களித்து கெளரவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

எவ்வளவுதான் நவீனமானப் படைப்புகளை உருவாக்கினாலும், அதில் நமது பாரம்பரியம் கொஞ்சமாவது ஒட்டியிருந்தால்தான் அது எப்போதும் நிலைத்து நிற்கும்.  உதாரணமாக, தஞ்சாவூர் ஓவியங்களில் முன்பெல்லாம் காய்கறி சாற்றினை கொண்டுதான் வண்ணம் கொடுப்பார்கள்.  தற்போது போஸ்டர் கலர்ஸ் வைத்து வர்ணம் தருகிறார்கள். ஆனால் அவையெல்லாம் இயற்கை வண்ணத்தின் அழகிற்கு முன்பு நிற்க முடியாது. அதனால்  எவ்வளவு நவீனமயமான கலைப் பொருள்கள் செய்தாலும் அதில் நமது பாரம்பரியமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
- ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com