

சாதாரணமாக தொழில்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சேவை சார்ந்த தொழில் அதாவது முதலீடு இல்லாத தொழில். இரண்டாவது உற்பத்தி சார்ந்த தொழில், இது முதலீடு வைத்து செய்வது. இங்கே நாம் பார்ப்பது முக்கால்வாசி முதலீடு செய்யும் தொழில்களை தான். ஆனால் முதலீடு என்று பெரிய அளவில் உள்ளதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ரூபாய் 500 முதலீடு செய்தால் கூட அது உற்பத்தி சார்ந்த தொழில் என சொல்லலாம். அந்தவகையில், இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது பப்பாளிக்காயை கொண்டு என்ன தொழில் செய்யலாம் என்று.
பப்பாளியைப் பொருத்தவரையில் அந்த மரம் முழுவதும் நமக்கு பயன் தரக்கூடியது. பப்பாளி பழம் மட்டும் இல்லை அதன் இலை, காய், விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. முக்கியமாக விவசாயம் செய்பவர்கள் மாற்று பயிர் தொழிலாக இதனை செய்யலாம். இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.
பப்பாளிக்காய், டூட்டி ஃப்ரூட்டி செய்து விற்பனை செய்யலாம். கூட்டு, பொரியல் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
பப்பாளி விதை, இதில் அதிக மருத்துவ குணம் உள்ளது. இதன் விதைகளை 10 அல்லது 15 எடுத்து அரைத்து காய் அல்லது பழங்களுடன் சேர்த்து மூன்று வாரம் தொடர்ந்து சாப்பிட கல்லீரல் வீக்கம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள், புற்றுநோய்கூட குறைவதாக ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
பப்பாளி இலை, இதை தேநீர் போல் வைத்து குடிக்கலாம். இதை பருகினால் சர்க்கரையின் அளவு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
இதை எப்படி வியாபாரமாக செய்வது என பார்ப்போம்.
டூட்டி ப்ரூட்டி செய்முறை:
தேவையான பொருட்கள்: பப்பாளிக்காய் நறுக்கியது - ஒரு கிலோ,
சர்க்கரை - ஒன்றரை கிலோ, சிட்ரிக் அமிலம் - கால் லிட்டர்
தண்ணீர் - தேவையான அளவு, கலர் - ஒரு ஸ்பூன்
செய்முறை: பப்பாளிக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக ஒரே அளவாக நறுக்கி ஒரு வெள்ளை துணியில் மூட்டை கட்டி, கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் வேகவைத்து பின்பு சாதாரண தண்ணீரில் வேகவைக்கவும். நீர் வடிந்த பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். பிறகு, சர்க்கரையில் பாதி எடுத்து கால் லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் வடிகட்டி ஆறிய பிறகு கலர் சேர்த்து பப்பாளித் துண்டுகளை அதில் சேர்க்கவும். இரண்டாவது நாள், முதல் நாள் தயார் செய்து வைத்த பப்பாளி துண்டுகளை லேசாக சூடு செய்து சர்க்கரை முழுவதும் கரைந்ததும் வடிகட்டி பப்பாளி துண்டுகளை நீக்கிவிட்டு அதே தண்ணீரில் மீதி இருக்கும் சர்க்கரையைப் பாதி அளவு சேர்த்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும். சர்க்கரை கரைந்ததும் வடிகட்டி ஆறிய பிறகு பப்பாளி துண்டுகளை சேர்க்கலாம். மூன்றாம் நாள், இரண்டாவது நாள் செய்தது போலவே செய்து சர்க்கரைப் பாகுடன் சிட்ரிக் அமிலம் சேர்த்து ஒரு கம்பிப் பாகு வந்தவுடன் இறக்கவும். ஆறியபிறகு அதில் பப்பாளி துண்டுகளை சேர்க்கவும். நான்காம் நாள், பப்பாளி துண்டுகளை வடிகட்டி எடுத்து விட்டு சர்க்கரைப்பாகை அடுப்பின் மீது வைத்து லேசான தீயில் தேன்போல் பாகு காய்ச்சவும். ஆறியபிறகு அதில் பப்பாளி துண்டுகளைச் சேர்க்கவும், பின்னர் 10 நாட்கள் கழித்து பப்பாளித் துண்டுகளை காயவைத்து எடுத்து வைக்கவும். இதே முறையில் சிறிய அளவாக செய்து பார்த்து, நன்கு பதமாக வருகிறது என்று தெரிந்தால் அதை அதிக அளவில் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்யலாம். இதற்கு எப்போதும் தேவை இருக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும்.
- ஸ்ரீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.