சாதனை நண்பர்கள்!

கல்விச் சேவைக்காக திருமணம் செய்து கொள்ளாமல், குடும்ப உறவுகளைத் துறந்து ஒரு கல்வி நிறுவனத்தை 14 ஆண்டுகள் கட்டிக்காத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை 70 வயது நிரம்பிய இரு தோழிகள்
சாதனை நண்பர்கள்!
Updated on
2 min read

கல்விச் சேவைக்காக திருமணம் செய்து கொள்ளாமல், குடும்ப உறவுகளைத் துறந்து ஒரு கல்வி நிறுவனத்தை 14 ஆண்டுகள் கட்டிக்காத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை 70 வயது நிரம்பிய இரு தோழிகள் உருவாக்கியுள்ளனர்!
சரஸ்வதி - பொன்ரதி என்ற இருவரும் தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி இமயம் நகரில் "இமயம் சேவாலயம்' என்ற அமைப்பைத் தொடங்கி ஒரு முன்மாதிரி பள்ளியை உருவாக்கிய பெருமை இவர்களைச் சேரும்.
அரசு உதவி பெறும் பள்ளியில் 25 ஆண்டுகள் பணி செய்து, அதில் கிடைத்த பணப்பலன் ரூ.24 லட்சம் மூலம் ஒரு பள்ளியை உருவாக்கி, அதில் காலை மற்றும் மதிய நேரங்களில் இலவச உணவு வழங்கி கிராமப்புற மாணவர்களைப் படிக்க வைத்த சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இந்த தோழிகள்.
தங்களது சேவையை வெளிச்சம்போட்டு காட்ட விரும்பாமல் சிறிது தயங்கித்தான் இந்தப் பேட்டிக்கு சம்மதித்தனர்.
சரஸ்வதி: ""8-ஆம் வகுப்பு படிக்கும்போது பொன்ரதியுடன் நட்பு ஏற்பட்டது. சிறுவயதில் இருந்தே சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியான "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டதால் எங்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டது. பள்ளியில் படித்தபோது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சிற்பாவனந்தாவின் உரை எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து, கல்லூரி, ஆசிரியர் கல்வி என இருவரும் சேர்ந்தே படித்தோம். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் இருவருக்கும் ஆசிரியர் பணி கிடைத்தது. நான் தலைமையாசிரியையாகவும், பொன்ரதி உதவி தலைமையாசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்,""நாம் திருமணம் செய்துக் கொள்ளாமல் தொடர்ந்து கல்வி சேவை செய்தால் என்ன?'' என நினைத்தோம். அதையே பின்பற்றினோம்
1998-ஆம் ஆண்டும், 1999-ஆம் ஆண்டு பொன்ரதியும் விருப்ப ஓய்வு பெற்றார். இருவரும் இணைந்து ரூ. 24 லட்சத்தில் தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் 7 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, இமயம் நகரை உருவாக்கி, அதில் "இமயம் சேவாலயம்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். 
2002-ஆம் ஆண்டு இமயம் பள்ளியைத் தொடங்கினோம். 6 முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைத் தொடங்கி கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கினோம். தொடர்ந்து 11 ஆண்டுகள் எங்கள் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது'' என்றார் பெருமிதத்துடன்.
பொன்ரதி: ""திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு இருவரது குடும்பத்திலும் தொடக்கத்தில் எதிர்ப்பு வந்தது. இருப்பினும், எங்களால் முடிந்த அளவுக்கு குடும்பத்துக்கு உதவிய பிறகே இந்தச் சேவையை செய்து வருகிறோம். எங்களது சேவையை அறிந்த பலர் தங்களால் இயன்ற அளவுக்கு இருக்கைகள், பொருள்கள் வழங்கி உதவி செய்தனர். தற்போது பெரிய நிறுவனமாக எங்கள் கல்வி நிறுவனம் வளர்ந்துள்ளது. இருவருக்கும் 70 வயது கடந்துவிட்டதால் தற்போது இமயம் சேவாலய பள்ளியை மாதா அமிர்ந்தானந்தமயி மட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம். விரைவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு மீண்டும் பள்ளி செயல்படத் தொடங்கும்'' என்றார்.
""ஒழுக்கம், காலம் தவறாமை, கலைகள் மூலம் கல்வி என்ற அடிப்படையில் நல்ல மாணவர்களை உருவாக்கி உள்ளோம் என பலரும் பெருமையுடன் பேசுவதால் நாங்கள் எடுத்த முயற்சியில் முழுமையான அளவுக்கு மனநிறைவு பெற்றுள்ளோம் என்றே கருதுகிறோம். ஆதரவற்ற முதியவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளோம்'' என்றனர் இருவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com