சாமானியனுக்கும் சங்கீதம் போய் சேர வேண்டும்!
திரையுலகத்தைப் போலவே, கர்நாடக சங்கீத உலகத்திலும் அவ்வப்போது "சூப்பர் ஸ்டார்கள்' வலம் வருவதுண்டு. ஜி.என்.பி., எம்.எஸ். சுப்புலெட்சுமி, பாலமுரளி கிருஷ்ணா, கே.ஜே. ஏசுதாஸ் வரிசையில், இப்போது அருணா சாய்ராம். இவரது இசை நிகழ்ச்சி என்று சொன்னால், சங்கீத சபாக்களில் எள் போட இடமில்லாமல் ரசிகர் கூட்டம் மொய்ப்பதன் ரகசியம், சபா நடத்துபவர்களுக்கே இன்னும் புரியவில்லை.
வீணை தனம்மாள் வழிவந்த சங்கீத பாணி என்று சொன்னால் அதைவிட உசத்தியான சாஸ்த்ரீய சங்கீத பாணி கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். சங்கீதத்தின் அடிப்படை இலக்கணங்களான தாளக்கட்டும், ஸ்ருதி சுத்தமும், ஆழமும் அழுத்தமுமான ஆலாபனை முறையும் பிருந்தா - முக்தாவுக்கான சங்கீத பாணியின் டிரேட் மார்க்குகள். ஸ்வர பிரஸ்தாரங்களில், ஏனைய பாணிகளிலிருந்து அவர்கள் நிறையவே வித்தியாசப்படுவார்கள்.
அருணா சாய்ராமின் சங்கீத குரு பிருந்தாம்மா. வீணை தனம்மாளின் பேத்தி என்பதால், அவரிடம் நேரிடையாகப் பல வர்ணங்களும், கீர்த்தனங்களும், பதங்களும், ஜாவளிகளும்,பாடாந்தரம் செய்து கொண்டவர். சிஷ்யையான அருணா சாய்ராமுக்கு அவை மடை மாற்றம் செய்யப்பட்டதன் விளைவுதானோ என்னவோ, இவரது இயல்பான மனோதர்மமும் சேர்ந்து கொள்ள, அருணாவின் சங்கீதம் என்கிற புதியதொரு பாணி கர்நாடக சங்கீத உலகில் பிரசித்தி அடைந்திருக்கிறது.
சாதாரணமாக, சங்கீத உலகில் மிகவும் பிரகாசமாக ஒளிவிடும் இசை நட்சத்திரங்கள் இளம் வயதிலேயே அடையாளம் காணப்பட்டு விடுவார்கள். அருணா சாய்ராம் இந்த வழிமுறைக்கு விதிவிலக்கு. மும்பையில் இருந்த அருணா சாய்ராமை சென்னை சங்கீத உலகம் அடையாளம் கண்டு, அவர் திடீர் விடிவெள்ளியாகக் குதித்தெழுந்தது, தனது நடுத்தர வயதில்தான் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. திறமையை நீண்டநாள் அடக்கி வைக்க முடியாது என்பதற்கு அருணா சாய்ராம் சமீபத்திய எடுத்துக்காட்டு.
கலைஞனுக்கும் ரசிகனுக்கும் இடையே இருந்த பனித்திரையை உடைத்து, தன்னைப் போலவே ரசிகர்களையும் ராக சுகானுபவத்தில் இணைத்துவிடும் அருணா சாய்ராமின் இயல்பான உத்திதான், அவரது வெற்றிக்குக் காரணம் என்று கூற வேண்டும். தனது சங்கீதத்தின் முதல் ரசிகை அவரேதான். தானே ரசித்துப் பாடும்போது, அங்கே எழும் உற்சாகம் பக்கவாத்தியக்காரர்களைத் தொற்றிக்கொண்டு விடுகிறது. அடுத்த கட்டமாக ரசிகர்களையும் இசையின் காந்த சக்தி ஈர்த்துக் கொள்கிறது. விளைவு? அருணா சாய்ராமின் கச்சேரிகளில் நாத சுகானுபவம் பெருமழையாகப் பொழிந்து, சங்கீத சாகரத்தில் அனைவரையும் மூழ்கடித்து விடுகிறது.
திருவாரூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்து, சென்னையில் கர்நாடக சங்கீத உலகில் தனிப்பெரும் ஆளுமையாக வலம் வந்து இப்போது சர்வதேசப் புகழை அடைந்திருக்கும் அருணா சாய்ராம், தனிப்பட்ட முறையில் எந்தவித படாடோபமோ, மிகப்பெரிய பாடகி என்கிற மனோபாவமோ இல்லாமல் வளையவரும் குடும்பத் தலைவி.
சங்கீத நாடக அகாதெமியின் துணைத் தலைவர், பத்ம விருது பெற்ற பிரமுகர், சென்னை சபாக்களின் விருதுகளை எல்லாம் அள்ளிக் குவித்தவர் என்கிற அங்கீகாரங்கள் எதுவும் தனக்குப் பின்னே ஒளிவட்டம் ஏற்படுத்தி விடாமல், தனது தனித்தன்மையைப் பாதுகாப்பவர். எளிமையான, ஆனால் அழகான அவரது வீட்டிற்குள் நுழையும்போதே, சங்கீத மணம் நம்மை ரம்மியமாக வரவேற்கிறது. இசையுலகில் நுழைவது போன்ற பிரமை நம்மை ஆட்கொள்கிறது.
அருணா சாய்ராம், "முருகனே குகனே ஷண்முகனே' என்று பரவசநிலையில் ஷண்முகனை இசையால் ஆராதித்துக் கொண்டிருக்கிறார். காற்றும் அவரது இசையில் மயங்கி நிற்கிறது.
சிறு பெண்ணாக உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
அம்மா திருச்சியை ஒட்டிய ஒரு கிராமம், அப்பா திருவாரூர் பக்கத்துக்காரர். ரயில்வேயில் வேலை இருந்ததால் அப்பா மும்பையில் மாதுங்கா பகுதியில் குடியேறியிருந்தார். அங்கே தான் நான் பிறந்தேன். மாதுங்கா பகுதி பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்தது. அதனால் நம்முடைய கலாசார வாழ்வியல் முறை இயல்பாகவே எங்களுக்கு வாய்த்தது. அம்மா அன்றாடம் காலையில் கிருஷ்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவார்கள். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டுதான் ஒவ்வொரு நாளும் நான் எழுந்து கொள்வேன். அதனால் என் தாயார் கிருஷ்ண பக்தியோடு இசையையும் சேர்த்தே ஊட்டி வளர்த்து விட்டார் என்றுதான் இப்போது தோன்றுகிறது.
பள்ளி நாட்களிலேயே உங்களுக்கு இசையில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டதா?
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், சனி ஞாயிறுகளில் சண்முகானந்த சபாவில் கச்சேரிகள் நடக்கும். அதை ஒரு நாளும் நான் தவறவிட்டதில்லை. என் பள்ளி நாட்களில் எம்.எஸ். அம்மா, டி.கே.பட்டம்மாள், மதுரை மணி ஐயர் உள்ளிட்ட எல்லா பிரபல இசைக் கலைஞர்களின் கச்சேரிகளையும் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது.
கச்சேரிகளுக்குச் சென்றதைப் போலவே தமிழ் கற்றுக் கொள்வதற்கும் வகுப்புகளுக்குப் போய் முறையாக தமிழ் கற்றுக் கொண்டேன். தாதர் பகுதிகளுக்குச் சென்ற போது "அபங்' கேட்பதும், நாரிமன் பாயின்ட் செல்லும் பொழுது மேற்கத்திய இசை கேட்பதும் எனக்குப் பிடித்தமானவை. இவற்றையெல்லாம் குறைவு என்றோ தேவையற்றது என்றோ எனது பெற்றோர் ஒரு நாளும் சொன்னதில்லை. இசையை இசைக்காகவே புரிந்து கொள்வதற்கான ஆரோக்கியமான மனநிலையை அவர்கள் எனக்கு ஏற்படுத்தித் தந்திருந்தார்கள். மும்பையின் பல்வேறுபட்ட கலை கலாசாரம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு அது வாய்ப்பாக அமைந்திருந்தது.
நீங்கள் ஓர் இசைக் கலைஞராக வேண்டுமென உங்கள் பெற்றோர் விரும்பினார்களா?
நான் கர்நாடக இசைப் பாடகியாக மேடைகளில் பாட வேண்டும் என்று என் பெற்றோருக்கு எந்த அபிப்ராயமும் இருக்கவில்லை. இசையை ரசிப்பதற்கும் ஆராதிப்பதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது
உங்கள் குருமார்கள் பற்றிச் சொல்லுங்களேன்...
இயல்பான இசைச் சூழலில் வளர்ந்ததால் எனக்குள்ளும் இசை வந்துவிட்டது. நினைவறியாத வயதிலேயே அம்மா தான் என்னுடைய முதல் குரு. அன்றாடம் இசையை அதிகாலையிலேயே பழக்கியது அம்மாதான். என்னுடைய பத்தாவது வயதில் சங்கீத கலாநிதி பிருந்தா அம்மா எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்து சிலருக்கு இசை கற்பித்தார்கள். அப்போது அவர்களோடு நானும் கற்றுக் கொண்டேன். என்னுடைய 25 வயது வரை அவர்களிடம் நான் பல இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அதனை இறைச்சித்தம் என்று தான் சொல்ல வேண்டும். டைகர் வரதாச்சாரியாரின் மாணவர் கே.எஸ். மணி, சித்தூர் சுப்ரமணிய பிள்ளையின் மாணவர் ராமச்சந்திரன், சங்கீத கலாநிதி வீணை வித்வான் கே.எஸ். நாராயணசுவாமி, டி.ஆர்.சுப்பிரமணியம், நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் போன்ற வித்வான்கள் பல்வேறு காலகட்டங்களில் எனக்கு ஆசார்யர்களாக இசையின் பல பரிமாணங்களை கற்றுக்கொடுத்தார்கள்.
உங்களது அரங்கேற்றம் எப்போது நடந்தது? அந்த முதல் கச்சேரி அனுபவம் நினைவிருக்கிறதா?
முதன் முதலாக, பதிமூன்று வயதில் ஸ்ரீராம நவமியின் போது சமாஜத்தில் ஒரு மணி நேரம் கச்சேரி செய்தேன். அப்போது சங்கராபரணம் பாடிய நினைவும், பஞ்ச ரத்தின கீர்த்தனைகளில் ஒன்று பாடியதும் பசுமையாக நினைவு இருக்கிறது.
முழு நேர இசைக்கலைஞராக நீங்கள் மாறியது எப்போது? எதனால்?
எனக்கு 18 வயதில் திருமணமும் 22 -ஆவது வயதில் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். குடும்பம் குழந்தைகள் தான் என்னுடைய முதல் கடமையாக இருந்தது. அதைத் தாண்டி மும்பையிலேயே சில இடங்களில் அவ்வப்போது கச்சேரிகள் செய்து வந்தேன். புகழடைய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஆனால், தொடர்ந்து சாதகம் செய்வதை நான் ஒருபோதும் நிறுத்தவில்லை. குழந்தைகள் வளர்ந்து அவர்களே எனக்கு ஊக்கம் தந்த பிறகு தான் நான் முழுமூச்சில் இசைக் கச்சேரிகள்செய்யத் தொடங்கினேன். அதனால் ஆரம்ப காலத்தில் புகழ் அடையவில்லையே என்ற சிந்தனையே எழவில்லை.
சங்கீத கலாநிதி பிருந்தா அவர்களது பாணி பற்றிக் கூறுங்களேன்...
பிருந்தா அம்மா 200-க்கும் மேற்பட்ட மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளை எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். பதம் ஜாவளி இரண்டும் பிருந்தா அம்மா இசையில் தனி சிறப்பான அடையாளம் கொண்டவை. அவற்றை எனக்கு மனமுவந்து கற்றுத் தந்தார்கள். தன்னுடைய பாணியைத் தன் மாணவர்கள் அப்படியே பின்பற்றத் தேவையில்லை என்று அவர் நம்பினார். அவரவர்க்கு என ஒரு சிறப்பு இருக்கிறது அதனை வெளிப்படுத்துவது தான் சரியாக இருக்கும். ஒரு நல்ல குரு மாணவன் மனதில் இருளை அகற்றி ஒளியேற்றுபவர்தானே, அப்படியான குருவாகத் தான் அவர் இருந்தார். அடிப்படைகளை மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தவர். என்னுடைய மனோதர்மத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருந்தார். சொல்லப்போனால் அவர் அப்படி இருந்தது தான் என்னுடைய வெற்றிக்கு அடிப்படை என்று கூட சொல்லலாம்.
உங்கள் குருவின் வழியில் இப்போது நீங்களும் சங்கீத கலாநிதி விருது பெறப்போகிறீர்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது கனவோ நனவோ எனும் படியாகத் தான் இருக்கிறது. அந்த நாளில் பிருந்தா அம்மா சங்கீத கலாநிதி வாங்கியபோது அது ஆர்வமூட்டுவதாக பிரமிப்பாக இருந்தது. மியூசிக் அகாதெமியின் வாசலில் எம் எஸ் அம்மா, எம் எல் வி அம்மா, செம்மங்குடி போன்றவர்களைப் பார்க்கும்போது அத்தனை பரவசமாக இருக்கும். அவர்களை ஒரு முறை தொட்டுப் பார்த்து விடலாமா என்று கியூரியாசிட்டி ஏற்படும். ஹீரோக்களாக, பக்தி செய்வதற்கு உரியவர்களாகத் தோன்றுவார்கள். அப்படி ஒரு ஹீரோ ஒர்ஷிப் அந்த நாளில் இருந்தது. அந்த இடத்தை இப்போது நானும் கூட அடைந்திருக்கிறேன் என்று எண்ணும் போது நம்பமுடியாத ஆச்சரியமும் மலைப்பும் மேலிடுகிறது.
பிருந்தாம்மா பாணியிலிருந்து விலகி இப்போது அருணா சாய்ராம் பாணி என்ற தனி பாணியை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன?
என்னுடைய ஆரம்பகால கச்சேரிகளில் நான் என் குருமார்களிடம் கற்றுக்கொண்ட துல்லியமான சங்கீதத்தை அப்படியே பாட முயன்றேன். பெரிதாக ரசிகர்கள் இல்லாத எத்தனையோ சபைகளில் பாடி இருக்கிறேன். இவ்வளவு உயர்ந்த சங்கீதத்தைக் கேட்பதற்கு அதிகம் பேர் இல்லையே என்று எனக்குள் நானே கேள்வியைக் கேட்டுக் கொள்வேன். அந்த சுய பரிசோதனையின் முடிவில் நான் கண்டடைந்தது தான் இந்த நவரசங்களையும் உள்ளடக்கியதான என்னுடைய தற்போதைய கச்சேரி அமைப்பு. ஒரு கர்நாடக சங்கீத கச்சேரிக்கென இருக்கும் எந்த மரபுகளையும் மீறி விடாமல் அதேநேரத்தில் நவரசங்களையும் அதனுள் தெளிவாக அமைத்து ஜனங்களிடம் கொண்டு சேர்க்கும் வித்தை கைவரப் பெற்றபோது தான் எனது வெற்றிப் பயணம் தொடங்கியது. கச்சேரி என்பது பாடகருக்கும் ரசிகனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் என்ற உண்மை புலப்படும்போது ரசானுபவம் சாத்தியப்பட்டு விடுகிறது.
உங்கள் மனம் கவர்ந்த வாக்கேயகாரர்அதாவது சாகித்யக்காரர் யார்? ஏன்?
ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடும்போது கிருஷ்ணனின் லீலைகளில் லயித்துப் போவதோடு கிருஷ்ணன் தன் மடியில் வந்து அமர்ந்திருக்கிறான் எனும் உணர்வோடு பாடுவாராம். அவர் தாளம் போடும் போது கூட, கிருஷ்ணருக்கு வலிக்கும் என்று தன் கால்களில் அடித்துத் தாளம் போட மாட்டாராம். காற்றில்தான் தாளம் போடுவாராம். கிருஷ்ணனை உணரும் குதூகலத்தை அளிப்பன அவரது பாடல்கள். அதனால் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் தான் என் மனம் கவர்ந்த வாக்கேயக்காரர்.
உங்கள் கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவி பெரிதாகப் பேசப்படுகிறதே, நீங்கள் வழங்கும் ராகம் தானம் பல்லவியில் என்ன தனித்துவம்!
பொதுவாக ராகம் தானம் பல்லவிக்கு, தாளம் லயம் இவற்றில் தான் கவனம் செலுத்துவார்கள். நானும் ஆரம்பகாலங்களில் அப்படிப் பாடியிருக்கிறேன். ராகம் தானம் பல்லவிக்கு என நான் ஒரு கருத்தை முதலில் அமைத்துக் கொள்கிறேன். ஆறுபடைவீடு, அஷ்டலக்ஷ்மி வணக்கம், மும்மூர்த்திகளுக்கு அஞ்சலி இப்படி முதலில் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்கேற்ப சொற்களை அமைத்து தாளம் ராகங்களைத் தேர்ந்தெடுத்து என்னுடைய ராகம் தானம் பல்லவியை வடிவமைக்கிறேன். இதுதான் தனித்துவமாகத் தெரிகிறது. இதனால்தான் அதிக அளவிலான ரசிகர்கள் ராகம்-தானம்-பல்லவிக்கு இருக்கிறார்கள்.
புதிய முயற்சிகளுக்கு விமர்சனங்களை எதிர்கொண்ட அனுபவங்கள் என்ன?
நிறைய அனுபவங்களை சந்தித்திருக்கிறேன் - சந்திக்கிறேன்- சந்திக்கப் போகிறேன். ஆனால் என் மனசாட்சியை நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் கர்நாடக சங்கீதத்தின் மரபுகளை மீறி விடாமல் சிறு குழந்தை முதல் வயோதிகர்கள் வரை என் இசையைக் கேட்க வருபவர்களுக்குத் தேவையானதை ரசிக்க முடிந்ததைத் தருகிறேன். எந்தக் காரணத்திற்காகவும் சங்கீதத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் அதே நேரத்தில் குழந்தைகள் கையில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய எளிமையையும் கவனத்தில் கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை என்னுடைய இந்த முயற்சிகள் அடுத்த தலைமுறை இசை ஆர்வலர்களை உருவாக்குவது. அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.
கர்நாடக சங்கீதத்திற்கு சங்கீத கலாநிதி அருணா சாய்ராம் பங்களிப்பு எதுவாக இருக்கும்?
ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்திற்கு என்று இருந்த கர்நாடக சங்கீதத்தை அதன் மரபு வழுவாமல் அனைத்துத் தரப்பு சாமானிய மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். பக்தி, பாவம் என்ற இரண்டின் துணையோடு இதனை செயலாக்க முற்படுகிறேன். கர்நாடக சங்கீதத்தை அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்துவிட்டால் அதுதான் நான் கர்நாடக சங்கீதத்திற்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்க முடியும். அடுத்த தலைமுறை இப்படி என்னை அடையாளம் காணும்படியான செயல்களை முன்னெடுக்கவே விரும்புகிறேன்.
- ஜோதிலட்சுமி
படங்கள்: அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.