அம்மா! பேராசிரியர் தாயம்மாள் அறவாணன்

"அன்னையும் பிதாவும் சொன்னெறி தவறேல் தந்தை தாய்ப் பேணல் மைந்தருக் கழகு'' என்பன வெள்ளைக்காரர்களால் உருவாக்கப் பெற்ற நீதிச்சொல் என்ற நூலில் உள்ள அறமொழிகள். தாயும் தந்தையும் அனைத்துமாய் இருக்கின்றனர்.
அம்மா! பேராசிரியர் தாயம்மாள் அறவாணன்

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்

"அன்னையும் பிதாவும் சொன்னெறி தவறேல் தந்தை தாய்ப் பேணல் மைந்தருக் கழகு'' என்பன வெள்ளைக்காரர்களால் உருவாக்கப் பெற்ற நீதிச்சொல் என்ற நூலில் உள்ள அறமொழிகள். தாயும் தந்தையும் அனைத்துமாய் இருக்கின்றனர். அவர் சொல்லும் நன்னெறிகள் நம் வாழ்க்கையை நெறிப்படுத்துவன. அம்மா என்ற சொல் அன்னை, அவ்வா, அவ்வெ, அம்மே, அமா, அவ்வை, அயா, ஒவ்வா, யாய், ஞாய், தாய், தாயி, தள்ளை, ஆத்தாள் எனத் தமிழரிடத்தும் ஏனைய திராவிட மொழிகள் அனைத்திலும் வழங்குகின்றது. காட்டு நாயக்கர் என்ற பழங்குடி மக்கள் "ஒவ்வ' என்றும், நீலகிரி படுகர் "அவ்வெ' என்றும், தோடர் இன மக்கள் "தோய்' என்றும் வழங்குவர். ஆப்பிரிக்காவிலுள்ள செனாகல் நாட்டு ஓலப் மொழி பேசும் மக்கள் அம்மாவை "யாய்' என்று அழைப்பர். தமிழ் இலக்கியத்தில் "யாய்' என்றால் என் தாய் என்றும் "ஞாய்' என்றால் உன் தாய் என்றும் வழங்கப்பெறும். இவ்வாறு முறைச் சொற்களை ஆராய்ந்து உறவு முறைகள் என்ற நூலை எழுத வைத்தவர் என் தாய் கோமதி. 
பிறப்பு: குமரி மாவட்டத்தில் சிற்பத் தொழில் வல்ல மயிலாடி என்ற ஊரை ஒட்டிய மிகச் சிறு ஊர் சேந்தன்புதூர். அவ்வூரில் சித்தாந்த ஆசான், வித்துவான் பகவதிப் பெருமாள் பிள்ளையின் மனைவியாக எட்டுக் குழந்தைகளின் தாயாக வாழ்ந்தவர் என் தாய். ஐந்தாம் வகுப்பு வரையே அக்காலத்தில் படித்தாலும் புத்தகம், நாளிதழ் விடாமல் படிக்கும் பழக்கம் உடையவர். அம்மாவின் அப்பா தமிழ்க் கவிதைகளை இயற்றும் கவிஞர். என் மூன்று சகோதர்களில் கணேசன் சுதந்திரத் தியாகி, சிறை சென்றவர். காந்தியடிகளிடம் சுந்திரத்திற்காக நகையைக் கழற்றிக் கொடுத்த தியாகி காந்திராமன் பிள்ளையின் குடும்ப உறவுத் தங்கையே என் அம்மா. ஆர்மோனியம் கற்றுச் சுதந்திரப் பாடல்களை வாசிப்பாராம். எனக்கும் இசை கற்றுத்தர ஒரு பாட்டு வாத்தியாரை வீட்டிற்கு வரச் செய்தார். நான் பாட ஏற்பாடு செய்தாயே அம்மா. சில நாளிலேயே அவரை அனுப்பி விட்டேனே...இன்று எண்ணி வருந்துகிறேன். அதற்கு ஈடாக என் மகள் மருத்துவப் பேராசிரியரை அன்று நடனம் கற்க வைத்தேன் அம்மா. 
அதிகாலை விழிப்பு: காலையில் எழுந்து நீ எல்லோருக்கும் சமைத்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும். அங்கே வேலையாட்களை மேற்பார்வையிட வேண்டும். அவர்களுக்கு எல்லாம் உணவு கொடுக்க வேண்டும். மாமியாரோடு சேர்ந்து நெல் குத்தி அரசி ஆக்கிட வேண்டும். அத்தனைப் பேருக்கும் அம்மியில் அரைத்துக் குழம்பு செய்ய வேண்டும். மாவு ஆட்டும் உரலில் மணிக்கணக்காக இட்லி மாவு ஆட்டி எடுக்க வேண்டும். அடுப்பை ஊதி ஊதியே உன் வயிறு குழி விழுந்ததே அம்மா. "அதிகாலையில் பெண்கள் எழுந்து வேலைகள் செய்ய வேண்டும்'' என்பாய். ஒருநாள் நான் தூங்கி விட்டேன். 
நீ வாசல் கூட்டினாய். என்னை எழுப்பித் தெருவில் நிற்க வைத்து குப்பையை அள்ளி என் தலைமீது போட்டு விட்டாய். இலை அபிசேகமாக எண்ணி இன்றும் என் நினைவில் வருகிறதே. அந்த நிகழ்சியால்தான் இன்று வரை நான் 3 மணிக்கே விழித்துக் கொள்ளும் பழக்கம் உடையவள் ஆனேன். எழுந்து படித்ததால் 25 நூல்களை என்னால் உருவாக்க முடிந்தது. "அவ்வையார் படைப்புக் களஞ்சியம்' என்ற 800 பக்க நூலுக்குத் "தினத்தந்தி' 2 இலட்சம் ரூபாய் விருது தந்து பாராட்டியது. அன்று உன் கண்டிப்பு கட்டளையால் நான் எழுந்து வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். தோட்டத்திற்குச் சென்று கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், சாதிப்பூ இவற்றைப் பெட்டி பெட்டியாகப் பறித்து எடுத்துத் தலையில் சுமந்து சந்தைக்குக் கொண்டு சென்று வணிகம் செய்ய வேண்டும். உன் பிள்ளைகள் எல்லோருமே இப்படித்தான் உழைத்தார்கள். ஒரு ஏக்கர் நிலம் பத்தாகப் பெருகியது. அது உன் கடும் உழைப்பால் அல்லவா?
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா 
ஊக்கம் உடையான் உழை (குறள் 594) 
என்ற குறளின் கருத்தைப் பதிய வைத்தது நீதான். 
எட்டாம் வகுப்புக்குமேல் படிக்க வேண்டும் என்றால் நம் ஊரிலிருந்து நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். தோட்ட வேலை செய்தபின் போக வர 4 + 4 = 8 கி.மீ நடந்தே சென்று சுசீந்திரம் பள்ளியில் படிக்க வேண்டும். சோத்து மூட்டையுடன் புத்தக மூட்டையையும் சுமந்து, நடந்தே சென்று நான் படித்த கல்வியை அன்று நீ ஆதரித்தாயே. "அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?' என்று பேசும் காலத்திலேயே படிக்க வைத்தாயே பிள்ளைகளை. உன் மாமியாராகிய என் பாட்டியின் உழைப்பைப் பற்றி நீ அன்று சொன்னது:
என் அப்பாவைப் பெற்ற பாட்டி பதினேழு வயதிலேயே இளம் விதவை. இரண்டு ஆண் குழந்தைகளை வளர்த்து இருவரையும் ஆசிரியர் ஆக்கிய வைராக்கியமான பெண். அப்பா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று குமரி மாவட்டம் சேர்ந்திருந்தபோது மலையாள வித்துவான் படித்திருந்தார். பின்னாளில் தமிழ் வித்துவான் படிக்க ஓர் ஆசிரியரிடம் பாடம் கேட்டாராம். கல்வி கட்டணம் கொடுக்க இயலாமல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது வராந்தாவில் அமர்ந்து கேட்டு படித்துத் தேறியதாகக் கூறியிருக்கிறாய். 
அப்பா என்னை மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று சொன்னபோது திருமணம் செய்து கொடுத்துவிட எண்ணினாய். ஆனால் அப்பா குமரி மாவட்டத்தில் பிறந்து திருவனந்தபுரத்தில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராகவும் இருந்த அறிஞர் வ.அய்.சுப்பிரமணியனிடம் எம்.ஏ படிக்க அனுப்பி வைத்தார். அதற்கு நீ எந்த மறுப்பையும் சொல்லவில்லை. திருவனந்தபுரம் சென்ற பின்புதான் ஆய்வு என்றால் என்ன என்பதை உணர்ந்தேன். 
தொலைநோக்குப் பார்வை: என்னைப் பெண் பார்க்க வந்தவரெல்லாம் பெண் அழகில்லை, கறுப்புக் கன்னத்தில் பெரிய மச்சம் என்று சென்று விட்டனர். அப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலம் நல்ல பையன், அவன் என் மகன், தாயம்மாளைக் கொடுக்கலாம் என்று அறிஞர் ஆசிரியர் திரு.ச.வே.சுப்பிரமணியம் கூறினார்கள். நான் மாப்பிள்ளை தலை வழுக்கை என்று உன்னிடம் கூறியதும் நீ சொன்னது: 
"உன் அப்பா என்னைப் பெண் பார்க்க வந்தபோது எனக்கு 14 வயது உன் அப்பாவுக்கு 29. முதல் மனைவி இறந்து விடவே, இரண்டாம் தாரம், தலையில் முடி வளர்த்து கொண்டை வேறு வைத்துள்ள மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து நான் சிறப்பாக இருக்கிறேன் பார். நீயும் அப்படிப் பெருமையுடன் வாழ்வாய்'' என்று என்னை இணங்க வைத்து ஆசீர்வதித்தாய். நூல்கள் எழுதியதில் 10}க்கும் மேற்பட்ட பரிசுகள், பல விருதுகள் கிடைத்துள்ளன. ஆப்பிரிக்கச் செனகால் நாட்டு டக்கார் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பேராசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பேறு எனக்கு கிட்டியது எனில், அது எல்லாம் உன் தொலைநோக்குப் பார்வையே காரணம் அம்மா.
விலங்குகளிடம் நேசிப்பு உடையவள்: அம்மா நீ பச்சைக் குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு பசுவை 10 கி.மீ கடந்து அனுப்பி வைத்தாயே அப்பசு ஒரு வாரத்தில் உன்னைத் தேடி வீட்டிற்கு வந்துவிட்டது. "வெள்ளைப் பசுவே நீ என்னைத் தேடி வந்துட்டியே'' என்று அதன் முகத்தைக் தடவிக் கொடுத்து முத்தம் இட்டாயே. 
சாதி மதம் பாராதவள்: ஊரில் உனக்கு நல்ல பெயர். சாதி, மத வேறுபாடுகள் உனக்கு இருந்ததில்லை. எல்லோருடைய வீட்டிற்கும் செல்வது, உரையாடுவது, உணவு உண்ணக் கொடுப்பது என்று நீ கிராமத்தில் நடந்ததால் நாங்களும் அப்படியே வாழ்கிறோம். உன்னை ஆத்தா என்றும், ஆச்சி என்றும், அக்கா என்றும் அழைப்பவருக்கு நீ அன்புடன் கொடுக்கல் வாங்கல் செய்வது இன்று என் கண்களில் நீர் சுரக்கிறது. அவர்களின் வாழ்த்தால் 93 வயது வரை வாழ்ந்தாயே? பேரன் பேத்திகளுக்கும் திருமணம் நடத்தி வைத்தாய் அவர்களின் பிள்ளைகள் உன்னைப் பூட்டி ஆச்சி என்று அன்போடு அழைப்பார்கள். 
நான்கு தலைமுறையைக் கண்டவள்: என் மகன் அறிவாளனைப் பள்ளி பருவம் வரை நீ வளர்த்தாய், அவன் சிறந்த இயற்பியல் ஆசிரியராக ஆளானான். அவனுக்கு உன் மீது பாசம் மிகுதி. 
சண்டை போடுபவள் இல்லை: நீ யாரிடமும் சண்டை போட்டவளில்லை. அப்பாவிடம் அன்பாகப் பேசுவாய். உன்னை அப்பா "கோமீ கோமீ' (கோமதி) என்று அழைப்பார். "அம்மாவைக் கடைசிவரை நீ பார்த்துக்கோம்மா'' என்று அப்பா என்னிடம் சொன்னார்கள். கிராமத்துப் பெண்கள் மகளின் கணவனாகிய மருமகன் எதிர் நின்று பேசுவது இல்லை. நீயும் என் கணவரைப் பார்த்துப் பேசியதே இல்லை. 
மந்திரி: அம்மா எல்லோருக்கும் நல்ல ஆலோசனை வழங்கும் மதி மந்திரி. உன் அன்பு ஆலமர நிழலில் சேர்ந்து அடைக்கலமான பறவைகள் பல. மருமகள் நால்வருக்கும் உன்னைப் பிடிக்கும். நீ நடத்திய கூட்டு வாழ்க்கை அத்தகைய ஒன்றிப்பு உடையது. பேரன் பேத்திகள் உன்னை காணாமால் இருப்பதில்லை.
உன் தாயின் பெயராகிய தாயம்மாளின் பெயரையே எனக்கும் வைத்து என்னைத் தாயாக எண்ணி அன்பு செலுத்தினாய் அடுத்த பிறவியில் நான் உன் தாய்: அடுத்த பிறவி என்பது உண்டு என்றால் நான் உனக்குத் தாயாகித் தாங்க வேண்டும். எந்தன் சேயாக நீ பிறக்க வேண்டும். நீ எனக்கு செய்ததெல்லாம் நான் உனக்கு செய்யக் கடவேன் அன்னையே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com