பெண்கள் முதலுதவி பயிற்சி பெற வேண்டும்!- கலா பாலசுந்தரம்
By DIN | Published On : 29th November 2018 10:23 AM | Last Updated : 29th November 2018 10:23 AM | அ+அ அ- |

சாலை பயணம் என்பது இன்றைய சூழலில் பரபரப்பான பயணமாகவும், ஆபத்து நிறைந்ததாகவுமே இருக்கிறது. மனித உயிர்களை பலி வாங்குவதில் முதல் இடம் வகிப்பது பெரும்பாலும் சாலை விபத்துக்கள்தான். உலக அளவில் 30 விநாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் இறக்கிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் போது பலரும் அனுதாபம் கொள்கிறார்களே தவிர உதவ முன்வருவதில்லை. ஆனால் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கான முதலுதவி சிகிச்சை அளிப்பதையே முதன்மை தொழிலாக கொண்டிருக்கிறார் சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், அலர்ட் அமைப்பின் நிறுவனருமான கலா பாலசுந்தரம். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"நான் பழைய மகாபலிபுரம் சாலை வழியாகத்தான் தினமும் வேலைக்குச் செல்வேன். அந்த சாலையில் எத்தனையோ விபத்துகளை பார்த்திருக்கிறேன். பெரும்பாலான உயிர்கள் போதுமான முதலுதவி கிடைக்காமலே மரணத்தை தழுவுகின்றன. ஒவ்வொரு விபத்திற்குப்பின் நடக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணம் விரைவாக எப்படி செயல்பட வேண்டும், முதலுதவி எப்படி செய்யவேண்டும், யாரை முதலில் அழைக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததே, முக்கிய காரணம். எனவே, முதலுதவிப் பயிற்சியை நான் முதலில் கற்றுக்கொண்டேன். இதன் மூலம், மிக நுட்பமான சில விஷயங்களை செய்தால் பல உயிர்களை யார் வேண்டுமானாலும் காப்பாற்ற முடியும் என்பதை அறிந்தேன். இதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் எங்கள் "அலர்ட்' அமைப்பு.
கடந்த 12 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு, தொழிற்சாலை என ஒவ்வோர் இடத்திலும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறேன். கடந்த 2007-ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமைச் சந்தித்தேன். அப்போது அவர் "ஒவ்வோர் வீட்டிலும் ஒருவராவது முதலுதவிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்' என்ற இலக்கை தந்தார். அந்த இலக்குத்தான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. என்னுடன் சேர்த்து பல தன்னார்வலர்கள் தங்களது வேலை நேரம் போக மற்ற நேரத்தில் இச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்காக சென்னை நீலாங்கரையில் முதலுதவிக்கான பயிற்சிக் கூடத்தை தொடங்கினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்களுடன் சேர்ந்து முதலுதவி விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கி வருவதுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் சென்று முதலுதவி குறித்த விழிப்புணர்வு வழங்கி வருகிறோம். பல்வேறு கிராமங்களுக்கும் சென்று முதலுதவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அந்தவகையில் இதுவரையில் எழுபதாயிரத்திற்கும் மேலானோருக்கு இப்பயிற்சியை அளித்துள்ளோம்.
விபத்துகள் என்பது சாலையில் மட்டுமல்ல வீடுகளிலும் நிகழ்கின்றன. உதாரணமாக, வீட்டில் யாராவது திடீர்னு மயங்கி விழுந்தாலும், குழந்தை பொருட்களை விழுங்கி விடுதல், தீக்காயங்கள், ஹார்ட் அட்டாக் , பாம்பு கடி , நாய்க் கடி அனைத்துமே எமர்ஜென்ஸிதான். எனவே முக்கியமாக பெண்களுக்கு முதலுதவி முறைகள் தெரிய வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டே பல மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றிற்குச் சென்று இப்பயிற்சி அளித்து வருகிறோம்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் உலக முதலுதவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பல இடங்களில் முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து வீதி நாடகம், வில்லுப்பாட்டு, சைக்கிள் பயணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கடந்த இரு வருடங்களாக முதலுதவி செய்து பல உயிர்களை காப்பாற்றியவர்களை கெüரவிக்கும் வகையில் அவர்களின் மனிதத்துவத்தை பாராட்டி அலர்ட் பீயிங் (ALERT Being Award) விருதுகளை வழங்கி வருகிறோம்.
முதலுதவியின் தேவையை குறித்தும், அனைவரும் முதலுதவியைப் பற்றித் தெரிந்து இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அலர்ட்டத்தான் (ALERTATHON) என்ற விழிப்புணர்வு மாரத்தானை "உயிர் காக்க ஓர் ஓட்டம்' என்ற பெயரில் நடத்தி வருகிறோம். இந்த மாரத்தானில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், பணி செல்லும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதேபோன்று, முதலுதவிக்காக அவசர சேவை செய்யும் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை "அலர்ட் வாய்ஸ்' எனும் பெயரில் உருவாக்கியுள்ளோம். "அலர்ட் வாய்ஸ்' என்ற கைபேசிச் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த அவசரச் சேவை குழுவில் உயிர்களைக் காப்பாற்ற உறுதியளித்த தன்னார்வலர்களே உள்ளனர். இவர்கள் ஏதேனும் விபத்தில் உள்ளவர்களை கண்டால் உடனடியாக களத்தில் இறங்கி முதலுதவி செய்வார்கள்.
கல்லூரியிலோ, பணிபுரியும் அலுவலகத்திலோ, அல்லது வேறு அமைப்பிலோ குறைந்தபட்சம் 30 நபர்களை ஒன்று சேர்க்க முடிந்தால் அந்த இடத்திற்கே சென்று இப்பயிற்சியை அளிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்கிறார் கலா பாலசுந்தரம் .
- ஸ்ரீதேவிகுமரேசன்