கடிதம் செய்த மாற்றம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியான ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரியும், தந்தையான ஜேம்ஸýம் பெருமைக் கொள்கின்றனர். பெற்றோர் பெருமைப்படும்படி
கடிதம் செய்த மாற்றம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியான ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரியும், தந்தையான ஜேம்ஸýம் பெருமைக் கொள்கின்றனர். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா?
"கெல்லோக்' நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் அவளுடைய தினசரி காலை உணவாகும். அவளுடைய தாயார் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவளுக்கு காலை உணவினை தந்தைதான் தயாரிப்பது வழக்கம். காலை உணவினை உட்கொள்ளும்போது அந்த உணவுப் பொட்டலத்தின் அட்டையில் இருந்த "குழந்தைகளால் விரும்பப்படுவது, அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்ற வாசகங்கள் அவளை அதிகம் பாதித்துவிட்டன. 
உடனே தன் பெற்றோரிடம் அவள் இவ்வாறாக "அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பது சரியல்ல என்றும், அதனைப் பற்றி அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவளுடைய விருப்பத்திற்கு இசைந்த பெற்றோர், அந்நிறுவனத்திற்கு அவள் கடிதம் எழுதுவதற்கு உரிய போஸ்டல் ஸ்டாம்பைத் தருகின்றனர். முகவரியை இணைய தளத்திலிருந்து அவள் பெற உதவினர்.
அவள் அந்நிறுவனத்திற்கு பின் வருமாறு கடிதம் எழுதினாள், "என் அப்பா எனக்காக அதிகம் உழைக்கிறார். அம்மா வெளியில் வேலை பார்க்கிறார். ஆதலால் காலை உணவு தயாரிப்பின்போது அவர் இருப்பதில்லை. ஆகவே அவ்வாசகத்தில் உள்ள அம்மாக்கள் என்பதை பெற்றோர் என்றோ பாதுகாவலர் என்றோ மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு அம்மா இருக்க மாட்டார்கள். இதைப்படிக்கும்போது அவர்கள் சங்கடப்படுவார்கள்' என்று எழுதி அனுப்பியிருந்தார்.
விடுமுறைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பியபோது ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது ஹானாவுக்கு. அந்நிறுவனம் அவளுக்கு மறுமொழி அனுப்பியிருந்தது.
எங்களுடைய கோகோ பாப்ஸ் உணவுப்பொட்டலத்தில் எழுதியிருந்த, அம்மாக்களால் ஏற்கப்பட்டது என்பதைப் பற்றிய உன் சிந்தனையை எங்களுடன் பகிர்ந்திருந்தாய். நாங்கள் அண்மையில் எங்களின் ஆய்வினை புதுப்பித்துள்ளோம். அதன்படி இனி வரவுள்ள புதிய வடிவமைப்பில் "அம்மாக்களாலும் அப்பாக்களாலும் ஏற்பளிக்கப்பட்டது' என்பதைச் சேர்க்கவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுதொடர்பாக ஏற்பட்ட சங்கடங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம். எங்கள் முடிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உன் கடிதம் பெரிதும் உதவியது. நன்றி!
கடிதத்தைப் படித்த அவளுடைய தாயார், "என் மகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இதுதொடர்பாக அந்நிறுவனம் அக்கறையோடு மறுமொழி கூறியது எனக்கு மகிழ்வைத் தருகிறது' என்றார்.
"நான் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலான நேரத்தில் பணியின் காரணமாக வெளியில் இருக்கவேண்டிய சூழல். என் கணவர்தான் அவளுக்கு காலை உணவினை ஏற்பாடு செய்வார். "அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பதில் அப்பாக்கள், தாத்தா பாட்டிகள், பாதுகாவலர்கள் என்பதும் இருக்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். அவ்வாறு நீ விரும்பினால் அந்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அதனை மாற்றும்படி கேட்டுக்கொள்'' என்றேன். கடிதம் எழுதி அனுப்ப உரிய ஸ்டாம்பையும் தந்தேன். மறுமொழி கிடைத்ததும் அவள் அதிக மகிழ்ச்சியடைந்தாள்'' என்றார்.
நிறுவனத்திடமிருந்து பதில் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கவேண்டுமே, அவ்வளவு மகிழ்ச்சி. அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டாள். ஆனால் அவள் முகத்தில் பெரிய சிரிப்பை நாங்கள் கண்டோம். அது கெல்லோக் போன்ற பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நாம் நம் கருத்தினை வெளிப்படுத்தும்போது அதற்கான விளைவை உணரலாம் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நாம் நம் பிள்ளைகளை அந்த அளவிற்குப் பயிற்றுவிக்கவேண்டும்.
ஒரு சிறிய குரலால் உலகை மாற்றிவிட முடியும் என்பது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறிய வெளிப்பாடு பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. 
- பா.ஜம்புலிங்கம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com